Archive | May 31, 2011

மலர்1:இதழ்: 107 மனசோர்பு என்ற பட்டயம்!

எண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.”

என்னுடைய இளவயதில் தமிழ் மொழி கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தைப் பற்றி பார்க்கப்போவதில்லை! பட்டயத்தால் உருவக்குத்தினதைப் போல் இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனசோர்புகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.

இந்த மனசோர்புகள் ஒருவேளை நம்முடைய விறுவிறுப்பான வேலைகளின் மத்தியில் ஒளிந்து கொண்டிருக்கலாம்! ஆனால் தக்க சமயம் வரும்போது வெளியே தலைகாட்டி, நம்முடைய ஆத்துமாவின் ஆவிக்குரிய ஜீவியத்தை மாத்திரம் அல்ல, நம்முடைய சரீரத்தையும் அதிகமாக பாதித்துவிடுகிறது!

இன்று பட்டயங்களைப் போல நம்மைக் அழிக்கும் மூன்றுவிதமான மனசோர்புகளைப் பற்றிப் பார்ப்போம்!

1. நம்முடைய விசுவாசத்தை அழிக்கிறது மனசோர்பென்ற பட்டயம்! நாம் வாசித்த இந்தப்பகுதியில் இஸ்ரவேல் மக்களுடைய விசுவாசம் உருக்குலைந்தது. அவர்கள் பிரயாணம் பண்ணின வழியைக்குறித்து மனமடிந்தார்கள். கர்த்தரின் வழிநடத்துதலை மறந்துபோனார்கள். முன்னும் பின்னுமாய் மேகஸ்தம்பமாய், அக்கினிஸ்தம்பமாய் வழிநடத்தினவரின் மேல் சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் வாக்குத்தத்தங்கள் மறந்து போய்விட்டன! ஒரு நண்பர் இவ்வாறு கூறினார்: கர்த்தர் உனக்கு ஒளியில் கொடுக்கும் வாக்குதத்தங்களை உன் வாழ்வில் இருள் சூழும்போது மறந்து போய்விடாதே என்று. இஸ்ரவேல் மக்களோ வழி கடினமான போது, இருள் சூழ்ந்தபோது மனசோர்படைந்து விசுவாசத்தை இழந்தார்கள்.

2. நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கவைக்கிறது மனசோர்பென்ற பட்டயம்! மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பிரயாணத்தை நம்மால் முடிக்க முடியும் என்ற தன்நம்பிக்கை போய்விட்டது! கல்லும் முள்ளும் நிறைந்த பிரயாணம் என்னால் இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தைக் கொடுத்தது! அவர்களைத் தம் கரங்களில் ஏந்துகிற, சுமக்கிற தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருப்பதை மறந்து போனார்கள்1 கர்த்தர் மேல் நம்முடைய விசுவாசம் குறைவுபட்டவுடனே, கர்த்தர் நம்மோடிருப்பதை மறந்துவிட்டு, நான் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பேன், எனக்கு பெலன் இல்லையே என்று புலம்ப ஆரம்பிக்கிறோம். வாழ்வென்னும் படகு புயலில் சிக்கும்போது நமது தன்னம்பிக்கை முற்றும் அழிந்து போகிறது! நம் வாழ்வே தோல்வியாய்த் தெரிகிறது!

3. மற்றவர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது இந்த மனசோர்பென்ற பட்டயம்! மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் மேல் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள், தங்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள் அதுமட்டுமல்ல, ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குள் சண்டையும், சச்சரவும், புறம்பேசுதலும், முறுமுறுப்பும் அதிகரித்தன. நம் வாழ்விலும் மனசோர்பென்ற பட்டயம் தாக்கும்போது, நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம்? நம் கணவரிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுவதில்லையா? மூன்றுமுழ நீழத்துக்கு முகத்தை தூக்குவதில்லயா?

மனசோர்பு என்னும் பட்டயம் உன்னை உருருவித் தாக்கவிடாதே! அது கர்த்தர்மேல் உள்ள உன் விசுவாசத்தை அழித்துவிடும், உன் தன்னம்பிக்கையை அழித்துவிடும், உன்னை மற்றவர்களைவிட்டு பிரித்துவிடும்!

கல்லும் முள்ளுமான பாதையானாலும் கர்த்தர் உன்னோடிருக்கிறார்! உன் கால் வைக்கமுடியாத பாதையில் அவர் கரம் உன்னை ஏந்தும்!

உன்னுடைய கடந்த காலத்தையும், எதிர்காலத்தையுமே அதிகமாக நினைக்காமல், ஒவ்வொரு நிமிடமும் கிறிஸ்துவுக்காக எதை பேசுகிறாய், எதை செய்கிறாய் என்றே சிந்தி! மனசோர்புக்கு இடம் கொடாதே! ஏனெனில்

“…அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்…” (சங்கீ:37:28)

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Advertisements