கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1210 உன்னை அழைக்கும் சத்தம்!

நியாதிபதிகள்:13 : 25  “அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.”

இன்றைய தியானத்தை வாசிக்கத் தொடருமுன்னர் ஒருநிமிடம் நாமும் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம்.

அங்கு நம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தர் எப்பொழுதும் நம்முடைய சரீர வாழ்க்கையை  மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்க காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா?

அப்படி நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் நம் பகுதியில் குழந்தையே இல்லாமல் வாழ்ந்த ஒரு வயதான தம்பதி, தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதாகவும், அந்தக் குழந்தை தங்களை அடக்கியாளும் பெலிஸ்தரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பான் என்று கர்த்தருடைய தூதனானவர் கூறியதாகவும் சொன்னால் நமக்கு எப்படியிருக்கும்? என்னென்ன எண்ணங்கள் நம் மனதில் எழும்? எத்தனை கிசுகிசுப்புகள் அதைப் பற்றி பேசப்படும்?

அப்படியே அந்தக்குழந்தை பிறந்து விட்டால் அந்தக் குழந்தையை நாம் எப்படி பார்ப்போம்? அந்தக் குழந்தை வளர வளர அவனிடம் என்ன எதிர்பார்ப்பு  நமக்கு இருக்கும்?  நிச்சயமாக அவன் எப்பொழுது செயல்பட ஆரம்பிப்பான் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்போம் அல்லவா? நம்மில் ஒருசிலர் அவனைத் தட்டி, தூண்டிகூட விட ஆரம்பிப்போம் என்று நினைக்கிறேன்.

ஆனால் யார் அவனை செயல்பட செய்கிறார் பாருங்கள்! மனிதர்கள் அல்ல! கர்த்தர் தாமே அவனைத்தட்டி எழுப்பி தன் சேவையை செய்யும்படி ஏவுகிறார்!

இன்றைய வேதாகமப்பகுதி நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பைப்பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. தேவன் நம்மைத் தட்டி எழுப்பி தம்முடைய ஊழியத்தில் செயல்பட செய்யும் அழைப்புதான்  அது. சிம்சோனை செயல்பட வைத்த தேவனாகிய கர்த்தரின் அழைப்பிலிருந்து இன்று நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.

முதலாவதாக கர்த்தருடைய அழைப்பு நமக்கு , நாம் சாதாரணமாக எங்கு எப்படி வாழ்கிறோமோ அங்கேயே வரும்.

கர்த்தர் சிம்சோனை அழைத்தபோது அவன் சாதாரணமாக தினசரி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தான். நாம் தேவனுடைய அழைப்புக்கு இணங்க  நம் பெயரோடு கூட பல பட்டங்கள் கூட்டவேண்டுமென்று நினைக்கிறோம். நாம் மேல்நாட்டில் போய் படித்துவிட்டு வந்தால் தான் கர்த்தருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறோம். ஆனால் சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் சாதாரணமாக தினசரி வாழ்க்கையை மிகக் கடினமான சூழ்நிலையில் நடத்திக்கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். அவனுடைய தினசரி வாழ்க்கையின் மத்தியில் கர்த்தர் அடிவைத்து நீ எனக்கு வேண்டும், உன் சேவை எனக்கு வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

இரண்டாவதாக கர்த்தர் தாமே அவருடைய சேவைக்கு நம்மை ஏவத்துவங்குவார், அது மனிதர்களால் வரும் அழைப்பு அல்ல.

கர்த்தர் நம்மை மாயாஜாலமாக அழைப்பதில்லை.நம்முடைய சாதாரண வாழ்க்கையின் மத்தியில் சாதாரணமாகவே அழைக்கிறார். நம்முடைய தினசரி வேலையை நாம் செய்து கொண்டிருக்கும்போதே கர்த்தர் நம் இதயத்துடிப்பைத் தட்டி எழுப்புகிறார். சிம்சோன் தாணின் பாளயத்தில் இருந்தபோது கர்த்தர் அவனை ஏவினார், கர்த்தரின் அழைப்பை ஏற்க, அவருடைய சித்தத்தை செய்து முடிக்க அவன் இதயம் துடிக்க ஆரம்பித்தது.

என்ன அருமையான பாடத்தை நாம் இங்கு கற்றுக்கொள்கிறோம்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை எங்கும், எப்பொழுதும் தம் சேவைக்காக அழைக்க முடியும்!

கிறிஸ்தவர்களுக்கு விரோதியான சவுல் என்னும் ஒரு வாலிபன், கிறிஸ்தவர்களை கொலை பண்ண வெறித்தனமாக தமஸ்குவுக்கு செல்லும் வழியில், கர்த்தர் தம்முடைய சேவை செய்ய அவனை தட்டி ஏவினார். அதன்பின்பு அவன் பழைய சவுலாக ஒருநாளும் இல்லை. அவன் வாழ்க்கை முற்றும் மாறியது. அவனுடைய அடையாளமே முற்றிலும் மாறி அவன் அப்போஸ்தலனாகிய பவுலாக மாறினான்.

யாருக்குத் தெரியும், இன்று இப்பொழுது உன்னுடைய  சாதாரணக் குடும்ப பணிகளின் மத்தியில் உன்னை கர்த்தர் தட்டி தம்முடைய காரியமாக வரும்படி ஏவலாம்! அவர் உன்னை ஏவி, உன் இதயத்தைத் துடிக்கப் பண்ணுவாரானால் அவரே உன்னை தம்முடைய சேவையில் அற்புதமாக வழி நடத்துவார்.

என்றாவது கர்த்தருடைய அழைப்பை உணர்ந்திருக்கிறாயா? கர்த்தருடைய சேவை செய்ய உன் இதயம் துடிக்கிறதா? உடனே கீழ்ப்படி!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment