1 இராஜாக்கள் 17:5 அவன் போய் கஎத்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
காத்திருப்பது யாருக்குமே பிடிக்காத காரியம் என்று நினைக்கிறேன்! எதற்காகவாவது அல்லது யாருக்காவது அதிக நேரம் காத்திருந்து விட்டால், எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டோம் என்று நான் நினைப்பதுண்டு.
சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தபோது திடீரென்று முன்னால் செல்ல முடியாதபடி வாகனங்கள் நிறுத்தப்பட்டன! இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தோம். என்னக் காரணம் என்றேத் தெரியவில்லை. பக்கத்தில் இருந்த காரிலிருந்து ஒருவர் வேகமாக இறங்கிப் போய் சற்று நேரத்தில் திரும்பி வந்தார். அவரிடம் எல்லோரும் ஆவலோடு என்ன ஆயிற்று என்று விசாரித்த போது ஏதோ ஸ்டிரைக் நடக்கிறதாம் என்று கூறினார். ஐயோ எவ்வளவு நேரம் வீணாகிவிட்டது, நம்மால் இன்று போக முடியாமல் போய்விடுமோ என்று புலம்பிக் கொண்டே காத்துக் கொண்டிருந்தோம்.
இரண்டு மணி நேரம் கழித்து வாகனங்கள் மெதுவாக முன்னே செல்ல ஆரம்பித்தன! ஒரு 15 நிமிடங்கள் நாங்கள் முன்னேறிய போது எங்கு பார்த்தாலும் கற்கள் எறியப்பட்டு, 10 பஸ்களுக்கு மேல் கல்லால் உடைக்கப்பட்டிருந்தன. பெரிய போர்க்களம் போல அந்த இடம் காட்சியளித்தது. இரண்டு பக்கமும் போலீஸ் படைகள் நின்றன, கண்ணீர் புகையை உபயோகப்படுத்தியிருந்தனர். அநேக வாகனங்களும் அடிபட்டு நின்றன! நாங்கள் 15 நிமிடம் டிரைவிங் தூரத்தில்தான் இருந்தோம் என்று உணர்ந்தபோது காத்திருந்த அந்த இரண்டு மணி நேரத்தின் வலி பெரியதாகத் தெரியவில்லை. காத்திருந்தாலும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தோமே என்ற நிம்மதிதான் வந்தது.
எலியா கேரீத் ஆற்றண்டையிலே காத்திருந்த நேரத்தைப் பற்றி யாரோ ஒருவர் இவ்வாறு எழுதியிருந்ததை வாசித்தேன்;
இதோ தேவனுடைய மனிதன் எலியா! இவருடைய வாசஸ்தலம் கேரீத் ஆற்றங்கரை! நீல வானமே அவருடைய கூரை! கூரிய கற்களே அவருக்கு சுவர்கள், ஒரு சமமான கல்லே அவருடைய நாற்காலி, மரத்தின் அடியே அவருடைய படுக்கை, புல்வெளியும், காகங்களின் சத்தமும்தான் அவருக்குத் துணை, அங்கே அவன் உரோமத்திலான சால்வையின் மேல் அமர்ந்திருக்கிறான். அவனுடைய காத்திருத்தல் வலியாய் தோன்றின போது, தனிமை அவனை வாட்டியபோது, மிருகங்களின் நடமாட்டமும், சர்ப்பங்களின் ஸ்ஸ் என்ற சத்தமும் அவனை பயமுறுத்தும்போது அவன், நான் என்னுடைய தேவனுக்காக இங்கே சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறேன். அவருடைய காலடிகள் இந்த பாறைகளின் நடுவே உள்ளன என்று தன்னுடைய விசுவாசத்தாலும், நம்பிக்கையாலும் தைரியம் பெற்றுக் கொண்டான்.
நம்மில் யாராவது இன்று இந்த காத்திருத்தல் என்ற பள்ளத்தாக்கைக் கடந்து கொண்டிருப்போமானால் நமக்கு இந்த வலி புரியும். எதுவுமே நகரவில்லை, எல்லாமே நின்று போன மாதிரியிருக்கிறது, அடுத்த அடி எங்கு வைப்பது என்று புரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறாயா? இந்த காத்திருப்பின் வேளைதான் நம்மை முற்றிலுமாய்த் தேவனை நம்ப செய்யும் நேரம்!
நாம் அனைவருமே தேவனுடைய வருகைக்காகவும் காத்திருக்கிறோம் அல்லவா!
அப்போஸ்தலனாகிய பவுல், ரோமருக்கு எழுதிய நிருபத்தில்
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது ( ரோமர் 8:19) என்று கூறுகிறார். தேவனுடைய வருகைக்காக காத்திருக்கும் நாம் சில நேரங்களில் என்று தீரும் இந்த ஆவல் என்று நினைக்கிறோம், ஆனால் நாம் மட்டும் அல்ல தேவனுடைய சிருஷ்டிகளும் கூட கர்த்தருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருக்கின்றன.
நம்முடைய வேளை அவருடையது அல்ல! கர்த்தர் உன்னைக் காத்திருக்கச் சொல்லும் நாட்கள் ஒருபோதும் வீணாய்ப் போவதில்லை! அவருடைய வேளைக்காக காத்திரு! அவர் கரம் உன்னை வழி நடத்தியதை, பாதுகாத்ததை, உன்னைத் திருத்தியதை, உனக்கு வெகுமானம் அளித்ததை பின்னர் புரிந்து கொள்வாய்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
