கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1208 உலகத்தால் அழியாத பங்கு!

நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

இன்றைக்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சுகங்களை விட்டு செல்ல ஆசைப்படுகிறார்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி என் பிள்ளைகள் சுகமாக வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் கனவும். சொத்துப் பத்திரங்களையும், சுகபோக வாழ்க்கையையும், பொன் ஆபரணங்களையும், உலகப்பிரகாரமான ஞானத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும் நம்மில் பலர் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை பற்றி எண்ணுவதே இல்லை!

சங்:16: 6 தாவீது ராஜா தன்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” என்று கூறுவதைப் பார்க்கிறோம். தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக்கியது தன்னுடைய குடும்பம் என்றும் , தனக்கு தலைமுறை தலைமுறையாக பரிசாக கொடுத்த தேவனுடைய பிரசன்னமும், தேவனுடைய பெலனும் தான் என்பதை  உணர்ந்தான். அதுவே எல்லாவற்றையும் விட மேலான , சிறப்பான பரிசு என்பதும் அவனுக்குத் தெரியும்.தேவனாகிய கர்த்தரின் அன்பு ஒருநாளும் குறைவுபடாது என்றும், அவருடைய மன்னிப்புக்கு அளவேயில்லை என்றும்,அவர் சர்வ வல்லவர் என்பதையும் அவன் வாழ்க்கை முழுவதும் அறிந்திருந்தான்.இந்த மகா பெரிய பங்கை, அவன் குடும்பம் அவனுக்குக் கொடுத்த சுதந்தரத்தை எந்த பங்குச் சந்தை சரிவும் அவனை விட்டு எடுக்கவே முடியாது.

இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் சிம்சோனுடைய பிறப்பைப் பற்றிப் பார்க்கிறோம். அவன் பிறந்த குடும்பமும் அவனுக்கு நல்ல தேவனுடையப் பங்கை சுதந்தரமாகக் கொடுத்த குடும்பம் தான் என்றுப் பார்க்கிறோம்.

அவனுடைய தாய், மனோவாவின் மனைவி அவனைக் கர்ப்பந்தரித்தவுடனே நசரேய விரதத்தை மேற்கொள்ளுகிறாள். தீட்டான எதுவும் தன் பிள்ளைக்கு போய் சேராதபடி தன்னைக் காத்துக்கொண்டாள். மனோவாவும் தேவனுக்கு பயந்த மனிதன் தான். குழந்தை பெறமுடியாத பெண்களைத் தள்ளி வைத்து விட்டு வேறு பெண்களை குழந்தைக்காக மணந்த ஆண்கள் வாழ்ந்த அந்த சமுதாயத்தில், மலடியான தன் மனைவியுடன் வாழ்ந்த உத்தம புருஷன் அவன்! பிள்ளை பிறக்குமுன்னரே அந்தப் பிள்ளையை நான் எப்படி வளர்க்க வேண்டும் என்று கற்றுத்தாரும் என்று தேவதூதனிடம் கேட்டவன்.

ஆம்! இந்த தம்பதியினரைப் போலக் கர்த்தருக்கு பயந்த பெற்றோர் நமக்கு இருப்பது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற பெரிய ஆசீர்வாதம். நாம் கர்த்தருடைய பேரன்பையும், அவருடைய பிரசன்னத்தையும், அவருடைய பெலத்தையும் நம் பிள்ளைகளுக்கு சுதந்தரமாகக் கொடுப்பது அதைவிடப் பெரிய ஆசீர்வாதம்.

இன்று நாம் எந்த பங்கை நம் பிள்ளைகளுக்கு விட்டு செல்லப் பாடுபடுகிறோம்? உலகப்பிரகாரமான் சொத்தையா? அல்லது தேவனின் பிரசன்னத்தையா? உலக சம்பத்து ஒருநாள் அழிந்து போகும் ஆனால் நாம் விட்டு செல்லும் மேலான பங்கு கிறிஸ்துவுக்குள்ளான எல்லா ஐஸ்வரியத்தையும் நம் பிள்ளைகளுக்குக் கொடுக்கும்.

உலகப்பிரகாரமான பேரும், புகழும், சம்பத்தும் நம் தலைமுறையினருக்கு பரிசாக அளிக்க விரும்புகிற நாம், நம் தலைமுறையினர் திருச்சபையின் தூண்களாக, சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்கிறவர்களாக, ஜெப வீரர்களாக வாழ வேண்டும் என்று நாம் விரும்புகிறோமா? என்ன ஆசீர்வாதத்தை நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டு செல்கிறோம்?

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment