Archive | May 24, 2011

மலர்:1இதழ்: 103 இராட்சதருக்கு முன் வெட்டுக்கிளி!

 எண்ணா:13:32 33 நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்.

 

 

நாங்கள் லக்னோவில் வாழ்ந்த போது குளிர் காலத்தில் பலநாட்கள் சூரியனைப் பார்க்கவே முடியாது. பகலில் கூட பனி இரங்கிக் கொண்டிருக்கும். நடுக்கும் குளிரும், ஈரப்பதமான குளிர் காற்றும், சென்னை வாசிகளான எங்களுக்கு, சிறிது சூரிய வெப்பம் நம் மேல் படாதா என்று ஏங்க வைக்கும்.

எங்களுடைய விசுவாச வாழ்க்கையிலும் சூரியன் மறைந்த நாட்கள் பல உண்டு. எங்களுக்கு மட்டும் அல்ல, விசுவாசிகளான உங்களுக்கும் வாழ்வில் பனிபடர்ந்து, இருண்டு போன நாட்களின் அனுபவம் அநேகம் உண்டல்லவா? சோதனைகளும் வேதனைகளும் மலைபோல நிற்கும்போது நாம் பெலவீனராக நின்றதில்லையா?

இன்று நாம் தொடர்ந்து அதிகமாய் வாசிக்கப்படாத எண்ணாகம புத்தகத்தை தியானிப்போம். மோசேயின் தலைமையில் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பலத்த கரத்தினால் அவர்களை வழிநடத்தி, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தின் மறுகரையில் கொண்டு வந்து சேர்த்தார். அப்பொழுது மோசே கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக, இஸ்ரவேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து ஒருவனை கானானுக்குள் வேவு பார்த்துவர அனுப்பினான்.

மோசே அவர்களை நோக்கி, கானான் தேசம் எப்படிப்பட்டது? அங்கு வாழ்கிற மக்கள் எப்படிப்பட்டவ்ர்கள்? அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது? கூடாரங்களா? கோட்டைகளா? நிலம் எப்படிபட்டது? வளமானதா? விருட்சங்கள் உண்டா? கனிகள் எப்படிபட்டவை? என்று பார்த்து வர சொன்னான் ( எண்ணா:13:17 -20). நாம் ஒரு கிரவுண்டு நிலம் வாங்குவதற்கு முன்னால் , நிலம் எப்படி, நீர்வளம் எப்படி, சுற்றிலுமுள்ளவர்கள் எப்படி என்று விசாரிப்பது போல இருக்கிறது அல்லவா?

இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு மோசே, கடைசியாக அவர்களை நோக்கி,(எண்ணா:13:20) நோக்கி “தைரியங்கொண்டிருந்து தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றான். ஏன் மோசே அவர்களை தைரியமாயிருக்கச் சொன்னான்?  மோசேக்கு தெரியும், எதிரிகள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை என்று. ஜெயம் கொடுப்பவர் நம்மோடிருக்கும் போது, நம்முடைய எதிரி எவ்வளவு பலசாலியாயிருந்தாலும் நாம் அஞ்ச வேண்டியதில்லை!

என்ன ஆயிற்று பாருங்கள்! இந்த வேவுகாரர், கானான் தேசத்தை சுற்றி திரிந்தனர். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வந்தபோது ஒரு திராட்சை குலையை வெட்டி, அது மிகவும் கனமாக இருந்ததால், அதை ஒரு தடியிலே கட்டி, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு வந்தனர். பின்னர் மாதளம் பழங்களிலும், அத்திப் பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தனர். நாற்பது நாட்கள் சுற்றித்திரிந்தபின்னர், அவர்கள் மோசேயிடம் திரும்பிவந்து “அது பாலும் தேனும் ஓடுகிற  தேசம்தான், இது அதினுடைய கனி” என்றனர். (எண்ணா: 13: 23-27).

என்ன அருமை! எகிப்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு கர்த்தர் கொடுக்கப்போகிற கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம்!

வேவு சென்றவர்கள் உற்சாகமாய், ’வாருங்கள்! நாம் அதை சுதந்தரிப்போம்! இவ்வளவு நாட்கள் நாம் வனாந்தரத்தில் பட்ட கஷ்டம் போதும்! அருமையான தேசம் நமக்கு காத்திருக்கிறது!’  என்று சொல்வதற்கு பதிலாய் (எண்ணா:13:31-33)) “ ஆனாலும்  நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்” என்றார்கள்.

இஸ்ரவேல் மக்கள் பயந்தனர்! ஏன் தெரியுமா? தங்களுடைய பிரச்சனைகளுக்கு முன்பால தங்களை அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல் கண்டனர்.

நீ எப்படி?

வாழ்வில் சூரியன் மறைந்து, இருள் சூழ்ந்திருக்கும் போது, பிரச்சனைகள் மலைபோல் நிற்கும்போது, நீ சாதிக்க வேண்டிய காரியங்கள் உன் கண்முன் இமயமாய் உயர்ந்து நிற்கும்போது உன்னால் ஒரு சிறு சோதனையை கூட சந்திக்கமுடியாமல் ஒரு பெலவீனமான் பாண்டம் போல் நிற்கிறாயல்லவா? ஏன்? இஸ்ரவேல் மக்களைப் போல பிரச்சனைகளை பெரிய இராட்சதராகவும், உன்னை சிறு வெட்டுக்கிளியாகவும் பார்ப்பதால்தான்.

ஒன்றை மறந்து விடாதே! நம்முடைய கர்த்தராகிய ஆண்டவருக்கு, நாம் சந்திக்கும் எந்த பிரச்சனைகளும் இராட்சதரைப் போல பெரியவை அல்ல! கர்த்தர் தம்மால் தோற்க்கடிக்க முடியாத எந்த இராட்சதரையும்  இதுவரைகண்டதில்லை! அவர் கானானுக்குள் சுமந்து செல்ல முடியாத எந்த சிறிய வெட்டுக்கிளியையும் அவர் பார்த்ததில்லை!

 

 

பெலவீனமான உன்னைப் பார்த்து பயப்படாதே!

பெலமுள்ள அவரைப் பார்த்து தைரியங்கொள்!

கர்த்தருடைய நாமத்தை நம்பி, தேவனை சார்ந்து கொள்! (ஏசா: 50:10)

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

 

Advertisements