Archive | October 4, 2019

இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!

2 சாமுவேல் 12: 24 – 25 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டாள். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். 

அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.

எத்தனை முறை நாம் காலையில் ஒரு வசனத்தைப் படிக்கும்போது, இன்று இது எனக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறோம்!  நாம் இவ்வளவு நாட்கள் நாம் படித்த தாவீதின் வாழ்க்கை நம்மில் பலரோடு பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.

தாவீது தன்னுடைய இச்சை என்னும் பாவத்தால் கர்த்தரை அசட்டை பண்ணி, தன்னுடைய குடும்பத்துக்கு வருத்தத்தைக் கொண்டு வந்தபின்னர், இருளில் மின்னும் ஒளிபோல தோன்றியது தான் இன்றைய வேதாகமப் பகுதி!

இச்சையான பாவத்தினால் அல்ல, மனந்திருந்திய ஆறுதலையும், மரியாதையையும் தன் மனைவிக்கு தாவீது கொடுத்ததால் பிறந்த குழந்தை தான் சாலொமோன்! அவனுடைய தாய் பத்சேபாள் அவனுக்கு சாலொமோன் என்று பெயர் கொடுத்தாலும் தேவனாகிய கர்த்தர் அவனுக்கு வேறொரு பெயர் கொடுத்தார்.

ஒருநிமிடம்! இந்தப் பெயரை அந்தக் குழந்தைக்கு கொடுக்க கர்த்தர் அனுப்பியது யார் தெரியுமா? தீர்க்கதரிசி நாத்தான்! மறுபடியும் அந்த அரண்மனைக்குள் வரும்போது நாத்தானுக்கு எப்படியிருந்திருக்கும்?

வேதத்தில் இப்படிப்பட மாறுபாடான முந்திய பிந்திய சம்பவங்களை ஒப்பிடுவது அடிக்கடி பார்க்கலாம். நாத்தானின் முதலாவது வருகையில் தாவீதின் பாவத்தைப்பற்றி அவனுக்கு உணர்த்தவும், அவனுடைய இச்சையால் அவனுக்கும் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுக்கும் பிறந்த குழந்தை சாகவே சாகும் என்று சொல்வதற்கும் அனுப்பப்பட்டான்.

இந்த இரண்டாவது வருகையிலோ நாத்தான் ஒரு சந்தோஷமான செய்தியுடன் வருகிறார். தாவீதுக்கும் அவனுடைய மனைவியாகிய பத்சேபாளுக்கும் பிறந்த குழந்தைக்கு யெதிதியா என்ற பெயரை சூட்டும்படி வருகிறார். கர்த்தர் அந்தக் குழந்தையின்பேரில் அன்பாயிருந்தார்.

கர்த்தர் இந்தக் குழந்தைக்கு அவரே பெயர் சூட்டினார் என்ற உண்மை என்னை புல்லரிக்க செய்தது!

நம்முடைய குழந்தைகளுக்கு மிகவும் தேடி நல்ல அர்த்தமுள்ள பெயராக நாம் வைக்கிறோம். ஆனால் இங்கு கர்த்தரே சாலொமோனுக்கு ஒரு புது பெயரை வைக்கிறார்.  இது சாலொமோனுக்கு மட்டும்தான் செய்தாரா? நமக்கு செய்ய மாட்டாரா?

இது எனக்கு  ஏசாயா 62:2 ல்    …..கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்  என்று தேவனாகிய கர்த்தர் கூறியதை ஞாபகப்படுத்திற்று.

அதுமட்டுமல்ல வெளிப்படுத்தல் 2:17ல்…..  அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்று ஆவியானவர் யோவான்மூலம் வெளிப்படுத்தியதும் ஞாபகம் வந்தது.

நம்முடைய தகப்பனான தேவனானவர் நம் ஒவ்வொருவருக்கும் அவரே ஒரு புதிய நாமத்தை வைத்திருக்கிறார்  என்ற உண்மை புரிந்தது. அவர் நம்முடைய அந்தப் புதிய பெயரைத் தம்முடைய உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார்.  அவர் உன்னையும் என்னையும் பார்க்கும்போது அவர் சூட்டியிருக்கிற நாமத்தைக் கொண்டுதான் பார்ப்பார். நாம் பரலோகம் செல்லும்போது அந்தப் புதிய நாமத்தினால் அழைக்கப்படுவோம் என்பதை நாம் மறக்கவேண்டாம்!

உனக்கு பெயர் சூட்டின தேவன், அந்தப்பெயரை உள்ளங்கையில் எழுதியிருக்கிற தேவன் உன்னோடிருக்கும் போது உனக்கு எதற்கு பயம்? இந்த மாபெரும் வாக்குத்தத்தம் என்றும் உன் பெலனாயிருக்கட்டும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்