ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.”
சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல , சிவப்பு நிறப் பூக்களோடு ஆங்கிலத்தில் ஆப்பிரிக்கன் ட்யூலிப் என்றழைக்கப்படும் மரங்கள் நின்றன.
நாங்கள் ஊட்டிக்கு செல்வது இதுதான் முதல் தடவை அல்ல. எத்தனையோ முறைகள் சென்றிருந்த்தாலும் அந்த மரங்கள் எங்கள் கண்களில் பட்டதேயில்லை. என் கணவர் இவை புதிதாக வளர்க்கப்பட்டுள்ளன என்று ஆணித்தரமாகக் கூறினாலும், அந்த மரங்கள் பார்க்க இளம் மரங்கள் போலத் தோன்றவேயில்லை. அவற்றுக்கு எப்படியும் 50 வயதுக்கு மேலிருக்கும். மிகவும் பழக்கமான சாலையிலேயே ,அந்த சாலைக்கே அழகூட்டும் வண்ணமாய் பூத்திருந்த இந்த மரங்கள் எங்கள் கண்களுக்குத் தப்பிவிட்டன!
இப்படித்தான் நான் ரூத் புத்தகத்தை வாசிக்கும்போதும் எனக்கு நன்கு தெரிந்த கதைதானே என்று அழகிய புதைபொருள்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று நான் இந்தமுறை படிக்கும்போது தான் உணர்ந்தேன். ரூத்தின் புத்தகம் எனக்கு எப்பொழுதுமே அநேக காரியங்களைக் கற்றுக் கொடுத்த அழகிய புத்தகம்தான் ஆனாலும் எப்படியோ நான் எப்படியோ இத்தனை வருடங்களும் அந்தப் புத்தகத்துக்கே அழகு கொடுக்கும் கருத்துகளைத் தவற விட்டு விட்டேன்.
அப்படி என்ன புதிதாக கற்றுக்கொண்டேன் என்று கேட்கிறீர்களா?
நகோமியை ஒரு கற்றுக்கொடுப்பவராகப் (mentor) பார்த்தேன். தன்னிடம் கர்த்தரால் ஒப்படைக்கப்பட்ட இளம் பெண்ணின் வாழ்க்கையை அவள் தன்னுடைய சாட்சியினாலும், தன்னுடைய புத்திமதிகளாலும், தன்னுடைய வழிகாட்டுதலாலும் எவ்விதமாக கர்த்தருக்கு உகந்த பாத்திரமாக உருவாக்கினாள் என்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது.
ரூத்தின் வாழ்க்கை எனக்கு, ஒரு பெண்ணானவள், தன் தாய்க்கு கீழ்ப்படிந்த மகளாகவும், திருமணத்துக்கு பின்னர் ஒரு நல்ல மருமகளாகவும் வாழும்போது எப்படிப்பட்ட குணநலன்கள் காணப்படவேண்டும் என்ற கருத்துகளை உணர வைத்தது.
இவற்றை மனதில் கொண்டு சில நாட்கள் நாம் ரூத்தின் குணநலத்தையும், நகோமியின் குணநலத்தையும் அலசி, அவர்கள் வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய குணநலன்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
ரூத்தின் மற்ற எல்லா குணநலன்களைவிட சிறந்த குணம் அவளுடைய உறுதியான விசுவாசம் தான். இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததால்,கர்த்தருடைய நோக்கம் அவள் வாழ்வில் நிறைவேறிற்று.
ரூத்திடம் காணப்பட்ட உறுதியான விசுவாசம் நம்மிடம் உள்ளதா? நம்மை சற்று ஆராய்ந்து பார்ப்போம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்