ரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”.
ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. என்ன ஆச்சரியம்! ஒரு நிமிடத்தில் எங்கள் களைப்பை மறந்து விட்டு எங்களை நோக்கி புன்னகை பூத்த அந்த மலர்தோட்டத்துக்குள் சென்று நாங்களும் புன்னகையுடன் போட்டோ எடுக்க ஆரம்பித்தோம்.
சிலர் இந்த சூரிய காந்தி மலரைப் போல மற்றவர்களின் வாழ்வில் புன்னகையை வர வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் சந்திக்கும்போது நம்மை சுற்றியுள்ள எல்லாமே ச்ந்தோஷமாக மாறிவிடும்.
நான் ரூத்தைப் பற்றிப் படிக்கும்போது அவள் தன்னுடைய சந்தோஷமான ஆவியால் தன்னை சுற்றியுள்ளவர்களை உற்சாகப்படுத்திய ஒரு சூரியகாந்தி மலர் போலத்தான் எனக்குப் பட்டாள். நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதற்கு மூன்று விளக்கங்களை இங்கே கொடுக்கிறேன்.
முதலாவதாக அவள் தன்னுடைய சூழ்நிலையைப் பற்றிய எந்த குறை சொல்லுதலும், முணுமுணுப்பும் இல்லாமல் கர்த்தர் வழிநடத்திய விதமாகத் தன் வாழ்க்கையை நடத்துவதைப் பார்க்கிறோம். இதுவே அவளுடைய உற்சாகமான ஆவிக்குக் காரணம். தான் ஒரு ஏழை விதவை, தன் குடும்பத்தாரை மோவபில் விட்டு வந்திருக்கிறோம் என்ற குறைவே அவளுக்குத் தென்படவில்லை. தனக்கு இரக்கம் காட்டிய போவாஸுக்கு நன்றி செலுத்தியவளாய் அவனுடைய வயலிலே சந்தோஷமாக உலாவி வந்தாள்.
இரண்டாவதாக ரூத் தன்னைப் பற்றி அதிகமாக நினைத்ததாகத் தெரியவில்லை. அவள் எண்ணமெல்லாம் அவள் மாமியார் மேல் இருந்தது. நகோமியை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே அவளுடைய நோக்கமாக இருந்தது. சுயநலமற்ற இந்த குணமே அவளுடைய உற்சாகமான ஆவிக்கு காரணம்.
மூன்றாவதாக அவள் கண்களை உலக சம்பத்துகள் மேலும், இளமையான வாலிபர் மேலும் செலுத்தவில்லை. அவள் உலகப்பிரகாரமான செல்வாக்கை நாடவில்லை. ரூத்திடம் காணப்பட்ட இந்த குணத்தை போவாஸ் கூட விரும்பினான் என்று பார்க்கிறோம். இருதயத்தின் அழகே அவளுடைய உற்சாகத்தின் ஆவிக்குக் காரணம்!
ரூத்தைப் போல ஒரு சூரியகாந்தி மலர் போல புன்னகையுடன் வாழ்ந்து அநேகரின் வாழ்க்கையை உற்சாகப் படுத்தும் பலர் இந்த உலகத்துக்கு இன்று தேவை. அவளுடைய உற்சாகத்தின் ஆவியால் அவள் நம் மனதில் இன்று நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டாள்.
உற்சாகத்துக்குள் ஒரு நிரந்தர சந்தோஷம் நிறைந்திருக்கிறது! உற்சாகம் மற்றவர்களை சந்தோஷப் படுத்தும்!
ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும் என்பது ஒரு பழமொழி!
ரூத்தைப் போல உனக்கு கிடைக்காத ஒன்றைப் பார்த்து அல்ல, உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறவைகளைப் பார்த்து சந்தோஷப்படு!
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். (பிலிப்: 4:4)
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்