நியா: 8: 27 “அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம் போனார்கள். அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று”.
நல்ல எண்ணத்தோடு, உதவி செய்யும் நோக்கத்தோடு குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு பிரச்சனையில் தலையிட்டு அது உங்களுக்கே கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்கு உண்டு! யார் எக்கேடோ கெட்டுப் போகட்டும் நமக்கென்ன என்று எண்ணாமல் நல்ல நோக்கத்தோடு தலையிட்ட பலனை நான் அனுபவித்திருக்கிறேன்!
நல்ல முறையில் பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணங்கள் ஏன் விவாகரத்தில் முடிவடைகின்றன? விவாகரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு யாரும் திருமணம் செய்வதில்லை அல்லவா?
நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் சில காரியங்கள் கூட பழுதடந்துவிடுகின்றன. எங்கே , என்ன தவறு நடந்தது என்று யாரும் ஊகிக்கும் முன்னர் கை தவறிப் போய் விடுகிறது!
நாம் நேற்று பார்த்தவிதமாக, மீதியானியருக்கு பயந்து கெபிகளிலும், குகைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த கிதியோனிடம் தேவனாகிய கர்த்தர் திறமையையும், பராக்கிரமத்தையும் பார்த்து, அவனை மீதியானியரை முறியடிக்கும்படியாகத் தெரிந்து கொண்டார். அவனை 300 பேர் கொண்ட சேனையின் தலைவனாக்கி, அவன் மூலம் இஸ்ரவேலருக்கு வெற்றியை அருளினார். இஸ்ரவேல் மக்களோ, தங்களை மீதியானியரிடமிருந்து மீட்ட தேவனைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்காமல், இதுவரை தொடைநடுங்கியாய் வாழ்ந்த கிதியோனை ஹீரோவாக்க முயன்றனர் என்று பார்த்தோம்.
வேதம் கூறுகிறது, கிதியோன் அதை மறுத்து, நான் உங்களை ஆளமாட்டேன் என்று கூறினான். கிதியோனை பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. வெற்றி அவன் கண்களை மறைக்கவில்லை. பெருமை அவன் தலையின் மேல் ஏறவில்லை. தான் செய்த காரியத்தைக் குறித்து அவன் பெருமை பாராட்டவில்லை, தன்னை அவர்கள் ஹீரோவாக்கவும் அனுமதிக்கவில்லை.
அப்படியானால் எங்கே தவறு நடந்து போயிற்று? இன்றைய வசனம் கூறுகிறது, கிதியோன் ஒரு ஏபோத்தை செய்து அதைத் தன் ஊரிலே வைத்தான் அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று என்று . அவன் அப்படி என்ன தவறு செய்து விட்டான்?
இந்த வசனத்தை ஆழ்ந்து நோக்கும்போது அவன் ஒரு ‘ஏபோத்தை உண்டாக்கி அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்’ என்ற பகுதி என்னை சற்று சிந்திக்க வைத்தது.
நியா 8: 25,26 தெளிவாக கூறுகிறது, இஸ்ரவேல் மக்கள் தாம் மீதியானியரிடம் கொள்ளையிட்ட பொன் கடுக்கண்களையும் மற்ற விலையேறப்பெற்ற பொருட்களையும் சந்தோஷமாக கிதியோனிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்று. அதில் தவறு ஒன்றும் தெரியவில்லை.
அத்தனை பொன்னையும் ஒன்றுசேர்த்து ஒரு ஏபோத்தைப் பண்ணி அதைத் தன் ஊரிலே வைத்தானே அங்குதான் தவறு தெரிகிறது! கிதியோன் தவறான நோக்கத்துடன் செய்ததாகத் தெரியவில்லை ஆனால் அது தவறாக முடிந்துவிட்டது.
முதலாவது ஏபோத் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்! யாத்தி: 28:6 ன் படி ஏபோத் என்பது பொன்னினாலும், இளநீல நூலாலும், இரத்தாம்பரநூலாலும் , சிவப்பு நூலாலும், திரித்த பஞ்சு நூலாலும் செய்யப்பட்ட வஸ்திரம். இந்த தோள்க்கச்சையில் உள்ள இரண்டு ஓனிக்ஸ் கற்களில் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நாமங்களும் எழுதப்பட்டிருக்கும். இந்த பரிசுத்த வஸ்திரம் ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுக்கப்பட்டது (யாத்தி: 28:4)
கிதியோன் ஒரு ஏபோத்தை செய்து அதை சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் வைக்காமல், அதை தன்னுடைய் ஊரிலே வைத்தான்.ஒருவேளை கிதியோன் நல்ல நோக்கத்தோடு, கர்த்தரை வழிபடும் ஸ்தலமான சீலோ சற்று தூரமாக உள்ளதால், தனக்கு அருகிலே, தன்னுடைய ஊரிலே கர்த்தரை வழிபடும் அடையாளத்தை உண்டுபண்ண விரும்பியிருக்கலாம். நோக்கம் எதுவானாலும் சரி, ரிசல்ட் படு மோசமாகி விட்டது. இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை ஆராதிப்பதை விட்டுவிட்டு, கிதியோன் பண்ணின ஏபோத்தை பின்பற்றி சோரம் போனார்கள்.அது கிதியோனுக்கு கண்ணியாயிற்று.
கிதியோன் கர்த்தரை ஆராதிக்கும் ஸ்தலமான சீலோவிலிருந்து தன் கண்களை விலக்கினான், கர்த்தர் மேலிருந்து தன் கண்களை விலக்கினான், தன் ஊராகிய ஒப்ராவிலே கண்களை வைத்தான் அது அவனுக்கு கண்ணியாக முடிந்தது.
நான் சரி என்று நினைப்பதையும், என்னுடைய திட்டத்தையும், என்னுடைய நோக்கத்தையும் ,(அவை ஒருவேளை நல்ல திட்டங்களாக இருக்கலாம் அல்லது நல்ல நோக்கங்களாக இருக்கலாம்), நான் முன் வைத்து தேவனாகிய கர்த்தரை நான் பின் வைப்பேனானால் அவை என் வாழ்வை பழுதடையப்பண்ணும் என்பது நிச்சயமான உண்மை!
நாம் ஒவ்வொரு நாளும், தேவனுடைய பிரசன்னத்தில், அவருடைய அதிகாரத்துக்குட்பட்டு, அவருடைய மகிமைக்காக ஜீவிப்பது தான் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்