Archive | May 5, 2011

மலர்:1இதழ்: 90 புத்தியுள்ள ஆராதனை!


 யாத்தி: 35: 21 பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ….”

நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தோம்.

இப்பொழுது இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை பிரயாணத்தை யாத்திராகம புத்தகத்தின் மூலம் தொடருவோம்.

யாத்திராகமம் 31ம் அதிகாரம் 18ம் வசனத்தில், கர்த்தர் சீனாய் மலையிலே மோசேயோடே பேசி, அவருடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

மோசே மலையிலிருந்து வரத் தாமதித்தபோது ஜனங்கள் முறுமுறுத்து, மோசே ஒருவேளை திரும்பி வரமாட்டான் என்று நினைத்து, தாங்கள் கண்களால் பார்த்து, தொட்டு, உணர்ந்து  வழிபட ஒரு தெய்வத்தை செய்யுமாறு ஆரோனை வற்புறுத்தி, தங்களுடைய பொன் ஆபரணங்களை கழற்றிக் கொடுத்தார்கள்.

ஆரோன் அவற்றை வாங்கி, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றான். மறுநாள் அவர்கள் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் அந்த கன்றுக்குட்டிக்கு செலுத்தினார்கள்.

இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிருஷ்டி கர்தராகிய தேவனை விட்டு விலகி, தங்கள் கையின் சிருஷ்டியை வணங்கினார்கள்.

ஒரு நிமிடம்!

இது ஏதோ நமக்கும் பழக்கமான காரியம் போல தோன்றவில்லையா? நம்முடைய சிருஷ்டிகருக்கும் நமக்கும் நடுவே உலக பிரகாரமான காரியங்கள் நிலையான இடம் பெற்று விடுவதில்லையா? நம்முடைய வேலை, பணம் சம்பாதித்தல், சொத்து குவித்தல், நம்முடைய குடும்பம், சில சிற்றின்பங்கள் இவை அனைத்தும் பொற்க்கன்றுக்குட்டியை போல நம்முடைய முக்கிய ஆராதனையை எடுத்துக் கொள்கின்றன அல்லவா?

யாரையாவது ஆராதிப்பது நம்முடைய மனித தன்மை. நம்மை நேசித்து வழிநடத்தும் தேவாதி தேவனை நாம் முழு மனதோடு ஆராதிக்க தவறினால், நம்முடைய பார்வையை பிரியப்படுத்தும், உணர்ச்சியை தூண்டிவிடும், சிற்றின்பத்தை கொடுக்கும் காரியங்களை நாம் ஆராதிக்க ஆரம்பித்து விடுவோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் “ அவருக்காக எல்லவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” ( பிலிப்:3:11) என்று தேவாதி தேவனை ஆராதிக்கிறார்.

அனைத்தும் கிறிஸ்துவுக்கே, என் முழு தன்மைகள் , ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே என்ற பாடலின் முழு அர்த்தமும் உணர்ந்து தேவனை ஆராதிக்கிறாயா? அல்லது உனக்கும், உன் தேவனுக்கும் நடுவே வேறே ஏதாவது, அல்லது வேறே யாராவது உன் ஆராதனைக்கு உரியவர்களாக உள்ளார்களா?

உனக்காக அனைத்தையும் தியாகம் செய்த கிறிஸ்துவுக்கு, உன்னுடைய அனைத்தையும் அர்ப்பணம் செய்! அதுவே நீ செய்யும் புத்தியுள்ள ஆராதனை!

 
உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Advertisements