கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, To the Tamil Christian community

இதழ்:1246 இருதய நிறைவால் உன் வாய் துதி பேசும்!

ரூத்: 1: 22    “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”.

என்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில்  ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன். அந்த சிந்தை மனசோர்பையும்,  விசுவாச தளர்ச்சியை  மட்டும் அல்ல, உடல் நிலை பாதிப்பையும் கொண்டுவந்ததது.

சிறு வயதிலேயே கர்த்தர் மேல் அன்பையும் பற்றையும் கொண்டிருந்ததால், ஒருநாள் என்னுடைய சிறிய பர்சில் தேவனுடைய வாக்குத்தத்தங்களை, தேவனுடைய் துதியை சொல்லும் வசனங்களை அடுக்கி வைத்தேன். மனசோர்பு என்னைத் தாக்கியபோதெல்லாம் இந்த வசனங்களை எடுத்து சத்தமாக வாசிப்பேன், அது எனக்குள் என்னையறியாமலே உறுதியான, தெளிவான, நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிற்று. உடனே பெரிய மாறுதல் தெரியவில்லையென்றாலும், கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைத் தொடர்ந்து வாயினால் அறிக்கையிட்ட போது என் மனதிலிருந்த கசப்பு மாற ஆரம்பித்தது.

நகோமி தன்னுடைய இருதயத்தில் கனத்த பாரத்தையும், கசப்பையும் சுமந்தவளாய் பெத்லெகேமுக்கு திரும்பி வந்தபோது , வாற்கோதுமை அறுப்பின் துவக்க காலம் என்று வேதம் சொல்கிறது.

நகோமியின் இருதயத்தில் ஏற்பட்டிருந்த காயத்தைக் கட்டவும், அவளுடைய நொறுங்கிய மனதை ஆறுதல் படுத்தவும் சித்தம் கொண்டிருந்த தேவனாகிய கர்த்தர் அவளை உசிதமான கோதுமையினால் போஷிக்கவும் சித்தம் கொண்டிருந்தார். அவள் பெத்லெகேமுக்குள் வந்தது வாற்கோதுமை அறுவடை செய்யும் காலம்! நகோமியும் ரூத்தும் கர்த்தரால் போஷிக்கப்பட்டனர்.

அந்த அறுவடையின் பலனால் திருப்தியான நகோமியின் உள்ளமும், நாவும் கர்த்தரின் துதியால் நிறைந்தது. கர்த்தர் நமக்கு அற்புதமாக அருளும் அன்றாட கிருபைகளுக்காக நம் உள்ளம் நன்றியால் நிறையும்போது நம்முடைய நாவிலிருந்து வெளிப்படும் கசப்பு போய், அது தேவனுடைய துதியால் நிறைகிறது.

ஒருநாள் ஒரு குரு தன்னுடைய சிஷ்யனிடம் கூறினான், “என்னுடைய இருதயத்தில் இரண்டு ஓநாய்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று கோபமும், வஞ்சனையும், முரட்டுத்தனமும் கொண்டது. மற்றது அன்பும், இரக்கமும் கொண்டது “என்று.

அதற்கு சிஷ்யன் அவனிடம்,” அவற்றில் எது வெற்றி பெறும்?” என்று கேட்டான்.

குரு அவனிடம்,” எது என்னைப் போஷிக்க வல்லதோ அதுவே வெற்றி பெறும்” என்றான்.

இன்று நம்முடைய வாழ்க்கையை எது போஷிக்கிறது என்று சற்று சிந்திப்போம்!

அன்பின் தேவனுடைய பிள்ளைகளே தேவனுடைய வார்த்தை நம்மை போஷிக்க வல்லது! ஜீவ அப்பமாகிய தேவ வார்த்தைகள் நம்மை நிரப்பும்போது கசப்பு மறைந்து போய் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நம்மை நிரப்பும்!

ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் தேவனுடய வார்த்தையை வாசிக்கவும் தியானிக்கவும் கொடுக்கிறீர்கள்? வேதம் வாசிப்பது கடமைக்காக செய்வதாக இல்லாமல் தேவனே நான் உம்முடைய சத்தத்தை கேட்க ஆவலாயிருக்கிறேன் என்ற உள்ளத்தின் ஆவலோடு அதை வாசிக்கும்போதுதான் நாம் போஷிக்கப் படுவோம்.

என்னுடைய 48 வருட கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவத்தில் சொல்கிறேன் இந்த ஜீவ வார்த்தைகள் நம்மோடு பேச வல்லவை! தயவுசெய்து அதை அனுபவித்துப் பாருங்கள்!

சில நேரங்களில் நம்முடைய வாழ்வில் பஞ்சம் நேரிடும்போது, நாம் கசப்பான வார்த்தைகளை நகோமியைப் போல பேசுவதற்குக் காரணம், நம்முடைய ஆத்துமா போஷிக்கப்படாமல் வறட்சியாவதினால்தான். உங்கள் ஆத்துமாவை போஷிக்க வல்ல தேவ வார்த்தைகள் அனுதினமும் உங்களை நிரப்பட்டும்!

இன்று உன்னுடைய  இருதயம்  கர்த்தருடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டிருக்குமானால், இதயம் மகிழும், கண்கள் தெளியும், உன்னுடைய  வாய் தானாகவே அவர் துதியைப் பேசும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment