கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1459 அவர் நல்லவர்! அவர் கிருபை என்றுமுள்ளது!

2 சாமுவேல் 12:5  அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்)  மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.

இன்றைய வேதாகமப் பகுதி தாவீதுக்கு பயங்கர கோபம்மூண்டதாகக் கூறுகிறது!

தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட் வேண்டும் என்று நினைத்தான் தாவீது. அதையும் தாண்டி கோபத்தின் உச்சிக்கே போய் அவன் இந்தக் காரியத்தை செய்த அந்த மனுஷன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறான்.

இதை வாசிக்கும்போதுதான் தாவீது ஒருகாலத்தில் ஆடுகளை மேய்த்த ஒரு மேய்ப்பன் என்பது நினைவுக்கு வந்தது. சங்கீதம் 23 ல் தாவீது கர்த்தராகிய தேவனை ஒரு நல்ல மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு தாவீது எழுதுகிறான்.

நாத்தான் அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியைப் பற்றி, அது அவனுக்கு ஒரு மகள் போல இருந்தது என்று கூறிய வார்த்தைகள் மேய்ப்பனாயிருந்த தாவீதால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்த வார்த்தைகள் தான். இளம் வாலிபனாக ஆடுகளை மேய்த்த காலத்தில் அவன் நிச்சயமாக தன்னுடைய மந்தையில் இருந்த ஒவ்வொன்றின் குரலையும் அறிந்து, ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டி, அவைகளை பத்திரமாக நடத்தியிருந்திருப்பான். அவன் தன்னுடைய ஆடுகளை ஓநாயிடமிருந்தும், சிங்கத்தினிடமிருந்தும் தன்னுடைய உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது நமக்குத் தெரிந்ததே.

இத்தனை இளகிய மனதுள்ள தாவீதுக்கு தீர்க்கதரிசியாகிய நாத்தான் அந்த ஐசுவரியவான் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்து விட்டான் என்று கூறியதை தாங்கவே முடியவில்லை. அவனுடைய உடனடி பதில் மிகுந்த கோபத்துடன், என்ன தைரியம் அவனுக்கு, அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்றே வந்தது

உங்களிடம்  ஒன்று கேட்கிறேன்! நம்மில் எத்தனை பேருக்கு நாம் தவறிபோய் பாவத்தில் விழுந்தபோது, தேவன் நம்முடைய பாவத்துக்குத் தக்க தண்டனையை கொடுத்திருக்கிறார்? அப்படி அவர் நம்மை தண்டித்திருப்பாரானால்,   நாம் இன்று உயிரோடவே இருக்கவே முடியாது அல்லவா? அவருடைய தயவுக்கும், கிருபைக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என்மேல்  அவர் தம்முடைய மகா பெரிய தயவையும், கிருபையையும்  காட்டினாரே, அதை நான் எப்படி மறப்பேன்?

சங்கீதத்தில் மாத்திரம் கிருபை என்ற வார்த்தை 100 முறை வருகிறது.  இதை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது எனக்கு எத்தனை ஆதரவாக இருக்கிறது தெரியுமா? ஏனெனில் என்னுடைய தேவனாகிய கர்த்தருடைய கிருபை இந்த உலகத்தில் உள்ள நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, பாவியிலேயே மகா பாவியான எனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது!

அந்த தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை!

அன்பின் சகோதர சகோதரிகளே!  தேவனாகிய கர்த்தருடைய நித்திய கிருபையை நீங்கள் அனுபவித்ததுண்டா? அப்படியானால் அவரை நன்றியோடு ஸ்தோத்தரியுங்கள்! ஒருவேளை இன்னும் அனுபவிக்காமல் இருப்பீர்களானால் இன்றே அவருடைய மகா இரக்கத்தையும் , கிருபையையும் ருசிபார்க்க அவரை கிட்டி சேருங்கள்!

அவர் நல்லவர்! அவர் கிருபை என்றுமுள்ளது!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment