கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1205 கண்களால் கண்டால் தான் விசுவாசமா?

நியாதிபதிகள்: 13: 11 ” அப்பொழுது மனோவா எழுந்திருந்து , தன் மனைவியின் பின்னாலே போய் , அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.

ஆண்டவரே நீர் என்னை வழிநடத்துவது உண்மையானால் எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்! எங்கோ இந்த வாசகத்தை கேட்டமாதிரி இல்லையா? எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படியாக கர்த்தரை பரீட்சை பார்த்திருக்கிறோம்.

இதைப் படிக்கும்போது கர்த்தரை பரீட்சை பார்த்த ஒருவனுடைய கதை மனதில் பளிச்சென்று வருகிறது அல்லவா?  நியாதிபதிகள் 6 வது அதிகாரத்தில், கிதியோன் கர்த்தரிடம் ஒரு  அடையாளத்தைக் கேட்டான். ஒரு தோலைக் களத்திலேப் போட்டு , பனி அந்தத் தோலின் மீது மட்டும் பெய்து, பூமி காய்ந்திருந்தால் அதை ஒரு அடையாளமாகக் கொள்வேன் என்றான். அவ்வாறு நடந்தவுடன் மறுபடியும் கர்த்தரை நோக்கி தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.

இப்படிப்பட்ட தோல் பரீட்சையை என்றாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா?

நான் உங்களை குற்றஞ்சாட்ட இப்படிக் கேட்கவில்லை. நீங்களும் நானும் மட்டுமல்ல இன்னும் பல பல வேதாகம நாயகர்கள் இப்படி ஏதாவது ஒரு தருணத்தில் கர்த்தரிடம் அடையாளத்தை கேட்டிருக்கிறார்கள்.

கண்டால் தான் விசுவாசம், தொட்டால் தான் விசுவாசம், அடையாளத்தைப் பார்த்தால் தான் விசுவாசம் , இவை நம்முடைய திடமான விசுவாச வாழ்க்கைக்கு அஸ்திபாரம் ஆகாது என்பது தேவனாகிய கர்த்தரோடு நான் நெருங்கி ஜீவிக்கும்பொழுது கற்றுக்கொண்ட ஒரு பேருண்மை.

இதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தோமாவிடம் கூறும்போது, ” தோமாவே நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான்:20:29)

இந்த அருமையான சிந்தனையோடு மனோவாவையும் அவனுடைய  மனைவியையும் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

மலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளையைப்பற்றி தேவனுடைய தூதனாவர் கூறியதை அவள் விசுவாசித்தாள். கர்த்தருடைய வார்த்தையை சந்தேகமில்லாமல் விசுவாசிக்கும் அளவுக்கு அவளுக்கு தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் இருந்தது. அவர் சொல்ல ஆகும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

அந்த நற்செய்தியை உடனே போய்த் தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதைக் கேட்டவுடன் மனோவா கர்த்தரை நோக்கி மறுபடியும் ஒருமுறை தேவனுடைய தூதனானவரை அனுப்பும்படி வேண்டுகிறதைக் காண்கிறோம். நான் தொட்டால் தான் விசுவாசிப்பேன்! நான் கண்டால்தான் விசுவாசிப்பேன் என்றானே தோமா, அப்படிப்பட்டவர்களில் ஒருவன் இவன்!  கிதியோனைப்போன்ற, மனோவாவைப் போன்ற, தோமாவைப் போன்ற , உங்களையும், என்னையும் சந்தேகப்பேர்வழிகளைக் கூட கர்த்தர் கைவிடுவதில்லை. சந்தேகப்படுகிற நம்முடைய விசுவாசத்தைக் காப்பாற்ற கர்த்தர் அடையாளங்களைக் கொடுக்கக்கூடத் தயங்குவதில்லை என்பதும் உண்மை!

ஆனால் மனோவாவின் மனைவியைப் போல தேவனாகிய கர்த்தரின் அன்பையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் பரீட்சை பாராமல் , அவரையும், அவருடைய வார்த்தைகளையும் அப்படியே நம்புகிற விசுவாசம் எனக்குள்ளே வேண்டும் என்பதே நான் இன்று எனக்காக ஏறெடுக்கும் ஜெபமாகும்.

நீங்கள் எப்படி? தோல் பரீட்சை பார்ப்பவரா? அல்லது நம்பிக்கையோடு விசுவாசம் உள்ளவரா? சிந்தியுங்கள்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

1 thought on “இதழ்:1205 கண்களால் கண்டால் தான் விசுவாசமா?”

  1. praise the lord

    தயவுசெய்து அனுப்புங்கள்
    1. எப்படி ஜெபிக்க வேண்டும்
    மற்றும் ஜெபத்தின் ரகசியம்

    On Mon, Jul 5, 2021 at 6:01 AM Prema’s Tamil Bible Study & Devotions wrote:

    > Prema Sunder Raj posted: “நியாதிபதிகள்: 13: 11 ” அப்பொழுது மனோவா
    > எழுந்திருந்து , தன் மனைவியின் பின்னாலே போய் , அவரிடத்துக்கு வந்து: இந்த
    > ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான்
    > என்றார். ஆண்டவரே நீர் என்னை வழிநடத்துவது உண்மையானால் எனக்கு ஒரு”
    >

Leave a comment