Tamil Bible study

இதழ்: 2621 உள்ளத்தின் அழகைத் தேடும் உன் தேவன்!

1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான்.

சரித்திரத்தில் நடக்கும்  சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், ஒருவேளை கண்டுமிருக்கலாம்.

வேறொரு நாட்டின் சரித்திரம் இன்னொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைபோல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம்  நடந்த  சம்பவங்கள் நாம் வேதத்தில் படிப்பதைப் போலவே நம் வாழ்க்கையிலும் நடக்கின்றன அல்லவா? அதனால் தான் வேதத்தில் நாம் படிக்கும் சிலருடைய வாழ்க்கை நம்மைப் பிரதிபலிப்பது போலவும், நமக்குப் பாடம் கற்பிப்பது போலவும் உள்ளது.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு இதைத்தான் கற்பிக்கிறது.

உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? சவுல் இஸ்ரவேலின் மேல் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோது அவன் வாட்டசாட்டமான, உயரமான ஆணழகனாக இருந்தான். வெளியில் பார்க்கும்போது அவன் ராஜாவாகிறது இஸ்ரவேலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவன் கர்த்தருடைய கிருபையால் ராஜரீகம் செய்ய ஆரம்பித்தபோது, திறமைசாலியாகவும் காணப்பட்டான்.  

பின்னர் நாளாக, நாளாக அவனில் முரட்டாட்டம் காணப்பட்டபோது சாமுவேல் அவனிடம், நீ உன் பார்வையில் மிகச்சிறியவனாயிருந்தபோது கர்த்தர் உன்னை ராஜாவாக்கியதை மறந்து போகாதே என்று எச்சரித்தார். ஆனால் அவன் தலையில் ஏதோ ஏறிவிட்டது,  அவன் தான் ராஜாவாயிப்பதற்கு மட்டுமல்ல, ஆசாரியனாயிருப்பதற்கும் தகுதியானவன் என்று முடிவுசெய்து, தகனபலிகளையும் செலுத்தி கர்த்தரை வேதனைப்படுத்தினான்.

இஸ்ரவேல் மக்கள் சவுலிடம் கண்டதற்கு எதிரிடையாக சவுலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த குணம் இப்பொழுது வெளியே சிந்த ஆரம்பித்துவிட்டது. இதை நாம் நம்முடைய அரசியல்வாதிகளிடம் கண்டதில்லையா? நம்முடைய ஹீரோக்களிடம் கண்டதில்லையா? நம்முடைய  போதகர்மாரிடம் நாம் கண்டதில்லையா? அல்லது நம்மிடம்தான் கண்டதில்லையா? நம்மை எவ்வளவு அழகாக நாம் சித்தரிக்க முயற்சிசெய்தாலும், ஒருநாள் நமக்குள் ஒளிந்திருக்கும் நம்முடைய உண்மையான முகம் எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது!

சவுலின் வெளிப்புற அழகு அவனுடைய உட்புறத்தில் இல்லை என்று சாமுவேல் கண்டு கொண்டபின்னரும் சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல் மறுபடியும்  ஈசாயின் குமாரனாகிய எலியாபின் முகத்தையும், சரீரவளர்ச்சியையும் கண்டு கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுகிறவன் இவன் தானாக்கும் என்றான் ( 1 சாமு 16:6).

அப்பொழுது கர்த்தர் சாமுவேலுக்கு , ‘ நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’என்றுகூறுவதைப் பார்க்கிறோம்.

கர்த்தர் இன்று ஒரு அழகான ஆண்மகனைத் தேடவில்லை! அழகாய் ஆடையணியும் பெண்ணையும் தேடவில்லை! அழகான உள்ளத்தைத்தான் தேடுகிறார்.

அன்று ராகாபிடம் கண்ட உள்ளழகு! வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தரைப் பின்பற்ற உள்ளத்தில் ஏங்கிய அழகு!

அன்று ரூத் என்ற மோவாபியப் பெண்ணிடம் காணப்பட்ட உள்ளழகு! தாவீதின் வம்சத்தை உருவாக்கிய இந்த உள் அழகை தேவன் புறம்பே தள்ளப்பட்ட மோவாபியரில் கண்டார்!

மனிதர் காணும்விதமாக கர்த்தர் உன்னைக் காண்பதில்லை! அவர் உனக்களித்திருக்கும் பரலோக கிருபையின் மூலம்தான் உன்னைக் காண்கிறார். உன்னுடைய உள்ளத்தையே அவர் காண்கிறார்! 

இன்று தேவனாகியக் கர்த்தர் தேடும் அந்த அழகு உன் இருதயத்தில் காணப்படுகிறதா?

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a Reply