கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1595 யுத்தம் யாருடையது என்பதை மறந்து போக வேண்டாம்!

2 நாளாகமம்: 20:14,15 சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே கேளுங்க்ல்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார். இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. 

நேற்று நாம் ராஜாவகிய யோசபாத்தைப் பற்றிப்படிக்க ஆரம்பித்தோம். அவனுக்கு , மோவாப் புத்திரர், அம்மோன் புத்திரர், அம்மோனியருக்கு அப்புறம் உள்ள மனுஷர் என்ற முப்படைகளின்  தாக்குதல் வந்தது என்று பார்த்தோம். அதுமட்டுமல்ல ராஜா பயந்து தேவனுடைய சமூகத்தைத் தேடினான் என்று பார்த்தோம்.  யாருக்குத்தான் பயம் வராது? முப்படைகள்  சேர்ந்து வந்தால் அவனுடைய ராஜ்யத்திற்கு ஆபத்து அல்லவா? 

ஆனால் ராஜாவாகிய யோசபாத் பயம் என்ற கம்பளிக்குள் இருந்து விடவில்லை. இந்த ஆபத்தான சூழ்நிலை ராஜாவை தேவனுடைய சமூகத்தில் சென்று அவருடைய பாதத்தில் முழங்கால் படியிட செய்தது. அவன் மாத்திரம் ஜெபிக்கவில்லை யூதாவின்  மக்கள் அனைவரையும் உபவாசித்து ஜெபிக்கும்படி அழைத்தான்.

அந்த சமயத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்த குடும்பத்தில் வந்த ஒரு லேவியின் புத்திரன் ஒருவன், கர்த்தருடைய ஆவியினால் ஏவப்பட்டு தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தான். யகாசியேல் கூறிய வார்த்தைகள் எத்தனை அற்புதமான தேவ செய்தி என்று பாருங்கள்! நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்றான்.

யகாசியேல் முதலில் ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமல் இருங்கள் என்று கூறியது எனக்கு மிகவும் பிடித்த ஒரு காரியம். மிகுந்த எண்ணிக்கையும், மிகப்பெரிய  உருவமும் தேவனுக்கு பெரிய காரியமே அல்ல!  மிகப்பெரிய உருவம் கொண்ட கோலியாத் மிகச் சிறிய தாவீதுக்கு முன்னால் நின்றதும், மிகுந்த எண்ணிக்கை கொண்ட இந்த முப்படைகள், சிறிய தேசமாகிய யூதாவை எதிர்த்ததும் தேவனுக்கு ஒரு பெரிய பொருட்டே அல்ல!

யகாசியேல்  அவர்கள் ஏராளமான ஜனங்கள் மேல் வைத்த கண்களை விலக்கி,  யுத்தத்தை நடத்தும் தேவன்மேல்  வைக்குமாறு ஏவினான்.இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது என்று அவர்களுக்கு  நினைவுபடுத்தினான்.

தேவனுடைய பிள்ளைகளே! நம்முடைய தினசரி வாழ்க்கைக்கு எத்தனை அருமையான தேவ செய்தி இது!  முப்படைகள் போல எதிரிகள் நம்மை தாக்கும் போது,  வியாதி, துன்பம் ,கஷ்டம் நம்மை நெருங்கும் போது நாம் அவைகளைக் கண்டு பயப்படாமல் நம்முடைய கண்களை தேவன் மேல் வைக்க வேண்டும் என்பதே தேவன் நமக்கு அருளும் செய்தி!

தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று லூக்கா 1: 37 இல் பார்க்கிறோம்.

இதையேதான் யகாசியேல் யூதாவின் மக்களுக்கு கூறுகிறான். 

இந்த தேவ செய்தி இன்று நம்மை ஆறுதல் படுத்தவில்லையா? நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும்  யுத்தத்தைக் குறித்து நமக்கு எந்த கலக்கமும் வேண்டாம்,  எந்த பயமும் வேண்டாம், எந்த திட்டமும் நாம் வகையறுக்க வேண்டாம்.  நாம் அவர் மேல் விசுவாசத்தை மட்டும் வைக்கும்போது அவர் நம்மை கடலின் ஆழத்தைத் தாண்ட செய்வார்,  மலைகளின் உயரத்தைக் கடக்க செய்வார்,  சிகரத்தைத் தொடச் செய்வார் என்பதை  மறந்து போகாதே!

இன்றைய யுத்தம் நம்முடையது அல்ல! அது தேவனுடையது! நமக்கு வரும் துன்பங்கள் எத்தனை பெரியதாக நம்முடைய கண்களுக்கு தோன்றினாலும் சரி பயப்படாதே யுத்தம் நம்முடையது அல்ல அது தேவனுடையது! 

நம்மை சுற்றிலும் இருளாகக் காணப்படலாம், ஆனால் நாம் மேல் நோக்கி பார்ப்போமானால் நம்மை இருளின்வழியே வழிநடத்திக் கொண்டிருப்பவர்  நம்முடைய தேவன் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment