வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 914 கேட்பதில் தீவிரம் ஆனால் பேசுவதில் பொறுமை தேவை!

நியாதிபதிகள்: 11:35  “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றாக்கூடாது என்றான்.”

நாங்கள் அடிக்கடி காரில் நீண்ட பிரயாணம் செய்வதுண்டு!  பத்து மணி நேரம் காரில் உட்கார்ந்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உடல் புண் மாதிரி வலிக்கும்.

அப்படி களைத்து  வரும்வேளையில் , வீட்டுக்குள் வந்தவுடனே பல பிரச்சனைகள் நம் வருகைக்காக காத்திருக்குமானால் நம் மனநிலை எப்படி இருக்கும்?  எவ்வவளவு அலைச்சல் இருந்தாலும் வீட்டுக்குள் வரும்போது சந்தோஷமான சூழ்நிலை இருக்குமானால் அது பாதி வலியை ஆற்றிவிடும் அல்லவா?

யெப்தாவின் மகள், யுத்தத்துக்கு போய் களைத்து வரும் தன் தகப்பனை எப்படி வரவேற்றாள் பாருங்கள்! நேற்று நாம் இந்தப் பெண்ணைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தோம். குழந்தைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், அவர்களை நாம் பொக்கிஷமாகப் பாதுகாத்து, கர்த்தரின் வழியில் வளர்க்கவேண்டும் என்று பார்த்தோம். இன்றைக்கு நாம் இந்தப்பெண்ணின் வாழ்க்கையிலிருந்து இன்னொரு பாடத்தைப் பார்க்கலாம்.

அவள் தன் தகப்பனை நடனத்தோடும் பாடல்களோடும் சந்தோஷமாக வரவேற்றாள் என்று பார்க்கிறோம். எப்படிப்பட்ட முரட்டுத்தகப்பனாக இருந்தாலும் சரி, அப்பா வீட்டுக்கு வந்தவுடன், வரவேற்க ஓடுகிறாள். தகப்பனுடைய வெற்றியை சுயநலமில்லாமல் பகிர்ந்து கொள்ள ஓடுகிறாள். அவளுடைய இந்த செயல் அவளுடைய நல்ல குணத்தை நமக்கு  வெளிப்படுத்துகிறது.

தன் பிள்ளைத் தன்னை ஆடலுடனும், பாடலுடனும் வரவேற்பதைப் பார்த்து சந்தோஷப்படாமல், யெப்தா அவளைக் கடிந்து கொள்கிறான். அவன் வாயின் கோளாறுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றுத் தெரிந்தாலும்,  என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய் என்று  அவளைக் கடிந்து கொள்கிறான். அவள் என்ன குற்றம் செய்தாள்? அவன் செய்த பொருத்தனைதான் புத்திகெட்டது. ஆனாலும் நீதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று திட்டுகிறான்.

வாயின் வார்த்தைகள் அணுகுண்டை விட  சக்தி வாய்ந்தவை என்றால் மிகையாகாது அல்லவா! யெப்தா தன்னுடைய தவறை உணராமல், தன் எதிரே வந்த மகள் மீது பழியைப்போடுகிறான்.நாம் தூக்கி எறியும் வார்த்தைகள்தான் நாம் யார் என்பதை விளக்குகின்றன. எத்தனைமுறை நாம் , நம்முடைய தவறை உணராமல், யெப்தாவைப் போல பக்கத்தில் நிற்பவர்கள் மேல் பழியைப்போட்டுப் பேசுகிறோம்.

நான் வேலையில் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக.  அநேகம் தடவை புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன். எத்தனையோ முறை நான் இப்படி பேசியிருக்கக்கூடாது என்று எண்ணியதுண்டு, ஆனாலும் எறிந்த அம்புகளை நாம் திரும்பப்பெற முடியாது அல்லவா!

ஒருமுறை, நான் நான்கு பக்கங்கள் இருந்த செய்தியை 500 வார்த்தைகளில் சுருக்க ஆரம்பித்தேன். பலமுறை எழுதி திருத்திய பின்னர் அந்த செய்தி படிக்க அருமையாக இருந்தது. வார்த்தைகளை எண்ணக்கூடாது, எடை போட வேண்டும் என்ற பழமொழியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். நான் பேசும் வார்த்தைகளை எடை போட்டு பேசினால் நான் எத்தனை வார்த்தை பேசுவேன் என்றுத் தெரியவில்லை என்று அடிக்கடி நினைப்பேன்.

இயேசு கிறிஸ்து ,” நான் உங்களுக்கு  சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.”(யோவான்:6:63) என்றார். அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்பவர்களுக்கு ஜீவனைக்கொடுப்பதாய் இருந்தன.

அன்னை தெரெஸா அம்மையார் ‘ கிறிஸ்துவின் ஒளியில் நடத்தாத எந்த வார்த்தையும் இருளை அதிகரிக்கிறது என்றார். ஒவ்வொரு காலையும் ஆண்டவரே இன்று நான் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் யாருடைய வாழ்க்கைக்காவது ஒளியூட்டட்டும் என்று ஜெபிப்பது என் வழக்கம்.

வார்த்தைகள் ஜாக்கிரதை! அவை முட்டைகளைப்போல கவனத்துடன் கையாடப்பட வேண்டும். உடைந்துவிட்டால் மறுபடியும் சேர்க்கமுடியாது!

யாக்கோபு 1:19  “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் , பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்.”

வார்த்தைகளால் யாரையும் புண்படுத்தாதேயுங்கள்! அது ஆறவே ஆறாது!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment