Tamil Bible study

இதழ்: 2619 எதிரிடையாய் நடக்காதே!

1 சாமுவேல்: 23  இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும், விக்ரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் பறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினான் என்றான்.

இந்த புதிய மாதத்தை ஒரு புதிய அத்திதாயத்தோடு நாங்கள் தொடங்கக் கர்த்தர் கொடுத்த கிருபைக்காய் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்! இந்த மாதம் முழுவதும் அவருடைய கிருபை நம்மைத் தாங்கும்படியாய் ஜெபிப்போம்!

ஒருநாள் நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பும்போது ஒரு ஆண் யானை தனியாக நின்றுகொண்டிருந்தது. காரை சற்று ஓரம் நிறுத்தி அதனைப் பார்த்தோம். வாட்டசாட்டமான அந்த யானை திடீரென்று தன் தும்பிக்கையால் மண்ணை எடுத்து அதன் தலையின்மேல் இரைக்க ஆரம்பித்தது. பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் அதிக நேரம் அங்கு நிற்கப் பயந்து அங்கிருந்து புறப்பட்டோம்.

இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் ஆரம்பம் எத்தனை அருமையாயிருந்தது! நல்ல உயரமான ஆணழகன்! வாட்டசாட்டமாய் இருந்தான்! கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டான்! இன்னும் என்ன வேண்டும்?

ஆனால் இன்றோ கர்த்தருடைய வார்த்தையை அவன் புறக்கணித்ததால், ராஜாவாயிருக்கும் தகுதியை இழந்தான். இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியத்துக்கு சமமாம்! பரிசுத்தமான இடத்திலிருந்து அசுத்தமான இடத்துக்கு தள்ளப்படுவதைப் போல் அல்லவா உள்ளது. நேர் எதிரிடையான திசையில் நடப்பது போல் அர்த்தம் உள்ளது!

ஆம்!  முரட்டாட்டம் பண்ணிக் கீழ்ப்படியாமல் போவது அவபக்திக்கும், விக்கிரகாராதனைக்கு சமம் என்று சாமுவேல் கூறுவதைப் பார்க்கிறோம். என்ன பரிதாபம்!

சவுல் தன்னுடைய கீழ்ப்படியாமையால் தன்னுடைய தலையிலே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டதைப் பார்க்கிறோம். உன்னுடைய அழிவுக்கு நீயே சீட்டுக்குலுக்கி எடுப்பது போல!

முரட்டாட்டம் என்ற வார்த்தை வேதத்தில் 98 முறை இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருமுறையும் அது ஒரு எச்சரிக்கையாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் எபிரேய மொழி முரட்டாட்டம் என்ற வார்த்தையை மாரா என்று அழைக்கிறது. மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தம் என்பது நமக்குத் தெரியும்.

சவுலின் முரட்டாட்டமும், கீழ்ப்படியாமையும் அவன் வாழ்வில் கசப்பைத்தான் உருவாக்கிற்று.  சவுல் தனக்குக் கர்த்தர் கொடுத்த கிருபைகளை இழந்தான்.

சவுலின் வாழ்க்கை இன்று நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்! கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் மட்டும் இருந்து விடாதே! 

அது யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொளவது போலத்தான்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

A deep Bible study from Revelation 4:2–11.

Watch the full study here:
https://www.youtube.com/@rajavinmalargal

Leave a comment