Archive | October 14, 2019

இதழ்: 769 மசாலா சேர்ந்த மாபெரும் நடிப்பு!

2 சாமுவேல் 13:5 அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள். உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம் கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவு செய்யவேண்டும் என்று சொல் என்றான்.

இந்த உலகத்தின் எல்லா மூலைகளிலும் உண்மை காணாமல் போய் விட்டது என்பதை  நாம் ஒவ்வொருநாளும் டிவியில் பார்க்கும் செய்திகள் காட்டுகின்றன அல்லவா?  அப்பா! இப்படி கூடவா நடக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லையா? எவ்வளவு ஏமாற்றுத்தனம்! அரசியல்வாதியிலிருந்து போதகர்கள் வரை நாம் எத்தனை மோசடிகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்!

அம்னோன் தான் விரும்பியதை அடைய அவனுடைய நண்பனும் சகோதரனுமான யோனதாப் அவன் சொல்லும்படி ஒரு கட்டுக் கதையை இட்டுக்கட்டி கொடுக்கிறதை  நாம் இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம்.

இந்த இரண்டு நண்பர்களும் அம்னோன் விரும்பியதை எப்படியாவது அடைய ஒரு கதையை உருவாக்குகிறார்கள். நல்ல மசாலா சேர்த்த கதை! அம்னோன் வியாதிக்காரன் போல் நடிப்பதும் அதில் சேர்க்கப்பட்ட ஒரு மசாலா தான்!

இங்கு யோனதாப் செய்கிற வேலையைப் பார்க்கும்போது அவன்  ஒரு மேய்ப்பனைப்போல வேஷம் தரித்த ஓநாயைப்போல என் கண்களுக்கு தெரிந்தான்!  அம்னோனுக்கு உதவி செய்ய வந்த நண்பனாகவும் உறவினனாகவும் அவன் தோன்றினாலும், உண்மையில் அவன் ஒரு விஷம் கொண்ட பாம்பு!  அவனுடைய திட்டமே அம்னோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதை ஏமாற்ற வேண்டும்! அதற்க்காக போட்ட திட்டம்தான் இது!

யோனதாப் திட்டமிட்டபடி நாடகம் அரங்கேறியது! அது நாடகம் என்று தெரியாமலே தாவீது அந்த திட்டத்துக்கு பலியானான். ஒரு நிமிடம்! தாவீது மாத்திரம் என்ன? திட்டம் தீட்டி உரியாவைக் கொன்றவன் தானே! இப்பொழுது அவனே பலியாகி, தன்னுடைய சொந்த குமாரத்தியாகிய தாமாரை உபயோகப்படுத்தவும், கற்பழிக்கவும், ஏமாற்றவும் ஏற்படுத்தப்பட்ட   கண்ணியில் விழும்படி அனுப்புகிறான்.

திட்டமிட்டு ஏமாற்றுவது எத்தனைக் கொடியது என்றும் அதை அனுபவிப்பவர்களுக்கு அது எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதையும் அறிந்த நமக்கு, பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் என்ன சொல்கிறார் பாருங்கள்!

கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ,அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.  ( பிலி: 4:7)

உண்மையையும், ஒழுக்கத்தையுமே நாம் ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்க வேண்டும் என்ற பவுலின் அறிவுறை கிறிஸ்தவர்களாகிய நமக்கு எவ்வளவு தேவையான ஒன்று!

நான் என்றும் மதிக்கும் தேவனுடைய ஊழியர் டி.எல். மூடி பிரசங்கியார் அவர்கள் இதை அழகாக கூறியுள்ளார்.

ஒரு நேரான குச்சியை அது கோணலானது அல்ல என்று நிரூபிக்க நாம் வாக்குவாதம் செய்யவேண்டியதில்லை. அந்த குச்சிக்கு  நேராக இன்னொரு குச்சியை வைத்தால் அதுவே நிருபணமாகிவிடும்.

இயேசு ராஜாவின் பிள்ளைகளாகிய நாம் உண்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்து இந்த உலகத்தில் நேரானா குச்சிகள் நாம் என்று நம்முடைய நடத்தையின் மூலம் இந்த உலகத்துக்கு காட்டுவோம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்