எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்!
இந்த வருடத்தின் கடைசி நாள் இன்று! இந்த வருடம் நம் எல்லோருக்குமே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்பதுதானே உண்மை! நாம் என்றுமே கனவில் காணாத சூழ்நிலைகள் எவ்வளவு வேகமாக உருவெடுத்தன! எத்தனை குடும்பங்களில் இழப்பு! சாதாரணமாக வாழ முடியாத சூழல்! வருமானமின்றி தவித்த நாட்கள்! நம்முடைய ஆலயங்களின் கதவுகள் பூட்டப்பட்ட நாட்கள்! அப்பப்பா! எவ்வளவு கொடுமையான காலகட்டம் இது என்று எண்ணத் தோன்றுதல்லவா? இனிமையாக ஆரம்பித்த 2020 இப்படி கோரமாக இருக்கும் என்று யாராவது எதிர்பார்த்தோமா?
இன்று வாழ்வில் மறக்கவே முடியாத இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்று உங்கள் மனநிலை எப்படி உள்ளது? தேவனுக்கு நன்றி கூற ஏதாவது உள்ளதா?
ஏன் இல்லை! இந்நாள் மட்டும் நாம் ஜீவனோடும் சுகத்தோடும் இருப்பதே கர்த்தர் நமக்குக் கொடுத்த கிருபை தானே! எனக்குத் தெரிந்த எத்தனையோ நண்பர்கள் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு நாளும் புதிய கிருபையோடு நம்மைக் காத்துக் கொண்ட தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்!
இந்த வருடத்தில் அநேக மாதங்கள் வேலையின்றி இருந்தோம்! அதிகமாக வெளியே செல்லமுடியவில்லை! ஆனாலும் இந்த வருடம் எவ்வளவு வேகமாக சென்று விட்டது பாருங்கள்! நம்முடைய கையிலிருந்து தண்ணீர் வழுவிப் போவது போல நாட்களும் கடந்து போகின்றன அல்லவா!
நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் மிகவும் விசேஷமானவைகள் ஏனெனில் அவை நமக்குத் திரும்ப வரவே வராது! நாம் சொத்து விற்றால் திரும்ப ஒரு சொத்து வாங்கலாம்! நம்முடைய காரை விற்றால் திரும்ப வாங்கி விடலாம்! ஆனால் ஐயோ இந்த நாள் வீணாகிவிட்டதே என்று நீ அழுது புலம்பினாலும் திரும்ப வராது!
டிக்…. டிக்,,,,,,கடிகாரத்தின் முள் ஓடிக்கொண்டே இருக்கிறது! எவ்வளவு நொடிகள், எத்தனை விநாடிகள், எத்தனை நாட்களை வீணாக கழித்தோம் என்று சற்று சிந்தித்து பார்ப்போம். நம்முடைய கையில் யாராவது நிறைய பணத்தைக் கொடுத்தால் நாம் வீணாக எறிந்து விடுவோமா? எவ்வளவு பத்திரமாக பார்த்து பார்த்து செலவு செய்வோம்! ஆனால் கர்த்தர் ஈவாக நமக்குக் கொடுத்த நேரத்தை மட்டும் எப்படியெல்லாம் வீணாக செலவிட்டோம் என்று யோசித்துப் பார்ப்போம்!
நேரத்தை நாம் எப்படி செலவழிக்க வேண்டும்? நாம் ஒரு நீண்ட பிரயாணம் மேற்கொண்டால் அதற்கு எத்தனை ஆயத்தங்கள் செய்கிறோம். பாஸ்போர்ட், டிக்கெட், லக்கேஜ் இவையெல்லாம் இல்லாமல் பயணம் செய்ய முடியுமா? ஆனால் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை மட்டும் ஆயத்தமே இல்லாமல் மேற்கொள்கிறோம். கடந்த ஆண்டில் நாம் நம்முடைய தேவனாகியக் கர்த்தரைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளவும், அவரோடு நெருங்கி அவருடைய முகத்தைத் தேடவும் நமக்குக் கொடுக்கப்பட்ட தருணங்களை நாம் எப்படி உபயோகப்படுத்தினோம்? அவற்றை சரியான முறையில் உபயோகப்படுத்தி நம்முடைய வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோமா என்று நம்மை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
உன்னுடைய பணி, பொழுதுபோக்கு, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் இவை யாவும் உன்னுடைய ஆத்துமா, இயேசு கிறிஸ்துவோடு ஜீவிப்பது, நித்திய வாழ்வு என்பவற்றை விட மிகவும் முக்கியமானவையா? அவைகள் முக்கியமானவை என்றால் உன்னுடைய இரட்சிப்பைப் பற்றி மறந்து விடு!
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்! 2021 என்ற புதிய ஆண்டில் பிரவேசிக்கப் போகும் நாம் நம்மை ஆராய்ந்து, நமக்கு கிருபையாய் தேவன் அளிக்கும் இந்த புதிய வருடத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்