1 இராஜாக்கள் 18: 30 -35 அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு ,உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். பிற்பாடு அவன்: நீங்கள் நாலு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
அது ஒரு நீண்ட நாள்போலிருந்தது! பாகாலின் தீர்க்கதரிசிகள் காலையிலிருந்து தங்களைக் குத்தி, கிழித்து, உரத்த சத்தமாய்க் கத்தி கூக்குரலிட்டு களைத்து போய்விட்டனர். பாகால் உத்தரவு கொடுக்கவேயில்லை. என்ன பரிதாபம்! களைத்துப் போன தீர்க்கதரிசிகள் தங்களுடைய முயற்சியைக் கைவிட்டு, மீதி நேரத்தை எலியாவின் கையில் கொடுத்துவிட்டனர்.
அப்பொழுது எலியா அவர்களைக் கிட்ட வரும்படி அழைக்கிறான். அந்த சமயம் அந்திப்பலிகள் கொடுக்கப்பட்ட சமயம் என்று 36 ம் வசனம் கூறுகிறது. அவன் தனியாக கர்த்தருடைய உடைந்த பலிபீடத்தை செப்பினிட்டதை அங்கிருந்த அனைவரும் கண்டனர். ஒருகாலத்தில் கர்மேல் பர்வதத்தின் மேல் கர்த்தருக்கு பலிகளையிட்டு, அவரை ஆராதித்தனர் என்று இஸ்ரவேலின் சரித்திரம் சொல்கிறது. அவருடைய பரிசுத்தமான ஆராதனைக்குரிய இடமாக இருந்த அந்த இடம் நாளடைவில் உடைந்து உருமாறி விட்டது.
கர்த்தருடைய பலிபீடத்தை முதலில் செப்பனிடாமல் எழுப்புதல் எப்படி வரும்? அதனால்தான் எலியா பலிபீடத்தை முதலில் செப்பனிட்டான். அந்த நொறுங்கிய பலிபீடம் சரிபார்க்கப்பட்டபின்னரே ஜெபங்கள் ஏறெடுக்கப்பட முடியும். எலியா ஒவ்வொரு கற்களாக அடுக்கி தேவனாகியக் கர்த்தருடைய பலிபீடத்தை சரி செய்தபோது, அவன் உள்ளம் சந்தோஷத்தால் நிரம்பியிருக்கும். அவனுக்கு எதிரே நிற்கும் பெரிய சவாலை அறிந்திருந்தும், தேவனுடைய அளவில்லாத வல்லமைக்கு நிகராக யாரும் நிற்கமுடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவனுக்கு.
எலியாவின் விசுவாசத்திற்கு நிகரேயில்லை! பின்னர் எப்படி அவனை வர்ணிப்பது! அவன் நாலு குடம் தண்ணீரை விறகுகள் மேலும், களியின் மேலும் ஊற்றச் சொன்னபோது, அவன் கடினமாய்த் தோன்றுபவைகளை , மிகவும் கடினமாய் மாற்றியது போல எனக்குத் தோன்றியது. நீரால் முற்றிலும் நனைக்கப்பட்ட பலிபீடம்! கர்த்தர் இதை எவ்வாறு கையாளுவார்?
இஸ்ரவேல் மக்கள் எலியா பலிபீடத்தை திரும்பவும் கட்டுவதைப் பார்த்தபோது, ஒரு புது காரியத்தையும் கவனித்திருப்பார்கள். பலிபீடத்தை அலங்கரித்த பன்னிரண்டு கற்கள்! இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை மட்டும் அல்ல, யூதாவின் இரண்டு கோத்திரங்களையும் சேர்த்து பன்னிரண்டு கற்கள் வைக்கப்பட்டன. அதுதேவன் யாக்கோபுக்கு வாக்களித்த, ஒருங்கிணைந்த இஸ்ரவேலின் அடையாளம்.
எலியா கர்மேல் பர்வதத்தின் மேல் நீரால் நனைத்தெடுக்கப்பட்ட விறகுகளையும், தகன பலிகளையும் கொண்ட பலிபீடத்தின் அருகே நின்று கொண்டு, நீயும் நானும் தொடை நடுங்கும் சம்பவம் என்று சொல்லக்கூடிய சம்பவத்தை சந்தித்தது என்னைத் திக்குமுக்காடச் செய்தது.
நம்முடைய வாழ்வில் பிரச்சனைகள் தலைக்குமேல் வெள்ளம் போல வரும்போது, நம்முடைய திறமைகளால் அவற்றை நாம் சந்திக்கமுடியாமல் திக்கு முக்காடும்போது,தேவனாகியக் கர்த்தர் அவருடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகிறார்.
பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதும்போது, தேவனாகியக் கர்த்தர், அவன் மிகுந்த வேதனையில் இருந்தபோது, அவனுடைய இருதயத்தை மலரப்பண்ணின ஒரு காரியத்தை எழுதுகிறார்,
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். 2 கொரி 12 : 9
எங்கே நம்முடைய பெலன் குன்றி, நாம் எல்லாவற்றையும் இழந்து நம்பிக்கையற்று நிற்கிறோமோ அங்கே அவருடைய கிருபை நமக்குப் போதுமானதாக இருக்கும்.
கர்மேல் பர்வதத்தின் உச்சியில் பழுதுபார்க்கப்பட்ட பலிபீடம் இந்த நிச்சயத்தை எலியாவுக்கும், இன்று நமக்கும் கொடுக்கிறது. சங்கீதக்காரன் மிக அழகாக எழுதியவிதமாக,
அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். (சங்கீதம் 43 : 4) நாமும் அவரை கிட்டிச் சேர்வோம்! இந்த தமிழ்ப்பாடல் வரிகள் நம் ஜெபமாகட்டும்!
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுவீர்
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

THANK GOD FOR YOUR DEVATIONS……EVERY DAY EGARLY WAITING FOR THE HEVEN MANNA…….