யாக்கோபு 5 :17 ,18 எலியா என்பவன் நம்மை போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருடமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை .மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையை பொழிந்தது, பூமி தன் பலனைத்தந்தது.
கிறிஸ்துவுக்கு பின்னால் 48வது வருடம் கழித்து யாக்கோபு இந்த ஐந்தாவது அதிகாரத்தை எழுதும் பொழுது , அந்தக் காலத்தின் இளம் திருச்சபையாருக்கு , நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து ஒரு அறிவுரை யை கொடுக்க விரும்பினார்.
இந்த வசனங்களில், நம் வாழ்க்கை கடினமாகும் பொழுது ஜெபிக்க வேண்டும் என்று யாக்கோபு கற்றுக் கொடுத்தது மாத்திரம் அல்ல, நாம் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும் என்று, தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றுக் கொண்டிருந்ததை, எலியாவின் உதாரணத்தைக் கொண்டு நமக்கு விளக்குகிறார். இந்த வசனத்தில் அவர் நமக்கு, எலியா நம்மைப் போல சாதாரணமான ஒரு பாடுள்ள மனுஷன்தானே, அவர் ஜெபிக்கவில்லையா, அவர் ஜெபம் கேட்கப்படுமானால் நம் ஜெபமும் கேட்கப்படும் என்று விளக்குகிறார்.
எலியாவை பற்றி விளக்க யாக்கோபு எழுதிய இந்த, ‘பாடுள்ள மனுஷன்’ என்ற கிரேக்க வார்த்தை வேதத்தில் இன்னும் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே இடம்பெற்று இருக்கிறது.
அந்த வார்த்தை அப்போஸ்தலர் 14: 15 இடம்பெறுகிறது. பவுலையும்,பர்னபாவையும், தேவர்கள் மனுஷ ரூபம் எடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று எண்ணி, அவர்களை லீஸ்திராவில் உள்ள மக்கள் வழிபட முயன்றபோது,
மனுஷரே ஏன் இப்படி செய்கிறீர்கள் நாங்களும் உங்களைப் போல பாடுள்ள மனுஷர் தானே என்று பவுல் கூறுவதைப் பார்க்கிறோம்.
இங்கு நமக்கு யாக்கோபு சொல்ல வருகிற உண்மை என்னவென்றால் எலியா ஒரு கடவுள் அல்ல, நம்மைப் போல ஒரு மனிதன் தான், அவரிடம் கடவுளைப்போல விசேஷமான வல்லமை எதுவும் காணப்படவில்லை. ஆனால் எலியா மழை நிற்கும் படியாக ஜெபித்தபோது மழை நின்றது. அவர் மறுபடியும் மழை பெய்யும் படியாக ஜெபித்தபோது மழை பெய்தது.
யாக்கோபு இதன் மூலமாக நமக்கு சொல்வதெல்லாம் ஒரே ஒரு காரியம் தான்! மிகச் சாதாரணமான நாமும் ஜெபித்தால் நம் ஜெபமும் நிச்சயமாக கேட்கப்படும். ஜெபம் கேட்கப்படுவதற்கு நமக்கு எந்த விசேஷித்த வல்லமையும் தேவையில்லை.
யாக்கோபு 5: 16ல் நீதிமான் செய்யும் ஊக்கமான ஜெபம் கேட்கப்படும் என்று எழுதுகிறார். ஊக்கமான ஜெபம் என்றால் அது எப்படி இருக்கும் என்று வேதத்தை ஆராய்ந்து படித்தேன். அது வேறொன்றுமில்லை! அதுதான் நம் எலியாவின் ஜெபம்! ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்த ஜெபம்! பாகலை தெய்வமாக ஆராதித்த ஆகாபும், பாகால் பைத்தியமாய் வாழ்ந்த யெசேபெலும் ஆளுகை செய்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் , எலியாவின் ஊக்கமான ஜெபம் இஸ்ரவேலுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! ஜெபிக்க ஆயத்தமாக இருக்கிற யாரையும் தேவன் உபயோகப்படுத்தி ஆசீர்வாதத்தைக் கொண்டு வர முடியும்.
நீதிமானின் ஊக்கமான ஜெபம் தானே கேட்கப்படும், நான் நீதிமான் இல்லையே என்று உன் உள்ளத்தில் நினைக்கலாம். அப்படி ஒருவேளை நீ நினைப்பாயானால், எலியா நம்மைப் போல பாடுள்ள மனிதன் என்பதை ஒருபோதும் மறந்து விடாதே.
ஜெபம் என்பது நீ எவ்வளவு தூரம் தேவன் மேல் சார்ந்து இருக்கிறாய் என்பதின் அடையாளம்.
ஜெபம் என்பது ஒருவர் இன்னொருவரை சந்திக்கும் இடம்.
இப்படிப்பட்ட உறவு நமக்கு தேவனோடு இருக்குமானால் இன்று நம்முடைய ஜெபமும் கேட்கப்படும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்