Archive | January 11, 2019

இதழ்: 600 ஒரு தடையும் இல்லை! தைரியமாயிரு!

1 சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.

கடவுள் எப்படி என் தேவைகளை அறிந்து எனக்காக யாவையும் செய்ய முடியும்! அவர் என்ன நம் அருகில் இருக்கிறாரா?  என்னைப்போல் எத்தனை கோடி மக்கள் தங்களை அவருடைய பிள்ளைகள் என்கிறார்கள்! அத்தனைபேரில் சத்தமும் அவர் காதில் விழுமா? என்று என்றாவது நினைத்ததுண்டா?

அப்படியானால்  சவுலின் குமாரன், பட்டத்து இளவரசன், யோனத்தான் வாயினின்று புறப்பட்ட இந்த ஞானமான, நம்பிக்கையான வார்த்தைகளை சற்றுக் கேளுங்கள்!

சவுல் ஒன்றும் பெலிஸ்தியருக்கு எதிரே தன் வீரத்தைக் காட்டாததால் ஜனங்கள் அவஸ்தைக்குள்ளாகி, பயத்தில் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளித்துக் கொண்டனர் என்று படித்தோம்.

ஆனால் யோனத்தானோ தன் தகப்பனின் தலைகனமான வழியில் செல்லவில்லை! அதற்குபதிலாக யோனத்தான் தன் சேனை வீரரோடு பெலிஸ்தியரின் சேனை இருந்த தாணையத்துக்குப் போக முடிவு செய்தான்.

எத்தனை தைரியம் பாருங்கள்! ஆனால் இது அவன் ஆணவத்தால் எடுத்த முடிவு அல்ல! அவனுடைய இருதயத்தை தான் அவன் வாய் பேசிற்றே! என்ன சொல்கிறான் பாருங்கள்!

அவன், ‘ ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்’ என்று பார்க்கிறோம்.

பெலிஸ்தியரின் சேனை எத்தனைத் திரளாயிருந்தாலும் பரவாயில்லை, கர்த்தர் நம்மை ரட்சிக்க நினைப்பாராயின் அதற்கு எதுவும் தடையாக நிற்க முடியாது என்பது அவனது அசைக்கமுடியா நம்பிக்கை!

இன்று தேவனாகிய கர்த்தர் உன் வாழ்வில் கொடுக்க நினைக்கும் ஆசீர்வாதங்களை யாரும், எதுவும் தடை செய்ய முடியாது.

இன்று நீ ஒருவேளை ஒரு ப்லத்த சேனையை எதிர்க்க முடியாத பெலவீனனாக உனக்குத் தெரியலாம். ஐயோ! எனக்கு விரோதமாக இருக்கும் பொய்சாட்சிகள் அநேகம் நான் என்ன செய்வேன் என்று நினைக்கலாம். கர்த்தர் உன்னை ரட்சிக்க நினைத்தால் எல்லாம் அதமாகிவிடும்!

அவர் உன்னைக் காக்கவும், இரட்சிக்கவும், உனக்கு பதிலளிக்கவும் இந்த உலகில் எந்தத் தடையுமில்லை!  அவர் எவ்வளவு உயரத்தில்இருந்தாலும் சர், எத்தனை சத்தம் அவர் செவிகளில் விழுந்தாலும் சரி,  அவர் உன் சத்தத்தை அறிவார்! உனக்கு வரும் உதவி தடைபடாது! தைரியமாய்  நம்பு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

இதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்?

1 சாமுவேல் 13: 9  அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.

சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன் என்ற குணம்!

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத செயலைத்தான் சவுல் செய்கிறதைப் பார்க்கிறோம். தகனபலிகளை செலுத்தும் உன்னத பணியைக் கர்த்தர்  லேவியருக்குக் கொடுத்திருந்தார்.  சவுலோ பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவன். தகனபலிகளை செலுத்தும் உரிமை சவுலுக்குக் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல சாமுவேல் தீர்க்கதரிசி அவனைக் காத்திருக்கும்படி கூறியிருந்தார். ஆனால் சாமுவேல் வரத் தாமதித்த சந்தர்ப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சவுல் ஆசாரியர்  ஊழியத்தை செய்யத்துணிவதைப் பார்க்கிறோம்.

சவுல் இந்த ஒருமுறைமட்டுமல்ல பலதடவை சந்தர்ப்பத்தை சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டதால் அவன் வாழ்க்கை மட்டுமல்ல இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையும் அவஸ்தைக்குள்ளாயிற்று.

எவ்வளவு சீக்கிரத்தில் சவுல் தான் யார் என்பதை மறந்துவிட்டு தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாக சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தினான் என்று பாருங்கள்.

தேவனுடைய குமாரானனான இயேசு கிறிஸ்துவானவர் சந்தர்ப்பத்து ஏற்றவாறு நடக்கக்கூடிய சூழ்நிலையை சாத்தான் மூன்று முறை ஏற்படுத்தினான் என்று வேதத்தில் படிக்கிறோம். நாற்பது நாட்கள் உபவாசத்துக்குப்பின் கடும்பசியில் இருந்த ஒருவரிடம் உன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி இந்தக் கற்களை அப்பமாக்கி சாப்பிடு, என்னை மட்டும் வணங்கு இந்த உலகமே உனக்கு,  கீழே தாழக்குதி தேவதூதர்கள் தாங்கட்டும் என்றான். நாமாயிருந்தால் அந்த வேளையில் அதுதான் சரி என்று நினைத்திருப்போம். ஆனால் சகல அதிகாரமும் கொண்ட கர்த்தராகிய இயேசுவோ தம்முடைய பிதாவின் சித்தத்தை தம்முடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தியல்ல, தம்முடைய கீழ்ப்படிதலின் மூலம் நிறைவேற்றினார் என்று பார்க்கிறோம்.

இன்று நீயும் நானும்  சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? சவுல் பக்கம் சூழ்நிலை சாதகமாயிருந்தாலும் அவன் செய்த காரியம் கீழ்ப்படியாமை அல்லவா?

 கர்த்தராகிய இயேசுவை நாம் அறிந்திருப்பதையும், அவரை நாம் நேசிப்பதையும் இந்த உலகத்துக்கு காட்டும்  ஒரே அடையாளம் நாம் அவருக்குக் கீழ்ப்படிவதுதான்! வாயினால் செய்யும் ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்