யாத்தி: 14: 1,4 “கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்….”
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிறங்கக் கட்டளையிட்டார் என்று பார்த்தோம். இன்று நாம் அந்த சம்பவத்தைத் தொடருவோம்.
பார்வோனின் அரண்மனையில் ஒரே பரபரப்பு! ஒரே ஆரவாரம்! ஏன்?
கோஷேன் நாட்டிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலரை அவர்கள் வணங்கும் யேகோவா முட்டாள்தனமாக கானானை நோக்கி வழி நடத்தாமல் எதிர் திசையில் வழி நடத்தியிருக்கிறாராம், அவர்கள் திகைத்து போய் சமுத்திர கரையில் பளையமிறங்கியிருக்கிறார்களாம் என்ற செய்தியை பார்வோனின் தூதுவர்கள் கொண்டு வந்ததுதான் அதற்கு காரணம்.
பார்வோன் நகைக்க ஆரம்பித்து விட்டான்! கண்ணில்லாத, செவியில்லாத கடவுளை பின்பற்றும் மதி கெட்ட ஜனங்கள்! எகிப்தின் முக்கோடி தேவர்கள் வென்றுவிட்டார்கள்! வனாந்திரத்தில் அலைந்து திரிந்து விட்டு கடைசியில் இந்த ஜனம் என்னிடமே வரப்போகிறார்கள்! வேறு எங்கு எப்படி போக முடியும்? என்று வானம் அதிருமாறு பார்வோன் இடி முழக்கம் போல நகைத்தான்,’
பார்வோன் தன் சேனையைப் பார்த்து கெம்பீரமாக , ‘இரதங்களைப் பூட்டுங்கள், எகிப்திலுள்ள எல்லா இரதங்களையும் தயார் செய்து இஸ்ரவேலரைப் பின் தொடருங்கள்! எகிப்தின் வனாந்தரத்திலேயே இந்த ஜனங்களை மடக்கி விடுங்கள்’ என்று ஆணையிட்டான்.
இஸ்ரவேல் மக்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்! ஒருபுறம் சமுத்திரம்! மறுபுறம் வனாந்திரம்! எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, அலைந்து திரிந்து, களைத்து போன மக்கள் எங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் பாருங்கள்! எங்கும் ஓட முடியாத சமுத்திரக்கரையில்!
அப்படிப்பட்ட வேளையில் எகிப்தியரின் குதிரைப் படையினர் ஒருபக்கம் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். பார்வோன் அவரகளைப் பார்த்து, நான் உன்னை விடமாட்டேன், உன்னை என்னுடைய அடிமைத்தனத்துக்குள் மறுபடியும் கொண்டு வருவேன் என்று துரத்துகிறதைப் பார்க்கிறோம்.
ஆனால் தேவனாகியக் கர்த்தர் அன்று பார்வோனுக்கு ஒரு செய்தியை வைத்திருந்தார்! இந்த சம்பவத்தின் மூலம் இன்று உன்னைப் பின்தொடரும் பார்வோனுக்கும் ஒரு செய்தியை வைத்திருக்கிறார்!
என்ன தெரியுமா? அவருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த ஆபத்திலிருந்து இரட்சிக்கப் படுவது மட்டுமல்ல, நம்முடைய இந்த வனாந்திர அனுபவத்தால் தேவன் மகிமைப் படுவார்! வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனின் நாமம் நம் மூலமாய் மகிமைப்படும்!
ஒருவேளை இன்று சாத்தான் என்கிற பார்வோன் உன்னைப் பார்த்து, நகைத்து, நீ தனிமையாக பல இன்னல்களின் மத்தியில் வாழ்வதைப் பார்த்து நீ உன் தேவனாகியக் கர்த்தர் என்பவரை நம்பி என்ன பிரயோஜனம்? மறுபடியும் என்னுடைய அடிமைத்தனத்துக்குள் வந்து விடு என்று கிண்டல் செய்கிறானா?
நீ இன்று அவனுக்கு கொடுக்க வேண்டிய செய்தி ஒன்று உள்ளது! தேவன் அன்று பார்வோனுக்கு கொடுத்த “நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்ற செய்திதான் அது! அந்த யுத்தத்தின் முடிவில் யாருக்கு வெற்றி என்பதை கொஞ்சம் அவனுக்கு ஞாபகப்படுத்து.
அன்பின் சகோதர சகோதரிகளே! இன்று கடினமான பாதையைக் கடந்து கொண்டிருக்கிறீர்களா? என்னால் தப்பிக்கவே முடியாது போல உள்ளதே! நான் சரியாக மாட்டிக் கொண்டேன்! நான் எங்கு செல்வேன்! எனக்கு வழியேத் தெரியவில்லை என்று வேதனையில் புலம்புகின்றாயா? பயப்படாதே! திகையாதே! பரலோகத்தின் தேவனும், பல்லாயிரக்கணக்கான தேவ சேனைகளும் நம்மோடு இருக்கும் போது வனாந்திரத்தைக் கண்டோ அல்லது சமுத்திரத்தைக் கண்டோ அல்லது பார்வோனின் இரதங்களைக் கண்டோ பயம் எதற்கு? நீ கடந்து போகும் இந்த வனாந்தர சோதனையின் மூலம் தேவன் மகிமைப்படுவார்! அவர் உனக்குக் கொடுக்கும் வெற்றியின் மூலம் அவர் நாமம் மகிமைப்படும்!
எரேமியா: 1: 19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்: ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். விசுவாசித்த்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்