இதழ்:1328 நாம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் நோக்கம்!
லூக்கா 2: 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
கிறிஸ்துமஸ் வாரம் இது! உண்மையில் நாம் ஒவ்வொருவரும் இந்த நன்னாளை இந்த மாதம் முழுவதுமே நினைவு கூறுகிறோம் அல்லவா? மரியாளிடம் தேவ தூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறியது, மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லெகேம் சென்றது, தேவசேனை மேய்ப்பர்களிடம் இயேசுவின் பிறப்பின் அடையாளத்தைக் கூறியது, வான சாஸ்திரிகள் மேசியாவைத் தேடி வந்தது இவை எல்லாவற்றையுமே நாம் இந்த மாதம் நம்முடைய மனக்கண்களால் பலமுறை பார்த்துவிட்டிருப்போம் என்று நினைக்கிறேன்.
இன்று அநேகர் கிறிஸ்மஸை புறக்கணிக்கிறார்கள்! இயேசு டிசம்பர் மாதம் பிறக்கவில்லை என்பதே அவர்கள் வாதம்.உண்மையில் சொல்லப்போனால் அவரது பிறப்பு செப்டெம்பரில் இருந்திருக்கும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஏன் செப்டெம்பர் மாதம்?
அந்த சமயத்தில் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று லூக்கா 2ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இஸ்ரவேல் நாட்டில் நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை குளிர் அதிகமாக இருக்கும். நாங்கள் முதல் முறை இஸ்ரவேலுக்கு சென்ற பிப்ரவரி மாதத்தில் அங்கு இராத்திரி வேளையில் குளிர் மிகவும் கடுமையாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் கடும் குளிர் நிலவும் என்று கேள்விப்பட்டேன். அந்தக் குளிரில் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்க மாட்டார்கள் என்பதே பலரின் கருத்து.
இரண்டாவது முறை இஸ்ரவேல் சென்றபோது பெத்லெகேமுக்கு வெளியே உள்ள Shepherd’s Field அல்லது மேய்ப்பரின் வயல்வெளி என்ற இடத்துக்கு சென்றோம். அது ஒருகாலத்தில் தாவீதின் தாத்தாவான போவாஸுக்கு சொந்தமான வயல்வெளி என்று சொன்னார்கள்! இந்தமுறை அக்டோபர் மாதம் சென்றிருந்தோம்! பகலில் நல்ல வெயிலாகவும், இரவில் மிதமாகவும் இருந்தது. மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி மந்தையைக் காக்க சரியான சூழல் அதுவே!
அது மட்டுமல்ல! குடிமதிப்பு எழுதவே யோசேப்பும் மரியாளும் பெத்லெகேமுக்கு சென்றனர். நாசரேத்திலிருந்து பெத்லெகேம் 80 மைல் தூரம் உள்ளது. டிசம்பர் போன்ற கடுங்குளிர் காலத்தில், போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலங்களில் குடிமதிப்பு எழுதும் கட்டளை பிறப்பிக்க மாட்டார்கள் என்றும் கருதுகின்றனர்!
யோவான் ஸ்நானகனின் பிறப்பு பஸ்கா பண்டிகையின் காலத்தில் என்று கணக்கிடப்படுவதால் இயேசுவின் பிறப்பு அதன் பின்னர் ஒரு 6 மாதங்கள் கழித்து வரும் கூடாரப்பண்டிகையின் நாட்களில் இருந்திருக்கலாம் ஏனெனில் எலிசபெத் கர்ப்பவதியாகி ஆறு மாதங்கள் ஆகியபோது தேவ தூதன் மரியாளிடத்தில் சென்று இயேசுவின் பிறப்பைப் பற்றி சொன்னதாக லூக்கா முதலாம் அதிகாரம் நமக்கு கூறுகிறது. அதுமட்டுமல்ல கூடாரப்பண்டிகையைக் கொண்டாட அநேக யூதர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்! அப்படிப்பட்ட வேளையே குடிமதிப்பு எழுத சரியான வேளையாக இருந்திருக்கும். அதுவே யோசேப்பு, மரியாளுக்கு சத்திரத்தில் இடம் கிடைக்காததின் காரணத்தையும் விளக்குகிறது!
கிறிஸ்துமஸை நாம் கொண்டாடலாமா?
இப்படியாக இயேசுவின் பிறப்பு செப்டம்பர் மாதம் இருந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது! அப்படியானால் அவர் பரிசுத்த ஆவியானவரால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்த காலம் டிசம்பராகத்தானே இருந்திருக்கும்!!!!! அவருடைய பிறப்பை நினைவுகூற இதைவிட நல்ல மாதம் எதுவாக இருக்க முடியும்?
சில விக்கிரக வழிபாட்டு பண்டிகைகளும், இந்த இரண்டாயிரம் வருடங்களில் இந்தப் பண்டிகையோடு கலந்த பல நாட்டுக் கலாச்சாரங்களும் சிலரை இதைக் கொண்டாடக்கூடாது என்று போதிக்கச் செய்கிறது!
ஆனால் நாம் கிறிஸ்மஸைக் கொண்டாடும் நோக்கமே முக்கியம்! இது நம்முடைய இரட்சகர் மனித அவதாரமாக உதித்ததை நினைவுகூறும் நாள்! இந்த ஒரு நாள் மட்டுமே உலகம் முழுவதும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை நினைவு கூறுவதை நாம் மறந்துவிடக் கூடாது! இது அவருடைய பிறப்பின் நோக்கத்தை இந்த உலகத்துக்கு பறை சாற்றும் நாள்! அவருடைய அன்பை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாள்! ஏழை எளியவர்க்கு பரிசுகள் அளிக்கும் நாள்!
நாமும் அன்று வயல்வெளியில் மந்தையைக் காத்த மேய்ப்பர்கள் போல நம்முடைய மேய்ப்பராகிய இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவோம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்