கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1050 இந்த வயதில் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!

சங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்”

நாம் கடந்த வாரம் மிரியாமைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தோம்! அவள் பார்வோன்  குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள்.

 ஞானமுள்ளவள்  மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான, தைரியமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம். இந்த சம்பவம் நடந்த போது மிரியாமுக்கு ஏழிலிருந்து பத்து வயதுக்குள் இருந்திருக்கும் என்று கருதுகின்றனர்!

 நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ,  அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டி பார்வோனின் படை வீரர் கண்ணில் படுமானால் தன் தம்பி மறுநிமிடம் நைல் நதியில் பிணமாக மிதப்பான் என்பதும் இந்தப் பெண்ணுக்கு தெரியும். நிச்சயமாக அவள் தன் தம்பியை இழக்க விரும்பவில்லை, மனது திக் திக் என்று அடித்தது.

எந்த நிமிடம் என்ன நடக்குமோ என்று தெரியாத சூழலில், பார்வோன் குமாரத்தி அங்கு வருகிறாள்.  தன்னுடைய மனத்தைரியத்தை எல்லாம் ஒன்றாக சேர்த்து, கைகாலில் நடுக்கம் இல்லாமல், திடமாக நின்று பார்வோன் குமாரத்தியிடம், தன் தாய் தனக்கு கற்றுக் கொடுத்த விதமாய் அழகாக பேசி, தன் தம்பியின் உயிரைக் காக்கிறாள் இந்த இளம் பெண் மிரியாம். இந்த அசாத்தியமான தைரியம் அவளுக்கு எப்படி இந்த இளம் வயதில் வந்தது?  

நான்  பள்ளியில் படித்த வயதில்,  ஏதாவது ஒரு புதிய இடத்துக்கு போகவோ அல்லது புது நபர்களைப் பார்க்கவோ வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டால், என்னைத் தேடிக் கண்டு பிடிக்கவே முடியாது. எங்காவது ஒரு மூலையில் புத்தகமும் கையுமாக  ஒதுங்கி விடுவேன். ஒரு கடையில் போய் பொருட்கள் வாங்கக் கூடத் தெரியாது! கடைகளுக்கு போகமலேயே வளர்ந்து விட்டதால் திருமணமான பின்னர் கூட கடைக்கு போனால் என் கணவருக்கு பின்னாலேயே நிற்பேன்.

ஒருநாள் என்னுடைய வேதாகமக் கல்லூரியில் நான் எல்லா ஆசிரியர் முன்பாகவும் ஒரு பிரசங்கம் செய்து காட்டவேண்டியிருந்தது. அந்த பத்து நிமிட செய்திக்காக பத்து நாட்கள் யாரும்  பார்க்காத இடத்துக்கு போய், சத்தமாய் எனக்கு நானே பிரசங்கம் பண்ணிப் பழகினேன். அவ்வளவு வெட்கமும், பயமும் நிறைந்த நான் எப்படி இன்று மாறினேன் என்று அடிக்கடி யோசிப்பேன். இந்த மனத்திடனும், தைரியமும் நிச்சயமாக ஒரே இரவில் வந்தவை அல்ல. தேவனாகியக் கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையும், விசுவாசமும், பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளாய் வாசம் செய்ததுமே என்னை பெலப்படுத்தியது.

வேதத்தில் நியாதிபதிகள் 6 வது அதிகாரத்தில் கிதியோனைப் பற்றி படிக்கிறோம். அவன் மீதியானியருக்கு பயந்து, யாருடைய கண்ணுக்கும்  படாத இடம் பார்த்து கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த வேளையில் கர்த்தர் அவனை மீதியானியருடன் போரிட அழைக்கிறார். தொடை நடுங்கியாகிய அவன் சந்தேகப்பட்டு, அடையாளங்கள் கேட்டு, பல சாக்கு போக்கு பல சொல்லி தப்பித்துக் கொள்ள முயன்றான். ஆனால் நியா:6:34 ல் , கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கியபோது அவன் எக்காளம் ஊதி , அனைவரையும் தன்னைப் பின் தொடருமாறு யுத்தத்துக்கு அழைத்தான் என்று பார்க்கிறோம். என்ன ஆச்சரியம்! இந்த தைரியமும், மனப்பலமும் எங்கிருந்து வந்தது? தேவனானவர் அவன் ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்காக அவனோடு இருந்து அவனைப் பெலப்படுத்தினார்.

 சிறுவயதிலேயே தன் தாயின் மூலம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் மீது திட நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்ட மிரியாம், ஆபத்தான வேளையில் தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பலத்தினால் எந்தத் தயக்கமும், பயமும் இன்றி பார்வோன் குமாரத்தியை அணுகினாள் என்று பார்க்கிறோம்.

விசுவாசம் என்பது தேவனுடைய கிருபையின் மேல் நாம் வைக்கிற திடமான நம்பிக்கை என்று மார்டின் லூதர் கூறினார்.

 இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கிற சங்கீதக்காரனைப் போல திட நம்பிக்கை எனக்கு வேண்டும் என்று நான் ஓவ்வொருநாளும் ஜெபிக்கிறேன்! நீங்களும் ஜெபியுங்கள்! கர்த்தர் உங்களை பலப்படுத்தி, திடப்படுத்தி, நீங்கள் செய்ய இருக்கிற காரியத்தை வெற்றியுடன் முடித்து தருவார்! அது ஒருவேளை உங்கள் வேலையில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பெரிய ப்ராஜக்ட் ஆக இருக்கலாம், அல்லது ஒரு பிரசன்டேஷன் ஆக இருக்கலாம்! தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பதை திடமாய் விசுவாதித்து செய்யுங்கள்! கர்த்தர் வெற்றியைக் கொடுப்பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment