1 சாமுவேல் 22: 1, 2 தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான். அங்கே ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள். அவன் அவர்களுக்குத் தலைவனானான்.
தாவீது அதுல்லாம் என்ற கெபியிலே ஒளிந்து கொண்டிருந்தான். அங்கே தாவீதின் குடும்பம் அவனை சந்தித்தது என்று பார்த்தோம்.
இன்றைய வேத வசனம் சொல்கிறது அவனைசுற்றி ஒரு கூட்டமே இருந்தது என்று! நானூறு பேர்! தாவீதின் இன்னொரு குடும்பமாக மாறிய இவர்களின் பெயர், ஒடுக்கப்பட்டவர்கள்! கடன்பட்டவர்கள்! முறுமுறுக்கிறவர்கள்!
என்ன சுவாரஸ்யம்! நீ இன்று மேலே குறிக்கப்பட்ட நபர்களை வீட்டுக்கு கூட்டிவந்து அப்பா அம்மாவிடம், அல்லது மனைவியிடம் இவர்கள்தான் என் நண்பர்கள் என்றால் எப்படியிருக்கும்???? என்ன கிடைக்கும்????
அப்படியானால் இவர்களை ஏன் தாவீது சேர்த்துக்கொண்டான்? அவர்கள் தாவீதிடம் பாதுகாப்பாக இருந்தது தான் காரணம்! யாரும் ஏற்றுக்கொள்ளாதவர்கள், யாரையும் பார்க்க முடியாதவர்கள், தாங்கள் யாருக்கும் தேவையில்லை என்ற நிலைக்கு வந்தவர்கள் தான் தாவீதை நாடி சென்றனர்.
தாவீதைக் கர்த்தர் தன்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒருவன் என்று ஏன் சொல்லியிருப்பார் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு! நாம் எல்லோரும் தாவீதைப் பிடித்துக்கொள்வது அவன் பத்சேபாளுடன் பாவம் செய்ததைத்தான். தாவீதுடைய பாவத்தை மன்னித்தது போல நம்மையும் மன்னிப்பார் என்பது நமக்கு ஆறுதலாக அமைவதால்தான்.
ஆனால் தாவீதுடைய இந்த அற்புதமான குணாதிசயத்தைப் பாருங்கள்! ஜாதி மத வேறுபாடு இல்லை! வாழ்க்கையில் வெறுக்கப்பட்ட எல்லோரையும் ஏற்றுக்கொண்டு உதவும் மனப்பக்குவம்! ஊரில் உன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையா தாவீது ஏற்றுக்கொள்வான்! இன்று நம்மில் எத்தனைபேருக்கு இந்த குணம் உண்டு?
கிறிஸ்தவர்களாகிய நமக்குள் எத்தனை வேற்றுமைகள்! நம்முடைய திருச்சபைக்குள் ஜாதி வேறுபாடுகள் உண்டு அல்லவா! ஏழை பணக்காரர் வேறுபாடுகள்? நம்மை அறியாமலே சிலரை நாம் வேறுபடுத்தி பார்ப்பதில்லையா? அவர்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று நாம் கோடு வரைவதில்லையா?
இயேசு கிறிஸ்து இவர்களைத்தான் ‘எளியவர்களாகிய இவர்களுக்கு எதை செய்தீர்களோ’ என்று குறிப்பிட்டார்.
ஒருநாள் இயேசுவுடன் அநேக ஆயக்காரரும், பாவிகளும் அவரோடே பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக்கண்டு இவர் ஏன் பாவிகளோடு போஜனம் பண்ணுகிறார் என்றதற்கு இயேசு, பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார் என்று மத்தேயு 9: 10 -12 ல் வாசிக்கிறோம்.
தாவீதைப் போல நம்மை சுற்றியிருக்கும் நலிந்து, மெலிந்து, வாழும் ஒடுக்கப்பட்டோரை, ஏழை எளிய மக்களை வேறுபாடன்றி நேசிக்கும் இருதயம் நமக்கு இன்று உண்டா? நமக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் செல்வத்தை ஏழை எளியவரோடு பகிர்ந்து கொள்கிறோமா?
கர்த்தர் தாவீதின்மேல் பிரியமாயிருந்ததற்கு அவன் ஒதுக்கப்பட்டோரை நேசித்ததும் ஒரு காரணம் அல்லவா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்