2 நாளாகமம் 20 :1 -3 இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள்.
சிலர் வந்து யோசபாத்தை நோக்கி உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கறையிலிருக்கிற சிரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். அப்பொழுது யோசபாத் பயந்து , கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.
இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தான் 2 நாளாகமத்தை எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இந்த யோசபாத்தின் பெயர் தினமும் என்னுடைய மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது . அதனால் தேவனே நீர் என்னை வழிநடத்துவீராயின், நான் இதை எழுதப் போகிறேன் என்று என்னை ஒப்புக்கொடுத்தேன். ஆதலால் இன்று நாம் ராஜாவாகிய யோசபாத்தை சந்திக்கப் போகிறோம்.
இஸ்ரவேலை ஆகாபும், யேசெபேலும் ஆண்டு கொண்டிருந்த பொழுது திடீரென்று கர்த்தர் எவ்வாறு எலியாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாரோ , அதே விதமாக கர்த்தர் யூதாவிலும் ம்முடைய கிரியை ஆரம்பித்து விட்டார்.
ஆகாப் ராஜாவின் அக்கிரமம், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை ஒருபோதும் ஆட்கொள்ளவில்லை. யோசபாத் தன் தேவனாகிய கர்த்தரைத் தன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தான். அவர் தம்மை நிச்சயமாக வழி நடத்துவார் என்றும் நம்பினான்.
இஸ்ரவேலை ஆண்ட ஆகாபும், அவன் மனைவியான யேசெபேலும் செய்த ஒவ்வொரு காரியமும் யோசேபாத்துக்கு நன்கு தெரியும். ஆதலால் அவன் யூதாவுக்கு ராஜாவானபோது நிச்சயமாக தன்னுடைய தேவனைப் பின்பற்ற முடிவு செய்தான். வானத்தையும் பூமியும் படைத்த யெகோவாவாகிய தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்வதை அவன் மறுபடியும் ஜனங்களுக்குள் கொண்டு வந்தான். அது மட்டுமில்லாமல் அவன் தன் வாழ்க்கையில் தேவனுக்குப் பிரியமானதை மட்டுமே செய்ய சித்தம் கொண்டான்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! நாமும் ஒரு வேளை ஆகாபையும் யேசபெலையும் போன்ற அக்கிரமக்காரர்கள் வாழும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அதனால் ஒவ்வொரு நாளும், நாமும பலவிதமான சோதனைகளை சந்திக்க நேரிடலாம். இதனால் நீ தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்வதற்கு பலவிதமான சிரமங்கள் ஏற்படலாம். ஆகிலும் ஒருவேளை நீ தைரியமாக தேவமனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதையே உன் நோக்கமாகக் கொண்டிருக்கலாம்! யோசபாத்தின் சாட்சி இன்று உன்னை ஆசீர்வதிக்கும் என்று நம்புகிறேன்.
2 நாளாகமம் 19: 4 கூறுகிறது , யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய் போய் , அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்ப பண்ணினான்.
அவன் ஒரு தனிமனித சேனையாக தேவனுக்காகப் பணி செய்தான். ஆகாபோடும், யேசெபேலோடும் யோசபாத்தைப் பார்க்கும் பொழுது எத்தனை வித்தியாசம்!
தேவனுக்காக இவ்வளவு பெரிய ஊழியம் செய்த அவனுடைய வாழ்க்கை எவ்வளவு வளம் பெற வேண்டும். யூதா மக்களைத் திரும்பவும் தேவனிடத்தில் சேரச் செய்தான், லேவியருடைய ஊழியத்தை திரும்பவும் ஆரம்பித்தான். யூதாவில் அவனால் ஒரு எழுப்புதலே வந்திருக்கும்! ஆனால் இவை அனைத்துக்கும் பின்னர் என்ன நடந்தது?
இன்றைய வேதாகப் பகுதி கூறுகிறது ‘இதற்குப் பின்பு’ என்று, ஆம் இத்தனை அருமையான ஊழியங்களுக்குபின்பு, ஏராளமான ஜனங்கள் அவனுக்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள். இன்றைய பகுதியில் முப்படையினர் அவனுக்கு விரோதமாகப் புறப்படுவதைப் பார்க்கிறோம்.
உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்ல விரும்புகிறேன்! நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுது, நாம் தேவனுக்காக அநேக காரியங்களை உற்சாகமாக செய்து கொண்டிருக்கும் பொழுது, நமக்கு விரோதமாக , வியாதி, பணக் கஷ்டம் குடும்பப் பிரச்சினைகள் போன்றவை படையெடுத்து வருகின்றன. யோசபாத்துக்கு நடந்தது போல தான் நமக்கும் நடக்கிறது.
ஆனால் யோசபாத் என்ன செய்தான் தெரியுமா? இந்த மூன்று படைகளும் அவனுக்கு விரோதமாக படையெடுத்து வந்த போது, பயம் அவனை மேற்கொள்ளவில்லை. அவனுக்கு எதிராக வந்த முப்படைகளும் அவனுக்கு பலத்த எதிரிகள் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவனோ முப்படைகளைக் கண்டு பயந்து ஆழ்ந்துவிடாமல், கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டான்.
வியாதிகள்,பணக்கஷ்டங்கள், குடும்ப பிரச்சினைகள் என்ற முப்படைகள் நமக்கு விரோதமாக படையெடுத்து வரும் பொழுது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பலவீனப்படுத்த முயற்சிக்கும் போது, தேவனுடைய சித்தத்தை அல்லது தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியாமல் அவைகள் தடை செய்யும் பொழுது, நாமும் பயப்படாமல், கலங்காமல், யோசபாத்தைப் போல நம்முடைய முகத்தை தேவனுக்கு நேராக ஒருமுகப்படுத்த வேண்டும்.
தேவனுக்கு பயப்படும் பயமே மனிதனுக்கு பயப்படும் பயத்தைப் போக்கும்!
இன்று உன்னுடைய பயங்களை கர்த்தரிடத்தில் எடுத்துச் செல்!
பயம் நம்மை அடிமையாக்கும்! விசுவாசமே நம்மை விடுவிக்கும்.
காற்றையும், கடலையும் அதட்ட வல்ல தேவனாகியக் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்