நியாதிபதிகள்: 13:8 “அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.”
ஒவ்வொருமுறையும் என்னைப்போல குறைந்த விசுவாசம் உள்ளவர்களின் கதையை வேதாகமத்தில் வாசிக்கும்போது கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவேன். கர்த்தர் அவர்களிடம் ஒருமுறை அல்ல பலமுறை தம்முடைய வழிநடத்துதலையும், தம்முடைய வார்த்தையையும் புரியவைக்க வேண்டியிருந்தது.
மலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளையைப்பற்றி தேவனுடைய தூதனாவர் கூறியதை, அவள் உடனே போய்த் தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதைக் கேட்டவுடன் மனோவா கர்த்தரை நோக்கி மறுபடியும் ஒருமுறை தேவனுடைய தூதனானவரை அனுப்பும்படி வேண்டுகிறதைக் காண்கிறோம்.
ஏன் என்று எனக்குப் புரியவில்லை! யாரை சந்தேகப்பட்டான்? தன் மனைவியையா? அவள் கொண்டுவந்த செய்தியையா? ஒருவேளை ஒரு பெண்ணிடம் கொடுக்கப்பட்ட தேவ செய்தியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ என்று நினைத்தேன். ஆனால் வேதாகம வல்லுநர் அவனுடைய குறைவுபட்ட விசுவாசமே இதற்கு காரணம் என்கின்றனர். மனைவிமூலம் கேட்ட தேவசெய்தியை அவனால் நம்ப முடியவில்லை. தன்னுடைய செவிகளால் கேட்டால்தான் நம்புவேன் என்கிறான். எப்படி நாம் எடுத்துக்கொண்டாலும் சரி, அவன் தன் மனைவியின் செய்தியை நம்பவில்லை!
ஒரு நிமிஷம்! நாம் மனோவாவை அதிகமாக குற்றஞ்சாட்ட முன்னால், இப்படி தேவனுடைய செய்தியை கொண்டுவந்தவர்களின் செய்தியை ,அதைக் கேட்டவர்கள் நம்பாத சம்பவம் இரண்டு முறை புதியஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குப் பின்னால் ஏற்பட்ட சம்பவங்கள் அவை!
மாற்கு 16 வது அதிகாரம், 10, 11 வசனங்கள் கூறுகிறது, இயேசுவால் ஏழு பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலையாக்கப்பட்ட மகதலேனா மரியாள் , துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்த சீஷர்களிடத்தில் போய் அவர் உயிரோடிருக்கிறார் என்றும், அவளுக்குக் காணப்பட்டார் என்றும் கூறியபோது, அவர்கள் நம்பவேயில்லை!
சீஷர்களை நாம் குற்றப்படுத்துமுன், மாற்கு மகதலேனா மரியாளைப் பற்றி எழுதியிருப்பதை கவனியுங்கள்! அவள் சற்று காலத்துக்கு முன்பு ஏழு பிசாசுகள் பிடித்து இருந்தவள். சீஷர்கள் அவளை மனநிலை கோளாறு இருந்த சமயத்திலேயே அறிந்தவர்கள்! அவளுடைய வாயிலிருந்து வந்த செய்தியை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. யோசித்துப்பாருங்கள்! ஒருகாலத்தில் பைத்தியமாய் அலைந்தவள் , இப்பொழுது பைத்தியம் தெளிந்த நிலையில் வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நம்மிடம் வந்து சொன்னால் நாம் உடனே நம்புவோமா?
இதை நாம் தோமாவிடமும் பார்க்கிறோம். அவனுடைய தோழர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதாகக் கூறியபோது அவனால் நம்ப முடியவில்லை.ஏனெனில் கூறியவர்களின் கோழைத்தனம் தான் காரணம்! கதவு அடைக்கப்பட்ட அறையில் பயந்து நடுங்கிக் கொண்டு அவர்கள் கூறிய பேருண்மை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாததாயிருந்தது. அதனால் அவன் நானே தொட்டுப்பார்த்தாலொழிய நம்பமாட்டேன் என்று கூறிவிடுகிறான்.
அவர்கள் ஏன்? நீங்களும் நானும் எப்படி? தேவனுடைய செய்தியைக் கொடுத்தவர்களை நமக்குப் பிடிக்காததால் தேவனுடைய செய்தியையே நாம் அசட்டைப் பண்ணவில்லையா? ஒருசிலர் செய்தி கொடுக்கும்போது இவரா இன்று பேசுகிறார் என்று நாம் அற்பமாய் எண்ணுவதில்லையா?
பவுல் தன்னுடைய வார்த்தைகளால் இதைப்பற்றி என்ன கூறுகிறார் என்று பாருங்கள், ” ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.” ( 1 கொரி: 1:27)
என்ன வருத்தம்! மனோவா தன் மனைவி மூலமாய், இஸ்ரவேலுக்கு இரட்சகரை அனுப்புவதாகக் கூறிய தேவதூதனின் செய்தியை கேட்டபோது நம்பவேயில்லை!
ஜாக்கிரதை! தேவனுடைய செய்தியைக் கொண்டு வந்தவரை நமக்கு ஏதோ காரணத்தினால் பிடிக்காததால் அல்லது அவரை நாம் அற்பமாய் நோக்குவதால் தேவனுடைய செய்தியை நாம் நிராகரித்துவிடக்கூடாது.
செய்தியாளரை சந்தேகிப்பது செய்தியையே சந்தேகிப்பது போல!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்