1 இராஜாக்கள் 17:7 தேசத்தில் மழை பெய்யாதபடியினால் சிலநாளுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று.
யாத்திராகமம் 14:13 … பயப்படாதிருங்கள். நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.
தேவனுடைய மனுஷனான எலியா ஒரு வருடமாக கேரீத் ஆற்றங்கரையை தன் தங்குமிடமாகக் கொண்டிருக்கிறான். அவனுடைய தாகத்தை ஒவ்வொருநாளும் தீர்த்து வந்த ஆறு இப்பொழுது தண்ணீரற்று வரண்டு போயிற்று.
உன்னுடைய பெயர் எலியாவென்றால் இந்த சூழலில் நீ என்ன நினைத்திருப்பாய்? இதையெல்லாம் முன்னரே நினைத்து திட்டம் போட்டு செயல்பட வேண்டும் என்று சொல்கிறாயா?இந்நேரம் நான் யோர்தானை நோக்கி நடந்திருப்பேன் என்று சொல்கிறாயா? தண்ணீர் வற்றி தரை தெரிய ஆரம்பித்ததுமே எலியாவின் மனதிலும் சிறிது கரிசனை எழுந்திருக்கும். இந்த மனிதன் கரடு முரடான கீலேயாத் மலைகளில் வளர்ந்தவன். தண்ணீரின் அவசியம் அவனுக்கு நன்குத் தெரியும். தண்ணீர் வற்றிக் கொண்டே வந்த போது அவனுக்குள்ளும் கேள்விகள் எழுந்திருக்கும். ஒருநாள் முற்றிலும் காய்ந்து போய் விட்டது.
எலியாவுக்கு என்ன நடந்தது என்று நாம் சிந்திக்கும்முன் நம்முடைய வாழ்வை சற்று சிந்திப்போம்! நாம் நம்பிக் கொண்டிருந்த நீரோடை என்றாவது வற்றிப் போன அனுபவம் உங்களுக்கு உண்டா?
எனக்கு எந்த நோயும் இல்லை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறிக்கொண்டிருந்த போது திடீரென்று வந்த அந்தத் தீராத நோய் , உன்னால் வேலைக்கு போக முடியாத நிலைமை, தேவைகளை சந்திக்க பணப் பற்றாக்குறை , என்ன நடக்கிறது என்று உணரும் முன்னர் நீரோடை வறண்டு போயிற்று! – இப்படிப்பட்ட அனுபவத்தைக் கேட்கிறேன்!
நீ ஆரம்பித்த வியாபாரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. உன் வாழ்க்கை துதியின் பாடல்களோடுதான் சென்று கொண்டிருந்தது. திடீரென்று எல்லாமே மாறிவிட்டது. பொருளாதாரம் குட்டிக்கர்ணம் அடித்ததால் உன்னுடைய வியாபாரம் திணறியது, நீ நம்பிய நீரோடை வறண்டு போயிற்று – இப்படிப்பட்ட அனுபவத்தைக் கேட்கிறேன்!
இன்று அநேக வாலிபரின் வாழ்வில் அன்பு என்ற நீரோடை வறண்டு போவதால் வரும் ஏமாற்றங்களைப் பார்க்கிறேன். நீ கனவுகண்ட அந்த இளவரசன் தன் கையிலிருந்த பட்டயத்தால் உன் இருதயத்தை உருவக் குத்தினது போன்ற அனுபவம் – ஏமாற்றத்தால் நீ நம்பியிருந்த நீரோடை வறண்டு போன அனுபவத்தைக் கேட்கிறேன்!
நாம் முற்றிலும் நம்பிய ஒன்று நம்பத்தகாதது என்று அறிந்து கொள்ள நாம் கடினமான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இன்று நீ ஒருவேளை நான் வாழ்க்கையின் கடைசி முனையில் நிற்கிறேன், எனக்கு நம்பிக்கையேயில்லை என்று எண்ணுவாயானால், முதலில் உன்னை அங்குக் கொண்டுவந்தவர் யார் என்பதை மறந்து விடாதே.
வேதத்தில் எனக்கு மிகவும் பிடித்த வேதாகமப் பகுதியை இங்கு பதிவிடுகிறேன்.
ஏசா 49 15 -16 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை.
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
உன்னுடைய கேரீத் அனுபவத்தில் நீ நம்பியிருந்த யாவும் வறண்டு போன நிலையில், நீ நம்பும் கன்மலை கர்த்தர் ஒருவரே உன்னைக் கைவிடமாட்டார் என்பதை அறிந்து கொள்வாய். அவர் வாக்கின்படியே அவர் எப்பொழுதும் உன்னோடிருப்பார், உன்னைத் தாங்குவார், பாதுகாப்பார், தப்புவிப்பார்.
அதுமட்டுமல்ல உன்னுடைய கேரீத் வறண்டுபோகும்போது அவர் உனக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு போய் விடுகிறார். அல்லேலுயா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
