1 ராஜாக்கள் 1:1 தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியானபோது, வஸ்திரங்களால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
தாவீது ராஜாவின் வாழ்க்கையை பல வாரங்கள் நாம் படித்து விட்டோம். இன்று அவருடைய வாழ்வின் கடைசிப் பகுதியைப் பார்க்கிறோம்.
இன்றைய மருத்துவ மேன்மைகள் இல்லாத அந்த கால கட்டத்தின் வழக்கப்படி ராஜாவிற்கு பணிவிடை செய்யவும், அவனுடைய சரீரத்துக்கு அனல் கொடுக்கவும் சூனேம் ஊராளாகிய அபிஷாகை கொண்டு வந்தார்கள். இது தவறான உறவுக்காக அல்ல என்று வேதம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
நாம் 2 சாமுவேல் 5:4 ல் பார்க்கும்போது, தாவீது ராஜாவாகும்போது முப்பது வயதாயிருந்தான். அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான். அப்படியானால் இப்பொழுது எழுபது வயதுதானே? இதை நாம் முதிர்வயது என்று சொல்வோமா?
இன்று நாம் எழுபது வருடம் அரசாண்ட ராணி எலிசபெத் அம்மையார் சமீபத்தில் மரித்ததை பற்றி அறிந்தோம். ஆனால் தாவீது எழுபது வருடம் அரசாளவில்லை. அவனுடைய வயதே எழுபதுதான்.
தாவீது சவுலால் வேட்டையாடப்பட்ட நாட்களில் அவன் வாழ்ந்த வாழ்க்கையையும், அவன் எதிர்கொண்ட யுத்தங்களையும் பார்க்கும்போது, தாவீதின் சரீரம் சீக்கிரத்தில் தளர்வடைந்ததின் காரணம் நமக்கு நன்கு புரியும். எத்தனை உள் காயங்கள் பாட்டிருந்திருக்கும் அல்லவா?
இது என்னுடைய இன்றைய தியானத்தின் கவனத்தை ஈர்த்தது. தாவீதின் சொகுசான அரண்மனை வாழ்க்கையோ, அவன் சேர்த்திருந்த சொத்துக்களோ, அவனுடைய புகழோ, அவனுடைய மரணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. நம்மிடம் இருக்கும் எந்த வசதியும், பதவியும், புகழும் நமக்கு வரும் நோயைத் தடுக்க முடியாது.
ஏதேனின் பரிபூரண சூழலில் மரணம் என்ற வார்த்தையை அறியாமல் வாழ்ந்த ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் பாவம் செய்து தேவனை விட்டு தூரமாக சென்றபோது, அவர்களுடைய குடும்பத்தில் முதன் முதலில் ஏபேலின் மரணம் என்ற கடும் சோகம் ஏற்பட்டது.
ஒவ்வொரு மரணமும் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் , நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் எப்படி நம்முடைய வாழ்வை வாழ வேண்டும் என்பதே!
இந்த பூமியில் என்னுடைய கடைசி நாளை நான் அறிவேனானால் நான் இன்று எப்படி வாழ்வேன்? என்னென்ன மாற்றங்களை இன்று நான் செய்வேன்? எப்படியெல்லாம் தேவனோடு நெருங்கி , இன்னும் நெருங்கி வாழ முயற்சி செய்வேன்? என்று நான் சற்று நேரம் சிந்திக்க ஆரம்பித்தேன்!
மரணப்படுக்கையில் தாவீதின் வாழ்க்கையும் தன்னை நேசித்த தேவாதி தேவனின் செட்டைகளுக்குள் அடைக்கலமாய் போகும் வேளையை எதிர்பார்த்தே காத்திருந்திருக்கும்.
ஒரு மனிதனாய் அநேகமுறை தவறினாலும் தேவனுக்கேற்ற இருதயமுள்ளவனாய் , தேவனாகிய கர்த்தரை தன்னுடைய பிதாவாகவும், நண்பராகவும் கண்ட தாவீதின் கடைசி தருணம் அவரை முக முகமாய் ஆவலோடு காணத்தானே ஏங்கிக் கொண்டிருந்திருக்கும்!
தேவன் தாமே நம்முடைய நல்ல மாலுமியாக, நாம் இந்த உலகத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நாளையும் அரோடு நெருங்கி வாழ நமக்கு உதவி செய்வாராக!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
