கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்?

1 சாமுவேல் 13: 9  அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.

சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன் என்ற குணம்!

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத செயலைத்தான் சவுல் செய்கிறதைப் பார்க்கிறோம். தகனபலிகளை செலுத்தும் உன்னத பணியைக் கர்த்தர்  லேவியருக்குக் கொடுத்திருந்தார்.  சவுலோ பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவன். தகனபலிகளை செலுத்தும் உரிமை சவுலுக்குக் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல சாமுவேல் தீர்க்கதரிசி அவனைக் காத்திருக்கும்படி கூறியிருந்தார். ஆனால் சாமுவேல் வரத் தாமதித்த சந்தர்ப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சவுல் ஆசாரியர்  ஊழியத்தை செய்யத்துணிவதைப் பார்க்கிறோம்.

சவுல் இந்த ஒருமுறைமட்டுமல்ல பலதடவை சந்தர்ப்பத்தை சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டதால் அவன் வாழ்க்கை மட்டுமல்ல இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையும் அவஸ்தைக்குள்ளாயிற்று.

எவ்வளவு சீக்கிரத்தில் சவுல் தான் யார் என்பதை மறந்துவிட்டு தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாக சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தினான் என்று பாருங்கள்.

தேவனுடைய குமாரானனான இயேசு கிறிஸ்துவானவர் சந்தர்ப்பத்து ஏற்றவாறு நடக்கக்கூடிய சூழ்நிலையை சாத்தான் மூன்று முறை ஏற்படுத்தினான் என்று வேதத்தில் படிக்கிறோம். நாற்பது நாட்கள் உபவாசத்துக்குப்பின் கடும்பசியில் இருந்த ஒருவரிடம் உன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி இந்தக் கற்களை அப்பமாக்கி சாப்பிடு, என்னை மட்டும் வணங்கு இந்த உலகமே உனக்கு,  கீழே தாழக்குதி தேவதூதர்கள் தாங்கட்டும் என்றான். நாமாயிருந்தால் அந்த வேளையில் அதுதான் சரி என்று நினைத்திருப்போம். ஆனால் சகல அதிகாரமும் கொண்ட கர்த்தராகிய இயேசுவோ தம்முடைய பிதாவின் சித்தத்தை தம்முடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தியல்ல, தம்முடைய கீழ்ப்படிதலின் மூலம் நிறைவேற்றினார் என்று பார்க்கிறோம்.

இன்று நீயும் நானும்  சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? சவுல் பக்கம் சூழ்நிலை சாதகமாயிருந்தாலும் அவன் செய்த காரியம் கீழ்ப்படியாமை அல்லவா?

 கர்த்தராகிய இயேசுவை நாம் அறிந்திருப்பதையும், அவரை நாம் நேசிப்பதையும் இந்த உலகத்துக்கு காட்டும்  ஒரே அடையாளம் நாம் அவருக்குக் கீழ்ப்படிவதுதான்! வாயினால் செய்யும் ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment