Archive | October 11, 2019

இதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்!

2 சாமுவேல் 13:4  அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்என்றான்.

நாம் தொடர்ந்து படிக்கும் அம்னோன் தாமார் என்ற இருவரின் வாழ்க்கையில் இன்று தாவீதின் குமாரனாகிய அம்னோனின் வாயிலிருந்து புறப்பட்ட சுவாரஸ்யமான வார்த்தைகளைப் பார்க்கிறோம். அவனது நண்பனும் உறவினனுமான யோனதாப் வற்புறுத்தி கேட்டதால் அம்னோன் தன்னுடைய நோய்க்கு  காரணம் தான் இதுவரை வெளிப்படுத்தாத, தன் சகோதரிமேல் தான் கொண்டுள்ள  ஆசை என்று சொல்கிறான்.

அம்னோன் இங்கு தாமார் மேல் ஆசை வைத்திருப்பதாக சொல்கிறான் ஆனால் நாம் வரும் நாட்களில் படிக்கும்போது அவள் மீது அவன் அன்போ ஆசையோ வைக்கவில்லை அவளை இச்சிக்க மட்டுமே செய்தான் என்று தெரிய வரும்.

இன்று நான் இதை எழுதும்போது ஒவ்வொரு மனிதனையும் தாக்கும் இந்த இச்சையைப் பற்றி அநேக கிறிஸ்தவ நூல்கள் பேசுவதில்லை என்பதை உணர்ந்தேன். இதை எழுதும் ஞானத்துக்காக ஜெபித்தபோதுதான் தாவீதையும் அவன் குடும்பத்தையும் சுற்றிக்கொண்டிருந்த அநேக சிலந்தி வலைகள் என் மனதில் பட்டன!

தாவீதின் குடும்பத்துக்குள், பல பெண்களை மணப்பது, மற்றொருவனுடைய மனைவியை அடைவது, அதற்காக அவளுடைய கணவனையே கொலை செய்வது போன்ற பல பரிசுத்தமற்ற செயல்கள் நடைபெற்றன! ஐயோ பாவம்! தாவீதின் பிள்ளைகள் தங்களுடைய தகப்பனிடம் எந்த சுய கட்டுப்பாட்டையும் பார்க்காமல் தான் வளர்ந்தனர்.

அம்னோன் தன் சகோதரிமேல் ஆசை வைத்ததாகக் கூறுகிறான்? இந்த வார்த்தை எங்கு கிடைத்தது? தாவீது ஒருநாள் இரவுக்காக பத்சேபாள் மீது ஆசை வைத்தானே அங்கிருந்தா? நம்மை சுற்றி நடப்பவைதானே நாம் சில வார்த்தைகளை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கின்றன?

அவன் ஆசை என்று சொன்னதைப் பார்த்தவுடன் நான் இச்சைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். நாம் இச்சை என்ற வார்த்தையை வெறும் உடல் உறவோடு கட்டுப்படுத்த முடியாது! இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘ இன்னும் அதிகமாகப் பெற ஆசை’ என்ற அர்த்தத்தையும் படித்தேன். அது சிற்றின்பமாக இருக்கலாம்! பணவெறி யாக இருக்கலாம்! பதவி புகழ் என்ற ஆசையாக இருக்கலாம்! மென்மேலும் அடைய வெறியோடு கூடிய ஆசை!

பரிசுத்தமற்ற இச்சைகள் நம்மை பரம பிதாவின் அன்பைவிட்டு பிரித்து விடும் என்று வேதம் நம்மை பலமுறை எச்சரிக்கிறது!

என்னை நேசிக்கும் என்னுடைய தேவனுடைய பிரசன்னத்தை விட்டு என்னை வெளியே தள்ளும் எந்த  பரிசுத்தமற்ற இச்சையும், ஆசையும், அது பணமோ, புகழோ, சிற்றின்பமோ அல்லது எதுவாயினும் என்னை அணுகும்போது நான் எனக்குப் பிடித்த ஒரு ஆங்கிலப்பாடலைப் பாடி ஜெபிப்பது வழக்கம். அது நம்முடைய பாமாலையில் இவ்விதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா

கேட்டு உம்மை அண்டினேன்

இன்னும் கிட்டி சேர ஆண்டவா

ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்

கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்

கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா!

இன்று உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எந்த இச்சையும், ஆசையும் உங்களை தேவனாகிய கர்த்தரை விட்டு பிரித்து விடாதிருக்க ஒவ்வொருநாளும் ஜெபியுங்கள்! இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளும் ஆண்டவரே  என்று ஊக்கமாக  ஜெபிப்போம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்