எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பற்பல நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நாம் கடந்து வந்த கடினமான பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது இந்தப் புதிய வருடம் நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் வருடமாக அமையவேண்டுமென்று ஜெபிக்கிறேன்!
ஒவ்வொரு புதிய ஆண்டிலும் புதிய தீர்மானங்கள் எடுப்பது நம்மில் அநேகரின் வழக்கம்! அந்தத் தீர்மானம் தேவனுடைய வார்த்தையை ஆழமாய்ப் படிப்பேன் என்ற தீர்மானமாக இருக்கக்கூடாது என்று சிந்தியுங்கள்! நாம் ஏன் தேவனுடைய வார்த்தையை படிக்க வேண்டும் என்று சற்று ஆலோசிக்கலாம் வாருங்கள்!
- இது தேவன் நமக்கு அளித்த கட்டளை (உபாகமம் 10:13) நாம் அவரை நேசிப்பதையும், அவரை சேவிப்பதையும், அவருடைய வழிகளில் நடப்பதையும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதையும் தவிர வேறே எதை கர்த்தர் நம்மிடத்தில் கேட்கிறார்! சங்கீதம் 1:1,2 கூறுகிறது இரவும் பகலும் வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான் என்று!
2. இது நம்மை தேவனுடைய வழியில் நடத்தும் ( ஏசாயா:2:3) அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்று இந்த வசனம் கூறுகிறது. முதலாவது தேவனுடைய வார்த்தை நாம் நடக்க வேண்டிய சரியான வழியைக் காட்டுகிறது. நம்முடைய கூகிளில் ஒரு இடத்தைத் தேடும்போது அது பல இடங்களை நமக்கு வரிசைப்படுத்திக் காட்டும். நாம் தேர்ந்தெடுப்பது சரியான இடம்தானா என்று நமக்கு எப்படித் தெரியும்? ஆனால் வேதத்தின் மூலமாக தேவன் உன்னை சரியான பாதையில் நடத்துவார்!
3 இது நற்கிரியை செய்ய உன்னை பெலப்படுத்தும் – (2 தீமோத்தேயு 3:16-17)
வேதம் ஜீவ அப்பமாக நம்மை போஷித்து இந்த பூமியில் நாம் நற்கிரியைகளை செய்யுமாறு நம்மை பெலப்படுத்துவது மட்டுமல்லாமல் நமக்குத் தேவையான ஞானத்தையும் நமக்குக் கொடுக்கிறது. வேதத்தில் காணப்படும் ஞானமான உபதேசங்கள் நம்முடைய வாழ்வில் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் தேவையான புத்தியை புகட்ட வல்லது! நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளாகட்டும், உறவு முறைகள் சம்பத்தப்பட்ட முடிவுகளாகட்டும், நம்முடைய தொழில் அல்லது வருவாய் சம்பந்தப்பட்ட முடிவுகளாகட்டும், அல்லது பிள்ளைகளைப் பற்றிய காரியங்களாகட்டும் எல்லாவற்றையும் நமக்கு சரிவர போதிப்பது இந்த வேத புத்தகம் தான்!
4. இது உன்னுடைய துக்கத்தில் ஆறுதல் அளிக்கும் (ரோமர் 15:4)
வேதம் எழுதப்பட்டது நமக்கு தேவனாகிய கர்த்தரை வெளிப்படுத்த மட்டுமல்ல நம்முடைய துயரத்தில் நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கவும்தான்! இந்த நற்செய்தி நொறுங்கிய இருதயங்களுக்கு காயம் ஆற்றும் தைலம் போன்றது.
5. இது எல்லா பொல்லாங்குக்கும் உன்னை விலக்கிக் காத்திடும் ( நீதிமொழிகள்:2:6-12)
வேதம் ஒரு பட்டயம் போல நம்மை எந்த பொல்லாப்பும் அணுகாது காக்கும். நாம் சோதனைக்குள் விழுந்து விடாமல் நம்மை காக்க வேத வார்த்தைகளால் மட்டுமே முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்பட்ட போது வேதத்தைக் கொண்டே சாத்தானை வென்றார் என்பது நாம் அறிந்ததே!
பின்னர் ஏன் இந்தத் தயக்கம்? வேதத்தை தினம்தோறும் வாசித்து அதை தியானிப்பேன் என்ற தீர்மானத்தை நாம் எடுக்கலாமா? தேவனாகிய கர்த்தர் தாமே இந்த புது வருடம் முழுவதும் நம்மோடு இருந்து அவர் நமக்கு அருளிய வேதத்தின் மூலமாக நம்மை கரம் பிடித்து நடத்துவாராக!
கர்த்தராகிய இயேசு இன்று இந்த ஆண்டின் துவக்கத்தில் உனக்காக ஜெபிக்கும் ஜெபம் ” உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம் ” ( யோவான் 17:17) சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட உன்னை அர்ப்பணிப்பாயா?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்