கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1243 கசப்பான வாழ்வு எப்படி தேனாக இனிக்கும்?

ரூத்: 1 : 19, 20 ” அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.”

இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத் என்ற புத்தகத்தில் நான்கே அதிகாரங்கள் உள்ளன, அது பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த ரூத் என்ற பெண்ணின் பெயரைக்கொண்டது. ரூத் என்பவள் ஒரு மோவாபியப் பெண், யூத குலத்தை சார்ந்த நகோமியின் மருமகள். தன்னுடைய தேசத்தையும் உறவினரையும் விட்டு விட்டு அவள் தன் மாமியாருடன் யூதேயாவுக்கு சென்றதால், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு, உறவினரான போவாசை மணந்து , தாவீது ராஜாவுக்கு  தாத்தாவான ஒபேதைப் பெற்றாள். அதன் பின் அவர்கள் என்றென்றும்  சந்தோஷமாக பெத்லெகேமில் வாழ்ந்து வந்தனர், என்று சொல்லியிருப்பேன். உங்களுக்கும் இவ்வளவுதானே தெரியும்?

நான் இந்த புத்தகத்தின் பக்கங்களில் இழையோடியிருக்கும் கசப்பு என்ற வார்த்தைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டேன். ஆம் ரூத்தின் புத்தகம் எனக்கு கசப்பு என்றால் அர்த்தம் என்ன, அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்று என்னை சிந்திக்க வைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய மரத்தாலான  கப்போர்ட் ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நான் வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்ய வைத்திருந்த திராகவம் ஒன்று பாட்டிலிலிருந்து எப்படியோ ஒழுகி கொட்டியிருந்ததால், அந்த இடம் அப்படியே அரித்துப் போயிருந்தது. நான் அந்தக் கப்போர்டை  சுத்தம் செய்த அந்த நாளுக்கு முன்னால், இது இப்படி  ஒழுகி அரித்துக் கொண்டிருக்கிறதுஎன்று எனக்குத் தெரியவே தெரியாது. அந்த அழகிய கப்போர்டின் மூலை அப்படியே பாழாகி விட்டது.

இன்று நம்முடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு மூலையில், கசப்பு என்ற திராகவம் நமக்குத் தெரியாமலே கசிந்து அரித்துக்கொண்டு இருக்கலாம். ஒருவேளை நாம் அதை சுத்தப்படுத்த ஆரம்பித்தால் அது மிகுந்த வலியை கொடுக்கலாம். ஆனால் சுத்தப்படுத்துவோமானால் அது இனிமேலும் செய்யக்கூடிய அழிவை நாம் தடுக்க முடியும். நாம் கவனிக்காமல் விட்டால், கசப்பு என்னும் நச்சு நம் வாழ்வில் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் ஆற்றலையும்  திறமையையும் அழித்து விடும்.

ஒருவேளை உன் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் உன்னை இன்று நகோமியைப் போல , ‘கசப்பு என்ற காடியினால் கர்த்தர் என்னை ஊற வைத்திருக்கும்போது நான் எப்படி தேன் போல இனிமையாக இருக்க முடியும்? என்று நினைக்க செய்யலாம்.

கசப்பு என்ற காடியினால் நீ ஊறியிருக்கிறாயா? நீங்கள்  ஒருவேளை இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்களை  உங்கள் வாழ்வின் மூலையில் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பீர்களானால், உங்களை நாளையும் இந்த மலர்த்தோட்டத்துக்கு வரும்படி அழைக்கிறேன்.

உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னை திருப்தியாக்குவேன்  ( சங்:81:16) 

என்ற தேவனாகிய கர்த்தரின் வாக்குத்தத்தம் உங்களில் நிச்சயமாக நிறைவேறும்! கசப்பு என்கிற காடியை எடுத்து விட்டு, மகிழ்ச்சி என்ற தேனினால் அவர் உன்னை நிரப்புவார்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment