நியாதிபதிகள்: 16:5 “அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்”.
இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்போது எப்பொழுதும் பணம் பணம் என்று அலையும் இந்த சமுதாயத்திற்காகவே சிம்சோனின் கதை எழுதப்பட்டது போல எனக்குத் தோன்றியது.
நியாதிபதிகள் 16:4 ல் சிம்சோன் தெலீலாளை சிநேகித்தான் என்று எழுதியிருக்கிறது. ஆனால் தெலீலாள் பதிலுக்கு அவனை சிநேகித்ததாகத் தெரியவேயில்லை. அதற்கு எதிர்மாறாகத்தான் தெரிகிறது.
நியாதிபதிகளின் சில அதிகாரங்களை பின்னோக்கிப் பார்ப்போமானால் இந்தப் பெலிஸ்தருக்கு பெரிய ராஜ்யம் எதுவும் இல்லை என்று நமக்குத் தெரியும். அவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெலவீனத்தை நன்கு அறிந்து கொண்டு இஸ்ரவேலின் எல்லைக்குள் புகுந்து ஒவ்வொரு கோத்திரமாகக் கைப்பற்றி, கடைசியில் எல்லாக் கோத்திரங்களையும் தம் வசப்படுத்தினர்.இந்த ராணுவ வெற்றிக்கு காரணம் பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளே என்றும் பார்க்கிறோம்.
ஆனால் அந்த ஐந்து அதிபதிகளுக்கும் சிம்சோன் என்ற முள் குத்திக்கொண்டேயிருந்தது. பலமுறை அவர்கள் அவனுடைய பலத்தின் இரகசியத்தை அறிய முயற்சி செய்தும் சிம்சோன் அவர்களை ஏளனத்துக்குள்ளாக்கி ஏமாற்றி வந்தான்.
அவர்கள் தோல்வியின் உச்சியில் நின்றுகொண்டுதான், அவன் மீது அன்பு காட்டுவதுபோல் நடித்து, அவனுடைய பலத்தின் இரகசியத்தை அறிய, ஒரு அனுபவம் மிக்க ஆளைத் தேடினார்கள். இதோ! அவர்களுடைய தேடலில் சரியான வேட்பாளர் கிடைத்து விட்டாள்!
இந்த ஐந்து அதிபதிகளும் தெலீலாளிடம் ஒரு ஆவலைத் தோண்டும் வாய்ப்போடு அணுகினர்.ஒவ்வொரு அதிபதியும் அவளுக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு கொடுப்பதாகக் கூறினர். மொத்தமாக 5500 வெள்ளிக்காசுகள்!
இந்தப் பணம் எவ்வளவு பெரியது என்று நீங்கள் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம், யோசேப்பை அவன் சகோதரர் 20 வெள்ளிக்காசுக்கு விற்றனர்!, யூதாஸ் என்பவன் இயேசு கிறிஸ்துவை 30 வெள்ளிக்காசுகளுக்கு விற்றான்! இங்கு பெலிஸ்தரின் அதிபதிகள் 5500 வெள்ளிக்காசுகளை சிம்சோனுக்கு விலையாகப் பேசினார்.
தெலீலாள் 5500 வெள்ளிக்காசுகளைப் பார்த்ததும் வாயைப்பிளந்து விட்டாள் என்று நாம் அந்தப் பெண்ணைப் போட்டுத் தாக்கமுன்னர், அவள் நிலையில் இருந்து சற்று சிந்திப்போம். சிம்சோனின் திம்னாத் சம்பவம் பெலிஸ்தர் அனைவரும் அறிந்ததே! அவனுடைய பழிவாங்கும் கொடூர குணத்தால் ஒரு பாவமும் அறியாத அவன் மனைவியும், அவள் குடும்பமும் தீக்கிரையானதும் அவள் அறிந்திருப்பாள். சிம்சோனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த பெலிஸ்தரின் வேவுக்காரர் தெலீலாளிடம் அவன் காசாவில் வேசியிடம் சென்றதையும் விவரித்திருப்பார்கள்.
நீங்களும் நானும் தெலீலாளின் இடத்தில் இருந்திருந்தால் இந்த காமம் நிறைந்தவனை என்ன செய்திருப்போம்? நம்முடைய நாட்டின் பெண்களை இவன் இனி அழிக்கக்கூடாது என்று அவனைப் பிடித்து அதிபதிகளிடம் கொடுத்திருபோமல்லவா? அதோடு நமக்கு வெகுமதியும் கிடைத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தட்டியிருப்போம்!
தெலீலாளின் செயலுக்கு பெலிஸ்தரின் அதிபதிகள் பேசிய விலையைக் கொடுத்தார்களோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது ஆனால் தெலீலாள் போன்ற பெண்களோடு விளையாடியதற்கு சிம்சோன் தன் உயிரையே விலையாக கொடுக்கவேண்டியிருந்தது.
லூக்கா 22:3 -6 ல் நாம் வாசிக்கிறோம்,” அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலவர்களிடத்திலும் போய் அவரக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான். அவர்கள் சந்தோஷப்பட்டு அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்” என்று.
யோசேப்பின் சகோதரருக்குப் பணங்கிடைத்தது! தெலீலாளுக்கு பணங்கிடைத்தது! யூதாஸுக்கும் பணங்கிடைத்தது! மிகப்பெரிய பணம் கிடைத்தது!
ஆம் தெலீலாள் போன்ற பாவத்தோடு விளையாடியதற்கு , சிம்சோனைப் போல நாமும் நம் ஆத்துமாவையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது! அந்த ஆத்துமாவை சாத்தானிடமிருந்து திரும்பப் பெற பிதாவானவர் தம்முடைய ஒரே பேரான குமாரனையே விலையாகக் கொடுத்தார்! நீ அவருடைய பார்வையில் விலைமதிப்பற்றவனாய் காணப்பட்டபடியால் அவர் உனக்காக தன் குமாரனையே விலையாக்கினார்!
இன்று தெலீலாளிடமிருந்து கற்றுக்கொள்! எத்தனை ஆயிரம் வெள்ளிக்காசுகளை அள்ளிக்கொடுத்தாலும் அவை நம் ஆத்துமாவுக்கு நிகரல்ல! நாம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்