கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 660 பொல்லாங்கை விட்டு விலகு!

1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

குறி சொல்கிறவர்கள், பில்லி சூனியம் செய்கிறவர்கள், மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என்று பலவிதமானவர்கள் நம்முடைய நாட்டில் நம்மை சுற்றி இருக்கிறார்கள். விக்கிரகாராதனையாலும், ஆவிகளாலும் நடத்தப்படும் இவர்களைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.

கர்த்தருடைய கட்டளைக்கு இணங்க, குறிசொல்லுபவர்களும், அஞ்சனம் பார்ப்பவர்களும் இஸ்ரவேலை விட்டுத் துரத்தப்பட்டனர் என்று 28 ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இஸ்ரவேலில், வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்லவராகிய கர்த்தர்  ஒருவரே ஆராதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

சவுல் பெலிஸ்தியரின் பாளயத்தைக்கண்டு பயந்து கர்த்தரை விசாரிக்கும்போது அவனுக்கு எந்தப்பதிலும் கிடைக்கவில்லை. தீமையோடு விளையாடிக்கொண்டிருந்த அவனுக்கு ஆலோசனைக் கொடுக்க கர்த்தர் அவனோடு இல்லை.

ஆதலால் சவுல் ராஜா தன் ஊழியக்காரரைப் நோக்கி, அஞ்சனம் பார்க்க ஒருவரைத் தேடுமாறு கூறினான். அவனுடைய ஊழியர் அவனை உடனே எந்தோரில் இருக்கும்  ஆவிகளோடு தொடர்ப்புள்ள ஒரு பெண்ணிடம் அனுப்பினர்.

இன்றைய வேத பகுதியில்,அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள் என்ற வார்த்தை என் கருத்தைக் கவர்ந்தது. வேதம் முழுவதும் தீமையை விட்டு விலகும்படி கர்த்தர் உத்தரவு கொடுத்திருக்க, இங்கு ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும், தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்தது மட்டுமல்லாமல், ஆபத்து தலைக்கு மேல் வந்தபோதும் பொல்லாங்கைத் தேடுகிறான் என்று பார்க்கிறோம். அவன் ஏதோ தீமையை எதிர்பாராத விதமாக சந்திக்க வில்லை! அதைத் தேடிப் போகிறான்!

பவுல் 1 தெசலோனிக்கேயர் 5:22ல் பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள் என்று கூறுகிறதைப் பார்க்கிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில்  போதை மருந்துக்கு அடிமையான வாலிபருக்காக ஏற்படுத்தப்பட்ட மறுவாழ்வு மையத்தில் நாங்கள் ஒருவருட பயிற்சிக்காக அனுப்பப்பட்டோம். அங்கு இருந்த வாலிபருக்கு ஒரு விதி வழங்கப்பட்டிருந்ததை நான் கவனித்தேன். அவர்கள் சில இடங்களுக்கு போகவேக் கூடாது, சிலரை சந்திக்கவேக் கூடாது. அந்த இடங்களில் அவர்களுக்கு சலனம் அதிகம் இருக்கும் என்றதால் தான் அந்த விதிமுறை கொடுக்கப்பட்டது.

நம்  ஒவ்வொருவருக்கும்  சலனம் வேறு வேறு வழிகளில் வரலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தை ஒன்றுதான்! பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்!

சிங்கம் இருக்கிறது என்று அறிந்து, அதின் குகைக்குள் நடக்கலாமா? அதைதான் சவுல் செய்தான்! பொல்லாங்கைத் தேடிப் போனான். எத்தனை பரிதாபமான செயல்!  அவனை நேசித்த, அவனை சிறுமையிலிருந்து தூக்கிய, இஸ்ரவேலின் ராஜாவாக்கிய, கிருபையும், இரக்கமும் நிறைந்த தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டு பொல்லாங்கைத் தேடிக் கொண்டான்!

பொல்லாங்கைத் தேடிய சவுலின் வாழ்க்கை நல்லபடியாக முடியவில்லை என்பது எனக்கும் உங்களுக்கும் இன்று ஒரு பாடமாக அமையட்டும்!

ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். (யாக்:4:7)

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

(contact me at premasunderraj@gmail.com)

 

 

 

 

Leave a comment