1 இராஜாக்கள் 18:36-37 அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைப்பவை அப்படியே நடந்து விடுகின்றன! ஆனால் சில நேரங்களில் எல்லாமே அதற்கு எதிராகவே நடக்கிறது, நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிற எதுவுமே நடப்பதில்லை! இதற்கு நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இன்றைய வேதாகமப் பகுதியும் அவ்வாறே இருந்தது. நான் எழுதலாம் என்று நினைத்தவைகள் இடம் பெறவில்லை. பலமுறை நான் மாற்றி எழுத வேண்டியதாயிற்று!!!!! ஏனென்றால் இன்றைய பகுதியில் உள்ள எலியாவின் ஜெபம் எனக்கு முதலில் புரியவேயில்லை! ஏதோ ஒரு காரணத்தினால் இது என் மனதில் ஏறவேயில்லை!
இதை வாசிக்கும்போது வேதத்தில் காணப்படும் இன்னும் அநேக ஜெபங்கள் என் மனதில் வந்தன! 1 சாமுவேல் 2: 1-10 ல் உள்ள அன்னாளின் ஜெபம் அப்படியே மனதில் வந்தது. வேதத்தில் ஒரு பெண் ஜெபித்த நீண்ட ஜெபம் இது. அவள் தேவன் அளித்த தன்னுடைய குழந்தைக்காக நன்றியோடு ஜெபித்த ஜெபம்! எலியாவுக்கு தேவன் மழையை அனுப்பப்போவதாக கூறிவிட்டாரே, ஆனால் அது ஸ்தோத்திர ஜெபமே இல்லை!
பின்னர் நான் 1 இராஜாக்கள் 8: 25 -53 ல் சாலொமோன் தேவாலயத்தை கட்டி முடித்தவுடன் ஜெபித்ததைப் பார்த்தேன். இது அன்று எலியாவின் காலத்தில் நடந்ததை சாலொமோன் முன்கூட்டியே எழுதியது போல இருந்தது.
அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக. ( 1 இராஜாக்கள் 8 : 35 -36)
எலியாவின் ஜெபமோ இப்படியான எந்த அம்சங்களையும் கொண்டு இல்லை!
அந்த நாளில் நடந்த ஒவ்வொன்றையும் நாம் பார்க்கும்போது, ஒரு போலியான ஒரு தேவனின் போலியான தீர்க்கதரிசிகள் தங்கள் முழு பெலத்தையும் உபயோகப்படுத்தி அந்த நாள் முழுவதும் தங்கள் கதறலுக்கு பதில் வேண்டி நின்றனர். இவர்களுக்கு தங்கள் கால் கைகளை உதைத்து அழுதால் பதில் தர ஒரு தேவன் வேண்டும். சில நேரங்களில் நானும் அப்படியே நான் நினைத்த நேரத்தில் கேட்டதை உடனே என் தேவன் செய்ய வேண்டும் என்று நினைத்ததுண்டு! நல்லவேளை! என்னை நேசிக்கும் என் தேவன் என்னைக்குறித்த காரியங்களை முன்குறித்திருக்கிறார். நான் பரலோகத்தில் அவரோடு வாசம் பண்ண வேண்டுமென்பதே அவருடைய தீர்மானம்! ஆதலால் நான் நினைத்ததையெல்லாம் கொடுத்து நான் அந்த பரலோக வாழ்வைத் தவற விடுவது அவருடைய சித்தமே அல்ல! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
பின்னர் நான் எலியாவின் வார்த்தைகளை மறுபடியும் ஆராய்ந்தபோது, தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் என்று எலியா ஜெபிப்பதைப் பார்த்தேன். எலியாவின் ஜெபத்தின் முக்கிய அம்சமே கர்த்தர் அவர்களுடைய இருதயத்தை மறுபடியுமாய்த் தம் பக்கம் திருப்புவதுதான். இப்பொழுது எனக்கு இந்த ஜெபம் புரிய ஆரம்பித்தது.
இஸ்ரவேல் மக்களின் பரிசுத்த வாழ்க்கை, பரிசுத்த தேவனுக்கு முக்கியமாயிருந்தது. பரிசுத்தமே நம்முடைய கடைசி வாசஸ்தலம், நம்மை அங்கு சேர்பதற்காகவே தேவன் நம்மில் ஒவ்வொருநாளும் கிரியை செய்கிறார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

WONDERFUL MESSAGE MAM