1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்.
நாம் நாமாக இல்லாமல் வேறொருவரக மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக மாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, தலைமுடி எல்லாமே தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய வாழ்க்கை பெரிய ஸ்டார் போல இருக்கின்றது. ஒரு பெரிய கூட்டம் அவர்கள் பின்னால் செல்கிறது. அவர்களைப்போல மாறவும், பேசவும், மேடையை அலங்கரிக்கவும், அநேகர் ஆசைப்படுகின்றனர்.
ஆனால் சில ஊழியர்கள் ஏழைகளுக்கு சேவைசெய்வதில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர். ஏழை எளியவர்க்கு உணவளிப்பதும், உடுத்துவிப்பதும்,அவர்களுடைய பணியாயிருக்கிறது. அவர்களை ஊழியக்காரர் என்று அங்கீகரிக்கக்கூட ஆட்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் மக்களின் பார்வையில் பெரியவர்கள் இல்லை, மிகவும் எளிமையானவர்கள்.
ஆனால் அவர்கள் தேவனுடைய பார்வையில் எத்தனை பெரிய அங்கீகாரம் பெற்றவர்கள்! அவர்களுடைய பாதங்கள் கர்த்தரின் பார்வையில் எவ்வளவு அழகானவைகள் என்று வேதம் கூறுகிறது!
என்ன ஆச்சரியம் பாருங்கள்! சவுல் பெரிய கோத்திரத்தையோ, குலத்தையோ சேர்ந்தவன் அல்ல! தன்னுடைய பார்வையில் மிகச்சிறியவனாயிருந்த சவுலைக் கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவனாக்கினார்!
உன்னுடைய பார்வையில் நீ எப்படிப்பட்டவன்? மிகவும் சிறியவனாய்த் தோன்றிய சவுலுக்கு இஸ்ரவேலை ஆளும் ராஜாவாகும் பெரிய அழைப்பு கர்த்தரிடத்திலிருந்து வந்தது.
நீ இன்று மேடையை அலங்கரிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்க அவசியம் இல்லை!
டிவியில் வரக்கூடிய அளவுக்கு பெரிய ஸ்டார் போன்ற ஊழியம் செய்யவேண்டாம்!
உன்னை யாரும் பெரிய ஊழியக்காரன் என்ற வரிசையில் வைக்காமல் இருக்கலாம்!
நான் மிகச்சிறியவன் என்று நீயே உன்னைப்பற்றி நினைக்கலாம்!
ஆனால்! ஒன்று மட்டும் மறந்து போகாதே. உன் பார்வையில் சிறியவனான உன்னைக் கர்த்தர் பெரிய கனவானாகக் காண்கிறார்! உன்னைப் பெரியத் தலைவனாகக் காண்கிறார்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
A deep Bible study from Revelation 4:2–11.
🔗 Watch the full study here:
https://www.youtube.com/@rajavinmalargal
