1 இராஜாக்கள் 18: 3-8 ..ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளை சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளச் சேர்த்து, அவர்களை கெபிக்கு ஐம்பது ஐம்பதுபேராக ஒளித்துவைத்து , அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து அவர்களைப் பராமரித்து வந்தான். ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்…….. ஒபதியா வழியில் போகும்போது எலியா அவனுக்கு எற்றிப்பட்டான். …..இதோ எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்கு சொல் என்றான்.
தேவனுடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகிய போது, அவருடைய பரிசுத்த அழைப்புக்கிணங்கி, தேசத்தில் மழை பெய்யப்போகிறது என்ற செய்தியை ஆகாபுக்கு சொல்வதற்காக எலியா சாறிபாத்தை விட்டுக் கிளம்புகிறான். நிச்சயமாக சாறிபாத் இந்த மூன்று வருடத்தில் காலத்தில் மிகவும் பழகிய ஊராக மாறியிருக்கும். அதைவிட்டுப் போவதும் சற்று வலித்திருக்கும்.
அவனுடைய பாதங்கள் இஸ்ரவேலில், அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு எல்லைக்குள் நுழைந்தவுடன், அவன் ஆகாபின் அரண்மனையை நோக்கி விரைகிறான். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது அவன் அப்படிப்போகும் வழியில் அரண்மனை பொறுப்பாளராக இருந்த ஒபதியாவை சந்திக்கிறான். ஆகாப் ராஜா கீழே குதி என்றால் குதித்து விடும்படியான வேலை அவனுடையது. அவன் எங்கேயாவது புல் அகப்படுமா என்று தேடும் படியாக அனுப்பட்டிருந்தான். மழையில்லாததால் ஏற்பட்ட வறட்சி அரமனையை பாதித்திருந்தது. ஆகாபுக்கு வறட்சியினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மக்களைப்பற்றியக் கவலை இல்லை. அவர்களைவிட அவனுடைய மிருகஜீவன்கள் மேல்தான் கவலை இருந்தது.
ஏன் குதிரைகள் மேலும், கோவேறு கழுதைகள்மேலும் இவ்வளவு அக்கறை? நாம் 1 இராஜாக்கள் 10:28 ல் பார்ப்போமானால், சாலொமோன் ராஜா அவனுடைய குதிரைகளையெல்லாம் எகிப்திலிருந்து அழைப்பித்தான். ஒவ்வொரு குதிரையின் விலையும் 150 வெள்ளிக்காசுகள் என்று பார்க்கிறோம். இதில் பரிதாபம் என்னவென்றால் தேவனாகியக் கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் இப்படிப்பட்ட சம்பத்துகளைக்குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
சங்:20:7 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
இதைத்தான் தாவீது கற்றுக் கோண்டிருந்தார், ஆனால் ஆகாபோ இதைக் கற்றுக் கொண்ட மாதிரித் தெரியவேயில்லை. அவனுடைய தேசம் மழையில்லாமல் வறண்டுத் துவண்டு கொண்டிருந்தபோது, ஆகாபுடைய கவலையெல்லாம் தன்னுடைய மிருக ஜீவன்களின்மேல் இருந்தது. ஒபதியாவும் அவனும் எங்காவது புல் கிடைக்குமா என்றுத் தேட வெவ்வேறு வழியில் புறப்பட்டனர்.
இப்படிப்பட்ட வேளையில் தான், எலியா ஒபதியாவை சந்திக்கிறான். ஒபதியா அவனைப்பார்த்தவுடனே கண்டுபிடித்துவிட்டான். எலியாவின் பாதத்தில் விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டான் (18:7). அவன் உடனே நான் தான் என்று சொல்லி, இதோ எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்கு சொல் என்றான். என்னதான் ஒபதியா எலியாவை என் ஆண்டவனாகிய எலியா என்று அழைத்தாலும், ஆகாப்தான் அவனுடைய உண்மையான ஆண்டவன் ஆகாப் தான் என்று எலியா உடனுக்குடன் பதில் கொடுக்கிறதைப் பார்க்கிறோம். ஆகாப்தான் அவனுக்கு தினசரிக் கட்டளைகளைக் கொடுக்கிறவன். ஆகாபுக்கே அவன் தினமும் கடமைப்பட்டவனாயிருந்தான். ஆகாப் தான் அவனுக்கு சம்பளம் கொடுத்தவன். ஆதலால் அவனே ஒபதியாவுக்கு ஆண்டவன் என்பதில் சந்தேகமே இல்லை.
நாம்கூட இப்படிப்பட்ட சூழ்நிலையில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒபதியா தேவனுக்கு பயந்தவனாக இருந்தாலும், கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைத் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருந்தாலும், அவன் வேலை செய்த இடம் தேவனுக்கு மகிமை கொடுத்த இடம் இல்லை. நம்மில் தேவனுக்கு பயந்து வாழும் எத்தனைபேர் இன்று அந்நியருக்கு ஊழியம் செய்து கொண்டிருக்கிறோம்! கர்த்தருக்கு பயந்த ஒபதியா, மிகவும் கேடுகெட்ட ஆகாபிடம் வேலை செய்தது போல நம்மில் பலரும்கூட வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லவா?
வேதத்தில் பார்ப்போமானால், நீரோவுக்கு பணிபுரிந்தவர்கள் அநேகர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்! நீரோ ஆண்டுகொண்டிருந்த சமயம் அது!
பிலிப்பியர் 4:22 பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
பவுல் ஒருநாளும் அவர்கள் பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லவேயில்லை! ஒபதியா ஆகாபின் அரமனையில் வாழ்ந்து கொண்டே தேவனுக்கு ஊழியம் செய்ததைப் போல நாமும் வாழ வேண்டும் என்பதே உண்மை!
ஒபதியா எவ்வளவு அருமையான ஒளிவீசும் சாட்சியாக வாழ்ந்தான் பாருங்கள்! தேவனுடைய நாமம் தூஷிக்கப்படும் இடத்தில் நீ வேலை செய்தாலும் ஒபதியாவைப் போல சாட்சியாக வாழமுடியும்! நீ வேலை செய்யும் இடத்தைப் பற்றிக் கலங்காதே! தேவன் உன்னை ஒரு ஒளிவீசும் சாட்சியாக உபயோகப்படுத்துவார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்