Archive | October 18, 2019

இதழ்: 773 கடந்த காலத்தின் தழும்பு மாறுமா?

2 சாமுவேல் 13: 14-17  அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்……அப்பொழுது அவள் நீர் எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும்  இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம்  கொடுமையாயிருக்கிறது என்றாள்….. தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளிக் கதவைப் பூட்டு என்றான்.

தாமார் தன்னுடைய அண்ணன் சுகவீனப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்றும் தன் தகப்பனாகிய தாவீது சொல்லி அனுப்பிய வார்த்தைக்கு இணங்கி அம்னோன் இருந்த அறைக்கு வந்தாள்.

ஆனால் அம்னோனின் அறைக்கு வந்தபின்னர் தன்னைக் கற்பழிக்க திட்டமிட்டுப்  போட்ட நாடகம் என்று புரிந்தவுடன் அவள் உள்ளம் எப்படி கொதித்திருக்கும்!

அவன் யாரை அடையாமல் தான் வாழ முடியாது என்று அடம்பிடித்து மெலிந்து நலிந்து போனானோ அவளை அடைந்தவுடன் அவளைக் கோபுரத்தில்  வைத்துக்  கொண்டாடாமல் குப்பையில் தள்ளுவதுபோல வெளியே துரத்துகிறான். அவள் இனி அவனுக்குத் தேவையில்லாத குப்பை போல ஆகிவிட்டாள். அவள் தேவையே இல்லை!  அவள் முகத்தைப் பார்த்தால் வரும் குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை! அவளை உதறித் தள்ளுகிறான்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இத்தனை பொல்லாப்பான அவன் அவளைக் கொலை செய்யாமல் விட்டானே என்றுதான்!  ராஜகுமாரன் என்ற கர்வத்தில் அவன் அதைக்கூட செய்யத் துணிந்திருக்கலாம்! ஆனால்  அவளைத் தள்ளிவிட்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான்.

துரதிர்ஷ்டவசமாக இன்றும் தாமார் போலப் பெண்கள் உபயோகப்படுத்தப்பட்டு,தூக்கி எறியப்படுவதை பார்க்கிறேன். சமீப காலத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்களை தங்கள் ஆசைப்படி உபயோகப்படுத்திவிட்டு அதை வீடியோவும் எடுத்து அவர்கள் அதை வெளியே சொல்லாதபடி பயமுறுத்தி வைத்த பெரிய விஷயம் நடந்தது நம்முடைய தமிழ்நாட்டில்தானே! ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அடையாளம் இல்லாமல் எரித்து சாம்பலாக்கிய  சம்பவம் நடந்தது என்னுடைய  வீட்டிலிருந்து பத்தே நிமிட தூரத்தில்தான்!  காவல் வேலை செய்த பலர் சேர்ந்து மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை கற்பழித்த செய்தி நம்முடைய தமிழ்நாட்டையே கலங்க செய்ததே அதுவும் நான் வாழும் சென்னை நகரில் நடந்ததுதான்!

இன்னும் மனசாட்சியே இல்லாமல் பெண்களைக் கற்பழிக்கும் அம்னோன்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! தங்களுடைய மானத்தை இழந்து வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டு கண்ணீருடன் வாழும் தாமார்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அம்னோன் போன்ற பொல்லாங்கரால் ஏமாற்றப்படுகிறோம். ஆனால் ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம்! எந்தப் பொல்லாங்கும் கர்த்தருடைய வல்லமையை விட சக்தி வாய்ந்தது அல்லவே அல்ல! 

உபயோகப்படுத்தப்பட்டு, கசக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்ட தாமாரைப் போல ஒருவேளை இன்று உங்கள் வாழ்க்கை இருக்குமானால் பயப்பட வேண்டாம்! அன்று கல்லெறியப்படும்படி  கொண்டு வரப்பட்ட ஸ்திரீயை தங்கள் இச்சைக்காக உபயோகப்படுத்திய கும்பல், அவள் மேல் குற்றம் சாட்டினபோது, கர்த்தராகிய இயேசு அவளைப்பார்த்து உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது! இனி பாவம் செய்யாதே என்று ஒரே நொடியில் அவளுக்கு பரிபூரண விடுதலையைக் கட்டளையிட்டார்.  இன்று நீ எதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று ஏங்குகிறாயோ அந்த விடுதலையைக் கொடுக்க இயேசு கிறிஸ்து வல்லவர்!

கடந்த காலத்தின் கசப்பான  வலியையும் தழும்பையும்  மாற்றிப்போட்டு அதற்கு பதிலாக எதிர் காலத்தின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் , சந்தோஷத்தையும் தரும்படி இன்று கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபிப்போம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்