Archives

இதழ்: 775 பாழான நிலம் பயிர் கொடுக்கும்!

2 சாமுவேல் 13:20 அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப்பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு.அவன் உன்னுடைய சகோதரன். இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்.  அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.

தாமாருக்கு பொல்லாப்பு இழைக்கப்பட்டது. அவளை உபயோகப் படுத்திய பின்னர் அம்னோன் அவளைத் தன் அறையிலிருந்து வெளியேற்றி கதவைப் பூட்டினான். அதுவரை கலகலப்பாக வாழ்ந்து கொண்டிருந்த ராஜகுமாரத்தியான தாமார் இப்பொழுது தனித்துக் கிலேசப்பட்டுக் கொண்டிருந்தாள். அல்லது தனிமையில் தள்ளப்பட்டாள்!

அவளுடைய அண்ணனாகிய அப்சலோம் அவளை நோக்கி இந்தக் காரியத்தை மனதில் வைக்காதே என்று கூறி அவளைத் தன் வீட்டில் தனிமையில் வைக்கிறான்.

மனதில் வைக்காதே என்று அப்சலோம் கூறிய இந்த வார்த்தைகள்  எபிரேய  மொழியில் எந்த உணர்வுகளையும் மனதில் வைக்காதே  என்று அர்த்தமாகும். அப்சலோம் தன்னுடைய தங்கை தாமாரிடம்  தன்னுடைய உணர்வுகளை ஒதுக்கி விட்டு வாழும்படி கூறுகிறான். அவள் அனுபவித்தது எத்தனை பெரிய அவமானம் எவ்வளவு கேவலம்! எப்படி அந்த உணர்வுகளைத் தள்ளி வைக்க முடியும்.

நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்!  நம்மில் சிலர் இதை அனுபவித்திருக்கிறோம் அல்லவா? நம்முடைய இருதயத்தில் கத்தியால் குத்தி நம்முடைய மனதை இரண்டாய்ப் பிளந்த மாதிரி ஒரு துக்கம் நம் தொண்டையை அடைக்கும்போது,  யாராவது வந்து எதையும் மனதில் வைக்காதே அது தானாய்ப் போய்விடும் என்று இலகுவாகச்  சொன்னால் எப்படியிருக்கும்? தாமாருடைய இருதயம் இரண்டாய் பிளந்திருத்ந்தது! அவளுடைய சகோதரன் அவளை உபயோகப்படுத்தி தூக்கி எறிந்திருந்தான். அவள் இருதயத்தில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது! அவளால் எப்படி எல்லாவற்றையும் மறக்க முடியும்? அப்சலோம் அவளுடைய உணர்வுகளுக்கு மூடி போட்டு மூடப்பார்க்கிறான்! அப்படியானால் அது ஒருநாள் வெடித்து விடும் அல்லவா?

தாமாரைப்போல தனிமையே வாழ்க்கையான எத்தனை பேர் நம்மில் உண்டு!  மனதின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் மூடி போட்டு அடைத்து விட்டு வாழ்ந்து வருபவர்கள் எத்தனை பேர் உண்டு? தாமாரைப்போல தனிமையில் ஐயோ என் வாழ்க்கையே பாழாகிவிட்டதே எனக்கு எந்த சந்தோஷமும் இனி வாழ்கையில் இல்லை என்று கதறும் உங்களுக்கு இன்று ஒரு நற்செய்தி!

பாழாய்க்கிடந்த இத்தேசம் ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்வார்கள். 

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர் நிலமாக்குகிறேன் என்றும் அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை செய்வேன்.    ( எசே: 36: 35,36)

தனித்து  வாழ்ந்து கொண்டிருக்கும் நீ தைரியமாயிரு! பாழாயிருக்கும் உன் வாழ்க்கையை கர்த்தர் பயிர் நிலமாக்குவேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 774 சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம்!

2 சாமுவேல் 13: 17 – 19  தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு  நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி கதவைப்பூட்டு என்றன்….. அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள். ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலைமேல் வைத்துக், சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு அம்னோன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்தபின் அவளை வீட்டைவிட்டு துரத்தி கதவைப்பூட்டுகிறதைப் பார்க்கிறோம்.

அந்தக் காலத்தில் ராஜகுமாரத்திகளாகிய கன்னிப்பெண்கள் பலவர்ணமான வஸ்திரத்தை அணிந்து கொள்வார்கள்.  ராஜகுமாரத்திகளாயிற்றே! அவர்களுடைய தகுதிக்கு தக்க வஸ்திரம் அணிந்து கொள்வதுதானே வழக்கம்.

அம்னோன் அவளை பலவந்தப்படுத்திய பின்னர் அவள் இனி கன்னிபெண் என்ற கணக்கில் வரமாட்டாள் அல்லவா அதனால் தாமார் கன்னிப்பெண்கள் உடுத்தும் அந்த பலவர்ணமாகிய வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு, சாம்பலைத் தன் தலையில் வாரிப்போட்டுக்கொண்டு அழுதுகொண்டே சென்றாள். அவள் இவ்வாறு தன்னுடைய துக்கத்தையும் அவமானத்தையும் வெளிப்படுத்தினாள். அவள் தான்  இந்த வெட்கம் கெட்ட காரியத்துக்கு உடந்தையாக இல்லை என்பதையும் வெளிப்படுத்தினாள்.

இந்தப் பெண்ணின் துன்பத்தையும், அவமானத்தையும் படிக்கும்போது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருநாள் நீங்களும் கந்தையை அணிந்து சாம்பலாலால் நிறைந்த சம்பவம் நினைவுக்கு வரலாம். ஒருவேளை ஏதோ ஒரு சம்பவம் உங்களை மனதளவில் கறைப்படுத்தியிருக்கலாம்!

சகோதர சகோதரியே நீ மட்டும் தனியாக இல்லை! வேதம் சொல்கிறது

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது. (ஏசா:64:6)

என்ன பரிதாபம்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படும்முன்னர் நானும்கூட சுயநீதி என்ற கந்தையை அணிந்துதான் இருந்தேன். பாவக்கறையை நீக்க ஆலயத்துக்கு போவதும், காணிக்கை கொடுப்பதும் போதும் என்று எண்ணினேன்.  ஆனால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்ததே நம்முடைய பாவத்திலிருந்து, கந்தையிலிருந்து, சாம்பலிலிருந்து விடுவிக்கவே என்று உணர்ந்த நாள் எனக்கு விடுதலை கிடைத்தது!

…துயரப்பட்டவர்களை சீர்ப்படுத்தவும்,அவர்களுக்கு சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்கு பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் ( ஏசா:61:3)

ஐயோ! எனக்கு இது நடந்தது ஏன்? நான் யாருக்கும் எந்த தவறுமே செய்ததில்லையே பின்னர் ஏன் எனக்கு இப்படி நடந்தது? இந்தக் கறையும், அவமானமும், நிந்தையும் என்னைவிட்டு  அகலுமா? என்றெல்லாம் புலம்புகிறீர்களா?

உங்கள் துயரத்தையும், நிந்தையையும், சீர்ப்படுத்த இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும்!

உங்களுக்காக நான் இன்று ஜெபிக்கலாமா? என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள்!

ஜீவனுள்ள தேவனே! துயரத்தாலும், வேதனையாலும் தாமாரைப்போல கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் இந்த சகோதரியை, சகோதரனை சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தைக் காணச் செய்யும்!  நான் இழந்த பெயர், இழந்த வாழ்க்கை இனி திரும்ப வருமா என்று புலம்புகின்றவர்களை உம்முடைய கிருபையினால் சீர்ப்படுத்தும்! கந்தலுக்கு பதிலாக துதியின் ஆடையினால் அவர்களை அலங்கரியும். எங்களுக்காக அனுப்பப்ட்ட இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம். ஆமென்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 773 கடந்த காலத்தின் தழும்பு மாறுமா?

2 சாமுவேல் 13: 14-17  அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்……அப்பொழுது அவள் நீர் எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும்  இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம்  கொடுமையாயிருக்கிறது என்றாள்….. தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளிக் கதவைப் பூட்டு என்றான்.

தாமார் தன்னுடைய அண்ணன் சுகவீனப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்றும் தன் தகப்பனாகிய தாவீது சொல்லி அனுப்பிய வார்த்தைக்கு இணங்கி அம்னோன் இருந்த அறைக்கு வந்தாள்.

ஆனால் அம்னோனின் அறைக்கு வந்தபின்னர் தன்னைக் கற்பழிக்க திட்டமிட்டுப்  போட்ட நாடகம் என்று புரிந்தவுடன் அவள் உள்ளம் எப்படி கொதித்திருக்கும்!

அவன் யாரை அடையாமல் தான் வாழ முடியாது என்று அடம்பிடித்து மெலிந்து நலிந்து போனானோ அவளை அடைந்தவுடன் அவளைக் கோபுரத்தில்  வைத்துக்  கொண்டாடாமல் குப்பையில் தள்ளுவதுபோல வெளியே துரத்துகிறான். அவள் இனி அவனுக்குத் தேவையில்லாத குப்பை போல ஆகிவிட்டாள். அவள் தேவையே இல்லை!  அவள் முகத்தைப் பார்த்தால் வரும் குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை! அவளை உதறித் தள்ளுகிறான்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இத்தனை பொல்லாப்பான அவன் அவளைக் கொலை செய்யாமல் விட்டானே என்றுதான்!  ராஜகுமாரன் என்ற கர்வத்தில் அவன் அதைக்கூட செய்யத் துணிந்திருக்கலாம்! ஆனால்  அவளைத் தள்ளிவிட்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான்.

துரதிர்ஷ்டவசமாக இன்றும் தாமார் போலப் பெண்கள் உபயோகப்படுத்தப்பட்டு,தூக்கி எறியப்படுவதை பார்க்கிறேன். சமீப காலத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்களை தங்கள் ஆசைப்படி உபயோகப்படுத்திவிட்டு அதை வீடியோவும் எடுத்து அவர்கள் அதை வெளியே சொல்லாதபடி பயமுறுத்தி வைத்த பெரிய விஷயம் நடந்தது நம்முடைய தமிழ்நாட்டில்தானே! ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அடையாளம் இல்லாமல் எரித்து சாம்பலாக்கிய  சம்பவம் நடந்தது என்னுடைய  வீட்டிலிருந்து பத்தே நிமிட தூரத்தில்தான்!  காவல் வேலை செய்த பலர் சேர்ந்து மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை கற்பழித்த செய்தி நம்முடைய தமிழ்நாட்டையே கலங்க செய்ததே அதுவும் நான் வாழும் சென்னை நகரில் நடந்ததுதான்!

இன்னும் மனசாட்சியே இல்லாமல் பெண்களைக் கற்பழிக்கும் அம்னோன்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! தங்களுடைய மானத்தை இழந்து வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டு கண்ணீருடன் வாழும் தாமார்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அம்னோன் போன்ற பொல்லாங்கரால் ஏமாற்றப்படுகிறோம். ஆனால் ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம்! எந்தப் பொல்லாங்கும் கர்த்தருடைய வல்லமையை விட சக்தி வாய்ந்தது அல்லவே அல்ல! 

உபயோகப்படுத்தப்பட்டு, கசக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்ட தாமாரைப் போல ஒருவேளை இன்று உங்கள் வாழ்க்கை இருக்குமானால் பயப்பட வேண்டாம்! அன்று கல்லெறியப்படும்படி  கொண்டு வரப்பட்ட ஸ்திரீயை தங்கள் இச்சைக்காக உபயோகப்படுத்திய கும்பல், அவள் மேல் குற்றம் சாட்டினபோது, கர்த்தராகிய இயேசு அவளைப்பார்த்து உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது! இனி பாவம் செய்யாதே என்று ஒரே நொடியில் அவளுக்கு பரிபூரண விடுதலையைக் கட்டளையிட்டார்.  இன்று நீ எதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று ஏங்குகிறாயோ அந்த விடுதலையைக் கொடுக்க இயேசு கிறிஸ்து வல்லவர்!

கடந்த காலத்தின் கசப்பான  வலியையும் தழும்பையும்  மாற்றிப்போட்டு அதற்கு பதிலாக எதிர் காலத்தின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் , சந்தோஷத்தையும் தரும்படி இன்று கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபிப்போம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 772 அப்பா என்னும் அற்புத உறவு!

2 சாமுவேல் 13:13  …. இப்போதும் நீ ராஜாவோடே பேசு. அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

வேதத்தைப் படிக்கும் ஒவ்வொருநாளும் அதில் நான் கண்டெடுக்கும் முத்துக்கள் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது என்று நான் மறுபடியும் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று தெரியாது!

இன்றைய வேதாகமப்பகுதி நான் அடிக்கடி நினைக்கும் ‘இதை நான் படித்ததே இல்லையே’  என்று நினைத்த பகுதிகளில் ஒன்று! ஒருவேளை இந்தப்பகுதி உங்களுக்கும் இன்று புதிதாகத் தெரியலாம்!

நேற்று நாம் அம்னோன் தாமாரை வெட்கப்படுத்தும்படி செய்த செயலைப் பார்த்தோம். என் சகோதரனே என்னை அவமானப்படுத்தாதே என்று தாமார் அழுத சத்தம் நமக்குக் கேட்டதே!

இந்தப் பகுதியை நாம் வேகமாக கடந்து சென்று விட்டால் நாம் ஒரு முக்கியமான கருத்தைக் கடந்து போய் விடுவோம்.

தாமார் அம்னோனிடம் நீ ராஜாவிடம் பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள் என்று வேதம் சொல்கிறது.

தாமாருக்கு ராஜாவைப்பற்றி என்ன தெரியும்? தாவீதை அவள் அப்பா என்று கூட அழைக்கவில்லையே!  அம்னோன் அவளுடைய கற்பை சூறையாட காத்துக்கொண்டிருக்கும்போது அவள் ராஜாவைப்போய்க் கேள் அவர் நீ விரும்புவதை தராமல் மறுக்க மாட்டார் என்கிறாள். இப்படிப்பட்ட பொல்லாப்பை செய்ய ராஜாவாகிய தாவீதால் மட்டுமே  முடியும் என்ற அர்த்தம் தான் அது!

தாவீதின் இந்த இரண்டு வாரிசுகளின் பேச்சு தாவீதுடைய பொல்லாங்கான நடத்தையை பிள்ளைகள் அனைவரும் அறிந்திருந்தனர் என்றே காட்டுகிறது. அந்தப் பொல்லாப்பின் விளைவுதான் பின்னர் தாவீதின் குடும்பத்துக்குள் முளைத்த பழிவாங்குதலும், கொலைகளும்!  தாவீது விதைத்த விதையின் அறுவடை!

தாமார் தன்னுடைய தகப்பனை ‘ராஜா’ என்று அழைத்ததைப் பார்த்தேன். ஒருவேளை அங்கு அவளுடைய அண்ணன் இல்லாமல் வேறொருவர் இருந்திருந்தால் அவள் ராஜா என்று சொன்னதை சற்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அங்கு இருந்த இருவருமே தாவீதின் பிள்ளைகள் ஆனால் அவர்களுக்குள் பேசும்போதும் அப்பா என்ற வார்த்தையையே காணோம். அப்படியானால் தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்திருக்கும்?  தாமாருக்கும் அவள் தகப்பனுக்கும் இடையில் நல்ல அப்பா மகள் உறவு இருந்தமாதிரியே தெரியவில்லை!

இன்று பிள்ளைகளே உங்கள் உறவு உங்கள் அப்பாவோடு எப்படி இருக்கிறது? தகப்பன்மாரே உங்கள் உறவு பிள்ளைகளோடு எப்படி இருக்கிறது? பிள்ளைகள் உங்களை இவர் என்னுடைய அப்பா என்று பெருமையோடு சொல்ல முடிகிறதா?

அப்பா என்பது ஒரு அற்புதமான உறவு! அப்பா என்றால் ஒரு நல்ல நண்பர், பிள்ளைகளின் மனதை புரிந்தவர், பிள்ளைகளுக்காக உழைப்பவர், ஆலோசனை கொடுப்பவர், பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு களிப்பவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒருவேளை இன்று உங்களுடைய அப்பா உங்களோடு இல்லாவிட்டால், அல்லது தாமாரைப்போல உங்களுக்கு நல்ல அப்பா இல்லாதிருந்தால்,  உங்களை இந்த உலகத்தில் அதிகமாக நேசிக்கும் பரம தகப்பன் ஒருவர் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்! அவரை அப்பா பிதாவே என்று அழைக்கலாம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

இதழ்: 771 வெட்கம்! அவமானம்! பயம்!

2 சாமுவேல் 13: 11 – 13  அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில் அவன் அவளைப்பிடித்து அவளைப்பார்த்து: என் சகோதரியே நீ வந்து என்னோடே சயனி என்றான். அதற்கு அவள் வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத் தகாது. இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதி கெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்.

அன்று அழகிய ஏதேன் தோட்டத்தில் பகலிலே குளிர்ச்சியான  வேளையில்  தேவன் என்றும் செய்வதுபோல தன்னுடைய நண்பர்களாகிய ஆதாமோடும் ஏவாளோடும்  உலாவும்படி வந்தார். அவருடைய சத்தத்தைக் கேட்ட இருவரும் தேவனுடைய சந்நிதிக்கு விலகி தோட்டத்தின் மரங்களுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டனர்.  கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு நீ எங்கே இருக்கிறாய் என்றார் என்று வேதம் ஆதியாகம 3 ல் கூறுகிறது.

இது சாதாரண கேள்விஅல்ல!  கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் தம்மைவிட்டு விலகியிருக்க என்ன காரணம் என்று கேட்கிறார். ஏனெனில் நாம் அவரோடு நெருங்கி வாழவே அவர் ஆசைப்படுகிறார். ஆனால்  மிகவும் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால்  அன்றிலிருந்து ஏதேனின் வாழ்க்கை மாறிவிட்டது!   ஆம்! ஏனெனில் அன்றுதான் குற்ற உணர்வு,  வெட்கம், மரணம் என்ற வார்த்தைகள் முதலில்  உலகத்துக்குள் வந்தன!

அன்றிலிருந்து இன்றுவரை நாமும் நம்முடைய சுய இச்சையின்படி வாழும்போது ஆவி, ஆத்துமா மட்டுமல்ல சரீரத்திலும் அதன் பலனை அனுபவிக்கிறோம்.

இன்று தான் விரும்பியதை அடைய ஏமாற்று வழியைக் கைக்கொள்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு தாவீதின் குமாரனான  அம்னோன் என்னும் ஒரு   தலைகனம் பிடித்த , இச்சையை அடக்க முடியாத, தன்னுடைய அரசகுமாரன் என்ற நிலையை உபயோகப்படுத்தி சற்றும் எதிர்பாராத வேளையில் தன்னுடைய சகோதரியக் கற்பழித்த ஒரு வாலிபனைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.

தாமாரின்  நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன் என்ற வார்த்தைகள் தான் நாம் இன்று சிந்திக்கப்போகிறோம்!

வெட்கம் என்பது அவமானம் மட்டும் அல்ல மற்றவர்களின் கண்களில் கேவலமும் கூட. வெட்கத்தையும் அவமானத்தையும் சுமந்தவர்களுக்குத்தான் அதன் வேதனை தெரியும். ‘அவ ஒரு மாதிரியான பொண்ணு’ அவளோடே பழகாதே என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? சில நேரங்களில் யாரோ ஒருத்தரால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கும் இந்தப் பட்டம் கிடைத்து விடுகிறது அல்லவா?

அது ஏதேன் தோட்டமாயிருக்கட்டும், அல்லது அண்ணனே தங்கையைக் கற்பழித்த அம்னோனின் அறையாக இருக்கட்டும், அங்கே அவர்கள் அனுபவித்த வெட்கத்தையும் அவமானத்தையும் இன்றும் சுமக்கும் அநேகர் உண்டு!

வெட்கத்தோடு அவமானத்தோடு, நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று கசப்போடு வாழும் உங்களுக்கு ஒரு நற்செய்தி!  நாம் எந்த அவமானத்தையும் வெட்கத்தையும் சுமந்து கூனி குறுகி வாழ வேண்டாம்! இதற்காகத்தான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தார்.

லுக்கா 8: 43-48 ல்  சொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் உதிரப்போக்கினால் பலவருடங்களாக  பெரும்பாடு பட்டவள். அந்தக் காலத்தில் எந்த நோயும் தேவனுடைய சாபத்தால் வந்தது என்று நினைக்கப்பட்டது.  இதை விட அதிக அவமானம் அந்தப் பெண்ணுக்கு என்னவென்றால் உதிரப்போக்கு காலத்தில் பெண்கள் அசுத்தமானவர்கள் என்று கருதப்பட்டனர். அவர்களை யாரும் தொடவேக் கூடாது. அது தீட்டாகிவிடும். சற்று யோசித்துப் பாருங்கள்! பன்னிரண்டு வருடமாக உதிரப்போக்கினால் அவள் எல்லோராலும் ஒதுக்கி வைத்து விடப்பட்டிருந்தாள்! குடும்பத்தின் எந்த காரியங்களிலும் பங்கு இல்லை! தேவாலயத்துக்கு கூட செல்ல முடியாது. அவள் மனநிலை எப்படியிருந்திருக்கும்? அந்த ஊருக்கே அவளுடைய பிரச்சனை தெரிந்திருக்கும். அந்தப் பொண்ணா என்று ஊரில் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவளைப்பற்றி  பேசியிருப்பார்கள். எத்தனை அவமானம்! வெட்கத்தால் கூனி குறுகியிருந்த ஒரு பெண் அவள்!

ஆனாலும் இந்தப்பெண் கூட்டத்துக்குள் போய் கர்த்தராகிய இயேசுவைத் தொட எந்த வெட்கமும் அவமானமும் தடையாய் நிற்க முடியவில்லை.  என்ன ஆச்சரியம்! தொட்ட மாத்திரத்தில் சுகமடைந்தாள்! அவள் அனுபவித்த வெட்கம், அவமானம், தீண்டாமை எல்லாமே ஒரு கணத்தில்  ஓடிப்போய் விட்டது!

உன்னுடைய கடந்த காலத்தில் நடந்த வெட்கமும் அவமானமும் உனக்கு எந்தத் தகுதியும் இல்லை,  நீ வாழவே தகுதி இல்லை , நீ தொலைந்து போ என்று சொல்லலாம்!  நம்மை பயத்திலேயே இருக்க செய்வது தான் பாவத்தின் வேலை!

ஆனால் வெட்கம்தான் முடிவு இல்லை!  கர்த்தராகிய இயேசுவைத் தேடி விசுவாசத்தில் அவரைத் தொடும்போது அவர் விடுதலையளிக்கிறார். தாமாரின் இடத்தில் இருந்த அனுபவம் உண்டா? வெட்கமும் அவமானமும் பயமும் உங்களை விடாமல் துரத்துகிறதா? கர்த்தராகிய இயேசு மாத்திரம்தான் உன்னை விடுவிக்க முடியும்! தாமதியாதே!

கர்த்தர்தாமே இந்த வார்த்தை மூலமாக உன்னை ஆசீர்வதிக்கட்டும்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா?

2 சாமுவேல் 13: 6 – 7  அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப்போல் படுத்துக்கொண்டு ராஜா தன்னைப்பார்க்க வந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்.

அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுபி, நீ உன் சகோதரனாகிய  அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான்.

தேவனுடைய கட்டளையை மீறி பல பெண்களை மணந்த தாவீதின் வீட்டில் பல பிள்ளைகள் வளர்ந்தனர். எத்தனை பிள்ளைகள் என்று நமக்குத் தெரியாது. அந்தக்காலத்தில் பெண் பிள்ளைகள் எண்ணிக்கையில் வர மாட்டனர். நமக்குத் தெரிந்த ஆறு மனைவிகளுக்கு குறைந்தது பன்னிரண்டு பிள்ளைகளாவது இருந்திருக்கலாம். இது மிகக் குறைந்த எண்ணிக்கைதான். நிச்சயமாக இதைவிட பெரிய எண்ணிக்கை உள்ள பிள்ளைகள் அங்கு தாவீதை அப்பா என்று அழைத்திருப்பார்கள்.

ஒரு மனிதன் பல வேலைகளை செய்ய தாலந்துகள் உள்ளவனாக இருந்தாலும், பல மனைவிகளையும், பலருக்குப் பிறந்த பிள்ளைகளையும் சமாளிப்பது சுலபமல்ல! அதிலும் தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. அவனுடைய வேலைகளுக்கு மத்தியில் பிள்ளைகளுக்கு எவ்வளவு நேரம் கொடுத்திருப்பான்? ஒருவேளை என்னுடைய கணிப்பு தவறு என்று நினைப்பீர்களானால் இன்றைய வேதாகமப் பகுதியைப் பார்க்கலாம்.

அம்னோன் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் ஆசைப்பட்டான் என்று பார்த்தோம். அவன் இச்சையினால் ஏக்கம் பிடித்து மெலிந்து போவதைப்பார்த்த அவனுடைய உறவினனும் நண்பனுமான யோனதாப் அவனை ஒரு கள்ள நாடகம் ஆடும்படி திட்டம் போட்டுக் கொடுக்கிறான். ராஜாவின் குமாரனாகிய அவன் எதை வேண்டுமானாலும் அடைந்துவிடலாம் என்று தந்திரவாதியான அவன் தூண்டி விடுகிறான்.

இந்த இடத்தில் பிள்ளைகளுக்கு நேரம் கொடுக்கத்தவறிய தகப்பனாகிய தாவீது உள்ளே வருகிறான். அம்னோனின் உள்நோக்கத்தைக் காணத் தவறிய இந்தத் தகப்பனால் அவனுடைய மகளாகிய தாமாருக்கு மிகவும் கொடுமையான காரியம் நடக்கிறது.

யோனதாப் திட்டம் வகுத்தபடியே உள்ளே வந்த தாவீது,  அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொல்லி தாமாருக்கு செய்தி அனுப்புகிறான். என்ன பரிதாபம்! பிள்ளைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தகப்பன்!  ஒருவேளை தாவீது ஒரு மனைவியோடு வாழ்ந்திருந்தால், தன்னுடைய பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிட்டிருப்பான். இப்படிப்பட்ட ஒரு சோகமான சம்பவம் வேதத்தில் இடம் பெற்றிருக்காது!

ஒரு நல்ல தகப்பனுடைய செல்வாக்கு பிள்ளைகளின் வாழ்க்கையை நல்ல வழியில் நடத்தும். ஒரு கெட்ட தகப்பனுடைய செல்வாக்கு பிள்ளைகளை அம்னோனைப்போலத்தான் நடத்தும்.

இன்று எவ்வளவு நேரம் உங்கள் பிள்ளைகளோடு செலவழிக்கிறீர்கள்? பிள்ளைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? உங்களுடைய நல்ல செல்வாக்கு பிள்ளைகளை நல்ல வழியில் நடத்துகின்றதா? உங்களுடைய சாட்சியின் மூலம் உங்கள் பிள்ளைகளை பரம தகப்பனாகிய தேவனின் அரவணைப்புக்குள் வழிநடத்தியிருக்கிறீர்களா?

கர்த்தர்தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 769 மசாலா சேர்ந்த மாபெரும் நடிப்பு!

2 சாமுவேல் 13:5 அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள். உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம் கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவு செய்யவேண்டும் என்று சொல் என்றான்.

இந்த உலகத்தின் எல்லா மூலைகளிலும் உண்மை காணாமல் போய் விட்டது என்பதை  நாம் ஒவ்வொருநாளும் டிவியில் பார்க்கும் செய்திகள் காட்டுகின்றன அல்லவா?  அப்பா! இப்படி கூடவா நடக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லையா? எவ்வளவு ஏமாற்றுத்தனம்! அரசியல்வாதியிலிருந்து போதகர்கள் வரை நாம் எத்தனை மோசடிகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்!

அம்னோன் தான் விரும்பியதை அடைய அவனுடைய நண்பனும் சகோதரனுமான யோனதாப் அவன் சொல்லும்படி ஒரு கட்டுக் கதையை இட்டுக்கட்டி கொடுக்கிறதை  நாம் இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம்.

இந்த இரண்டு நண்பர்களும் அம்னோன் விரும்பியதை எப்படியாவது அடைய ஒரு கதையை உருவாக்குகிறார்கள். நல்ல மசாலா சேர்த்த கதை! அம்னோன் வியாதிக்காரன் போல் நடிப்பதும் அதில் சேர்க்கப்பட்ட ஒரு மசாலா தான்!

இங்கு யோனதாப் செய்கிற வேலையைப் பார்க்கும்போது அவன்  ஒரு மேய்ப்பனைப்போல வேஷம் தரித்த ஓநாயைப்போல என் கண்களுக்கு தெரிந்தான்!  அம்னோனுக்கு உதவி செய்ய வந்த நண்பனாகவும் உறவினனாகவும் அவன் தோன்றினாலும், உண்மையில் அவன் ஒரு விஷம் கொண்ட பாம்பு!  அவனுடைய திட்டமே அம்னோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதை ஏமாற்ற வேண்டும்! அதற்க்காக போட்ட திட்டம்தான் இது!

யோனதாப் திட்டமிட்டபடி நாடகம் அரங்கேறியது! அது நாடகம் என்று தெரியாமலே தாவீது அந்த திட்டத்துக்கு பலியானான். ஒரு நிமிடம்! தாவீது மாத்திரம் என்ன? திட்டம் தீட்டி உரியாவைக் கொன்றவன் தானே! இப்பொழுது அவனே பலியாகி, தன்னுடைய சொந்த குமாரத்தியாகிய தாமாரை உபயோகப்படுத்தவும், கற்பழிக்கவும், ஏமாற்றவும் ஏற்படுத்தப்பட்ட   கண்ணியில் விழும்படி அனுப்புகிறான்.

திட்டமிட்டு ஏமாற்றுவது எத்தனைக் கொடியது என்றும் அதை அனுபவிப்பவர்களுக்கு அது எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதையும் அறிந்த நமக்கு, பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் என்ன சொல்கிறார் பாருங்கள்!

கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ,அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.  ( பிலி: 4:7)

உண்மையையும், ஒழுக்கத்தையுமே நாம் ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்க வேண்டும் என்ற பவுலின் அறிவுறை கிறிஸ்தவர்களாகிய நமக்கு எவ்வளவு தேவையான ஒன்று!

நான் என்றும் மதிக்கும் தேவனுடைய ஊழியர் டி.எல். மூடி பிரசங்கியார் அவர்கள் இதை அழகாக கூறியுள்ளார்.

ஒரு நேரான குச்சியை அது கோணலானது அல்ல என்று நிரூபிக்க நாம் வாக்குவாதம் செய்யவேண்டியதில்லை. அந்த குச்சிக்கு  நேராக இன்னொரு குச்சியை வைத்தால் அதுவே நிருபணமாகிவிடும்.

இயேசு ராஜாவின் பிள்ளைகளாகிய நாம் உண்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்து இந்த உலகத்தில் நேரானா குச்சிகள் நாம் என்று நம்முடைய நடத்தையின் மூலம் இந்த உலகத்துக்கு காட்டுவோம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்