கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1211 கரை புரண்டு மாசு படும் நீரோடையைப் போல!

நியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,”

நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் துங்கபத்திரா ஆறு ஓடியது. கடல் போல பரந்திருந்த அந்த ஆற்றின் தண்ணீர் எப்பொழுதும் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கும்.  மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக வெள்ளப் பெருக்குடன்  ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்து விட்டது. ஆற்றில் ஓடியவரை சுத்தமாகத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்த நீர், ஊருக்குள் புகுந்த போது வழியில் உள்ள எல்லா அசுத்தங்களையும்  வாரிக்கொண்டு நாற்றத்தோடு வீடுகளுக்குள் புகுந்து அழிவுபடுத்தியது.

இன்றைக்கு நாம் படிக்கும் சிம்சோனின் கதை , எனக்கு சுத்தமாக இருக்கவேண்டிய நீரோடை  கரை புரண்டதால் அசுத்த  நீராக மாறியதைத்தான் நினைவுபடுத்தியது.

தேவனுடைய சேவையை செய்யும்படியாக சிம்சோன் கர்த்தரால் ஏவப்பட்டான் என்று  நாம் பார்த்தோம். சிம்சோன் பிறக்குமுன்னரே அவன் சுத்தமான நீரோடையாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்பினார்.

ஆனால் இன்றைய வேதாகமப்பகுதி ,சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டான் என்ற  ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. ஒரு பெண்ணை அவன் பார்த்தது தவறா? நாம் யாரும் பெண்ணையோ அல்லது ஆணையோ நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் வாஞ்சையோடு பார்த்ததில்லையா? இது இயற்கை தானே?

சிம்சோன் தன்னுடைய எதிரிகளின் கோட்டையாகிய திம்னாத்துக்குள் நுழைந்தது தவறேயில்லை! அவன் இஸ்ரவேலுக்கு விடுதலையைப் பெற அதைத்தான் செய்யவேண்டுமென்று கர்த்தரும் விரும்பினார். ஆனால், அவன் திம்னாத்தில் போய் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாமல் தன் கண்களை திசைத் திருப்பி, தன் மாம்சத்தின் இச்சையின் படி நடந்தான். அவன் அந்தப் பெண்ணைக் கண்டவுடன், தன் கண்களை திருப்பி தேவனாகிய கர்த்தரை நோக்காமல், தன் கண்கள் அவளையே நோக்கும்படி தன் நோக்கத்தைத் திசை திருப்பியதுதான் தவறு!

ஏதேன் தோட்டத்தில் ஏவாள் தன் கண்களாள் கண்டவற்றால் வஞ்சிக்கபட்டாள்,  சர்ப்பம் என்னை வஞ்சித்தது என்று கர்த்தரிடம் குறை கூறினாள். வஞ்சனை என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் ‘ மயங்க வைக்கும் ‘ என்றும் அர்த்தம் உண்டு. பாவம் இந்த உலகத்தில் புகுந்த நாள் முதல், சாத்தான் என்கிற சர்ப்பம் நம்மை எதையாவது காட்டி மயங்க வைத்து நாம் தேவனுடைய சித்தத்தை செய்வதிலிருந்து திசை திருப்ப முயற்சி செய்கிறான். நாம் மயங்கி அவனுடைய வஞ்சகம் என்னும் வலையில் விழுந்து அழிவை நோக்கி விரைகிறோம்.

சிம்சோன் திம்னாவுக்கு சென்றது தவறேயில்லை ஆனால் அவன் அங்கே ஒருபெண்ணை கண்டான் என்று நமக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றுகின்ற ஒரு காரியம் அவன் வாழ்க்கையின் நோக்கத்தையே திசை திருப்பிவிட்டதுதான் தவறு!

இதை வாசிக்கும்போது என் வாழ்க்கையில் குறுக்கிட்டு என்னை திசைதிருப்ப செய்யும் காரியங்களை நான் சற்று சிந்தித்துப் பார்த்தேன். நான் கண்ணால் காணும் யாவும் தவறு அல்ல! ஆனால் நான் காண்பவை என்னை தேவனுடைய சித்தத்திலிருந்து திசைமாற செய்யும்போதுதான் அவை தவறு ஆகின்றன.

இன்று உன் வாழ்க்கையில் குறுக்கிட்டு உன்னை திசை மாற வைக்கும் சிற்றின்பங்கள் உண்டா?

ஒரு சின்ன கொசு போல, ஒரு சிறிய ஈ போல நம் வாழ்க்கையில் நுழையும் சிற்றின்பங்கள் நம் கவனத்தை மாற்றி நம்மை திசை திருப்பிவிடும். ஜாக்கிரதை!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment