நியா: 4: 17 “சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.”
வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய 900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன!
இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், ” தலைப்புச் செய்திகள்… சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!” என்ற பரபரப்பான செய்தி வெளியாகி மக்களை திடுக்கிட வைத்தது.
பாராக்கின் சேனைகளுக்கும், சிசெராவின் சேனைகளுக்கும் இடையே நடந்த கடும் யுத்தத்தின் மத்தியில், சிசெரா கால்நடையாகவே தப்பித்து தலைமறைவாகி விட்டான்.
துரதிருஷ்டவசமாக இந்த வசனம் நமக்கு சிசெராவைப் பற்றி சற்று அதிகமாகவே கற்பிக்கிறது! அவன் தைரியசாலி! புத்திசாலி! தப்பி ஓட ரதம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, தன் கால்களை தன் குதிரையின் கால்களைப் போல் உபயோகித்து தப்பிக்க அவனுக்கு தெரியும்!
சரி தப்பித்து எங்கே ஓட முடியும்? இஸ்ரவேலில் யார் கண்களில் அவன் பட்டாலும் அவன் தலை உருண்டு விடும்!
நியா: 4: 17 கூறுகிறது,” சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.” அவன் சமாதானத்தின் கூடாரத்தை நோக்கி ஓடினான்.
எபிரேய மொழியில், இந்த சமாதானம் என்ற வார்த்தைக்கு, போரற்ற நிலை என்று மாத்திரம் அர்த்தம் இல்லை, இருதரத்தாருக்குள்ளான நட்பு , செழிப்பு போன்ற அர்த்தமும் உண்டு.
புத்திசாலிதான்! சரியான இடத்தை நோக்கிதான் ஓடியிருக்கிறான்! கேனியனான ஏபேரின் வீட்டுக்குள் நுழையும்போது தனக்கு அங்கு ஒரு நண்பனைப் போல் பாதுகாப்பு கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும்!
ஒருநிமிடம்! நம் வாழ்க்கையில் சிசெராவைப் போன்ற பாவங்கள், சிற்றின்பங்கள் ஒழிந்து விட்டன, சிசெராவையும் அவன் ரதங்களையும், சேனைகளையும் முற்றிலும் ஒழித்து விட்டேன், இனி எனக்கு பயமில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று சிசெரா தலை தூக்குகிறான்.
இந்த முறை ரதத்தில் ஏறி ஆடம்பரமாய் நம் வாழ்க்கைக்குள் வரவில்லை! நாம் எதிர்பார்க்காத வேளையில் பின்வாசல் வழியாக நுழைகிறான். சிசெரா! அந்த வஞ்சிக்கிற சர்ப்பம் நாம் எதிர்பாராத இடத்தில் ஒளிந்திருந்து விட்டு, எதிர்பாராத வேளையில் நமக்குள் தலை தூக்குகிறான்.
ஏபேரின் வீட்டில் அவனுக்கு சமாதானம் உண்டு என்று அறிந்திருந்தான்! சமாதானம் என்ற வார்த்தைக்கு நான் கண்ட அர்த்தம் இன்னொன்றும் உண்டு! நட்பும், செழிப்பும் தான்! ஆம்! நம்முடைய வாழ்க்கை என்னும் கூடாரத்தில் சிசெரா என்னும் வஞ்சனைக் காரனுக்கு தகாத நட்பு, அல்லது செழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை என்ற இடத்தை ஒதுக்கி அவன் ஒளிந்து கொள்ள அனுமதித்திருக்கிறோமா?நான் செய்வது தவறு இல்லை! ஒரு சிற்றின்பம் தானே, பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று எண்ணும் காரியம் உன்னையே அழித்துவிடும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நாம் நம்மை இந்த வஞ்சனைக்காரனிடமிருந்து காத்துக் கொள்ளும்படியாய் ” நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” என்றார்.( மத்:26:41) சோதனை என்பது எல்லா வயதினருக்கும் வரக்கூடியது! உங்களைவிட அதிகமாய் சாத்தான் உங்கள் பலவீனத்தை அறிவான்!
சமீப காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த, வயதான, ஒரு பெரிய ஊழியக்காரர், வேதத்தை நம்மைவிட அதிகமாக அறிந்தவர், பல லட்சக்கணக்கான மக்களுக்கு போதித்தவர், நோய்வாய்ப்பட்டு மரித்த பின்னர் அவருடைய வாழ்வில் ஒளிந்து கொண்டிருந்த பாவங்கள் வெளியே தெரிய வந்ததும், அவருடைய மொபைல் போனில் ஒளித்து வைத்திருந்த கேவலமான பாலியல் படங்கள் அதற்கு சாட்சிகளானதும் உலகையே அதிர வைத்த உண்மை!
இன்று நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி இவை நம்மை ஸ்மார்ட்டாக பாவம் செய்ய வைத்து விடுகின்றன!
சிசெராவும், அவன் சேனைகளும், ரதங்களும் ஒழிந்துவிட்டன என்று நினைத்த உன் வாழ்க்கையில் சிசெரா சமாதானத்துடன், நட்புடன் , செழிப்புடன் ஒளிந்து கொண்டிருக்கிறானா? ஜாக்கிரதை!
ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது (மத்: 26:41) சாத்தான் என்னும் வஞ்சனைக்காரன் ரதம் பூட்டியல்ல, கால்நடையாகவே உன்னிடம் வருவான்! பெரிய ஆடம்பரத்தோடு அல்ல சிற்றின்பத்தோடு வருவான்! உன் கையில் வைத்திருக்கும் மொபைல் போன் மூலமாகக்கூட வருவான்! ஜாக்கிரதை! இடம் கொடாதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்