ரூத்: 2 : 9 “…உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க் குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.”
யோவான்: 4: 13, 14 “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக; இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”.
தண்ணீர்க்குடம், தாகம் என்ர வார்த்தைகளைக் கேட்டதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது சமாரிய ஸ்திரீ தான் அல்லவா! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் தாகம் தீர்க்கப்பட்ட அவள், அவர் மேல் வைத்த அன்பினால் தன் ஊருக்குள் ஓடி,தன்னை அவலமாய் எண்ணிய கிராமத்தாரை, அந்த இயேசுவை வந்து பார்க்கும்படி அழைத்தது நமக்குத் தெரிந்ததே!
ஒருவேளை நீங்கள், நாம் ரூத்தைப் பற்றி அல்லவா படித்துக் கொண்டிருக்கிறோம், இங்கு சமாரிய ஸ்திரீக்கு என்ன வேலை என்று நினைக்கலாம்.
இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் போவாஸ், நம்முடைய ரூத்திடம்
உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க் குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான் என்று பார்க்கிறோம்.
ரூத் தனக்காகப் போய்த் தண்ணீர் மொள்ள அவசியம் இல்லை. போவாஸ் அவளுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணிவிட்டான். அவன் அந்த வயல் வெளிக்கு எஜமானாய் இருக்கும்வரை அவளுக்கு எந்தக் குறையும் அங்கே இல்லை. அவள் தாகத்தால் கஷ்டப்பட வேண்டியதே இல்லை. இந்தப் பெண், இவளுக்குப் பின்னால் ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் வாழ்ந்த சமாரிய ஸ்திரீயைப் போல தன்னுடைய தாகத்தை தீர்த்த எஜமானனைக் கண்டு கொண்டாள்.
போவாஸ் ரூத்தைத் தெரிந்து கொண்டது, புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரிய ஸ்திரீயை மட்டுமல்ல உங்களையும் என்னையும் தம்முடைய சுதந்தரத்தில் பங்கு கொள்ளும்படியாக கண்டு கொண்டதை ஒரு தீர்க்கதரிசனத்தைப் போல விளக்குகிறது. அவர் நம்மைக் கண்டு கொண்டது மட்டுமல்லாமல் நம்முடைய தாகத்தைத் தீர்க்கும் ஜீவத் தண்ணீரையும் நமக்கு அளிக்கிறார்.