1 சாமுவேல்: 1: 11 “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,..”
மறதி! மறதி! இப்பொழுதெல்லாம் அநேக காரியங்கள் மறந்து போய் விடுகின்றன என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு! எதையோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே அல்லது எதையோ வாங்க வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே, ஐயோ, அவரை நன்றாகத் தெரியும் பெயர் தான் மறந்து போய் விட்டது! இப்படிபட்ட வாசகங்கள் என் வாழ்க்கையில் அடிக்கடி வருகின்றன. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம்!
அநேகமாயிரம் காரியங்களை நம்முடைய சிந்தைக்குள் அடைத்து வைக்கிறோம், அவற்றில் ஒருசில தப்பித்து விடுகின்றன போலும் என்று நான் நினைப்பதுண்டு! ஒவ்வொரு பத்து வருடமும் நம் வாழ்க்கையில் கடந்து வந்த மக்களில் 30% பேரை நாம் இழந்து விடுகிறோம் என்று நான் எங்கோ வாசித்தேன். அவர்கள் இறந்து போவார்கள் என்று அர்த்தம் இல்லை, நம் வாழ்க்கையிலிருந்து வெளியே போய் விடுகிறார்கள் என்று அர்த்தம்!
அது உண்மையாகவா என்று அறிந்து கொள்ள நான் என்னுடைய பழைய விலாச புத்தகத்தை எடுத்து பார்த்தேன், ஆச்சரியப் படும் விதமாய் 30% க்கும் மேலே உள்ளவர்களிடம் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சிலர் இறந்து போனார்கள், சிலர் வெளியூர் சென்று விட்டனர், சிலரிடம் தொடர்பே இல்லை! ஒருசில பேரின் முகம் கூட மறந்து போய்விட்டது! அதைப் பார்த்து கொண்டிருந்த போது எத்தனை பேர் அவர்களுடைய விலாச புத்தகத்தில் சுந்தர் & பிரேமா என்று வாசிக்கும் போது எங்களை யாரென்று நினைவு கூறுவார்கள் ? என்ற எண்ணம் வந்தது!
நாம் யாருமே மறக்கப்படுவதை விரும்புவுதில்லை. நாம் யாரிடமாவது பேசும் போது அவர்கள் நம்மை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று உணர்ந்தால் வருத்தமாக இருக்கும் அல்லவா!
அன்னாள் பல வருடங்கள் தன் கணவனுடன் சீலோவுக்கு வந்திருக்கிறாள், ஒவ்வொரு முறையும் தேவனிடம் பிள்ளைக்காக முறையிட்டிருப்பாள். இத்தனை வருடங்கள் ஜெபம் கேட்கப் படாமல் போய்விட்டால் அவள் நிலையில் இருக்கும் யாரும் கர்த்தர் தம்மை மறந்து விட்டாரோ என்று தானே எண்ணுவார்கள்! நான் அப்படித்தான் நினைத்திருப்பேன்!
ஆனால் அன்னாளின் வார்த்தைகள் அவள் தன் தகப்பனோடு கொண்டிருந்த தொடர்பு வருடத்துக்கு ஒருமுறை கொண்டத் தொடர்பு அல்ல, தினசரி கொண்டிருந்த தொடர்பு என்று நமக்குக் காட்டுகிறது. இப்படிப்பட்ட ஜெபமே அவளுடைய தினசரி வாழ்க்கையாக இருந்தது! இருதயத்தை பிழிந்த வேதனையை சகித்துக் கொள்ள வேண்டிய பெலனை அவள் தன் தகப்பனிடமிருந்து அனுதினமும் பெற்றுக் கொண்டதால் தான், அவர் தன்னை என்றும் மறவார் என்ற நிச்சயத்தோடே அவருடைய சமுகத்தில் தரித்திருந்தாள்.
உன் வாழ்க்கையிலும் ஒருவேளை ஜெபம் கேட்கப்படாமல் இருக்குமானால் கர்த்தர் என்னை மறந்துவிட்டாரோ என்று நீ நினைக்க வேண்டாம்! அன்னாளைப் போல அவர் என்னை ஒருபோதும் மறவாதவர் என்ற நிச்சயத்தோடே அவர் சமுகத்துக்கு வா!
உங்கள் சகோதரி,
Dr பிரேமா சுந்தர் ராஜ்
Kindly follow the link and study the hardest book in the Bible that reveals the mysteries of God!
நீன்கள் படிப்பது மட்டுமன்றி வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இதைப் பகிருங்கள்!
