1 இராஜாக்கள் 17:7 – 9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
எலியா கேரீத் ஆற்றண்டையில் குடிவந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று. என்னுடைய கட்டிலும் மெத்தையும் இல்லாமல் நான் தூங்கவே மாட்டேன் என்று நீயும் நானும் நமக்குள் சொல்லிக் கொள்ளும்போது, வெளிகளில் கூடாரம் அமைத்து வாழ ஆசைப்படும் சிலருக்கு இது ஒரு கனவு நினைவானது போல இருக்கும்.
கிலேயாத்தின் தினசரி வாழ்க்கைக்கு மத்தியில் அம்மலைகளின் செங்குத்தான பள்ளத்தாக்குகளும் எலியாவுக்கு பழகிய வாழ்க்கைதான். இப்பொழுது கேரீத் ஆறங்கரையில் நீல மேகத்தின் அடியின் தேவனாகிய கர்த்தருடன் பேசுவதும், அந்த ஆற்றின் குளிர்ந்த தண்ணீரும் அவனுடைய துணையாகி அவனுடைய இருதயத்தைக் குளிரச் செய்தன! இந்தத் தனிமையில் எலியா முற்றிலும் தேவனை சார்ந்து வாழப் பழகினான்.
திஸ்பியனாகிய எலியா என்று தலைப்புள்ள புத்தகத்தில் F.W க்ருமாச்சர் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார். “ஆனால் ஒருநாள் அந்த ஆற்றின் தண்ணீர் வற்றி வறண்டு போயிற்று. இதன் அர்த்தம் என்ன? இஸ்ரவேலின் தேவன் எங்கே? இவ்வளவு நாட்கள் என்னை இந்த மறைவில் வைத்த தேவன் இன்று கைவிடுவாரா? நான் இனி கர்த்தரின் தீர்க்கதரிசி இல்லையா? நான் ஏதாவது பாவம் செய்து அவரை துக்கப்படுத்தி விட்டேனோ? அவர் என்னை என்னை அவருடைய வேலையிலிருந்து தூக்கி விட்டாரோ? என்றெல்லாம் கூட அவன் மனதில் எண்ணங்கள் ஓடியிருக்கலாம்.”
அவர் எழுதியுள்ள இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையிலும் சில நேரங்களில் பொருந்தியிருக்கிறது. தேவனுடைய சித்தத்துக்காக காத்திருந்து, ஜெபித்து, அவரை முழுமனதோடு தேடி, அவருடைய வழிநடத்துதலின்படி நடந்த பின்னர், என்னுடைய வாழ்க்கையில் வறண்ட நிலைக்கு நான் தள்ளப்பட்டபோது, ஐயோ என்னை இவ்வளவு தூரம் வழிநடத்தியவர் இன்று என்னை கைவிட்டாரோ என்று எண்ணியிருக்கிறேன்.
எலியாவின் வாழ்க்கையில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் சரீரம் துவண்டு போகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, தேவன் அவனை சாறிபாத்துக்குப் புறப்பட்டு போகழ் சொன்ன போது அது அவனுடைய பெலவீனமான சரீரத்தை இன்னும் வருத்தப்படுத்தியிருக்கும். இந்த சரீர வேதனையால் அவன் ஆவிக்குரிய பெலனும் துவண்டு போய் விடுமோ என்ற நிலைமை!
ஆனால் கேரீத் ஆற்றண்டையிலே எலியா தன்னுடைய மிகவும் சிறுமையான வேளையிலும் தேவனை முற்றிலும் சார்ந்து வாழக் கற்றுக் கொண்டிருந்தான். ஏசாயா 28:16 விசுவாசிக்கிறவன் பதறான் என்று கூறுகிற விதமாக அவன் பதறவில்லை! அவன் தனக்குண்டான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான்.
தேவன் கேரீத்தண்டையில் அவனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம், சுயநம்பிக்கையல்ல தேவநம்பிக்கை! தன்னை ஒருபோதும் கைவிடாத தேவன் மேல் உள்ள அசையாத நம்பிக்கை! அதனுடைய பலன் தான் , “கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று ” என்ற அற்புதம். இதுவே எலியாவின் வல்லமையின் இரகசியம் என்று நினைக்கிறேன்!
எந்த சூழ்நிலையிலும் தேவனை சார்ந்து வாழ வேண்டுமானால் நாமும் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்க வேண்டும்! இன்று தேவனுடைய சத்தம் உங்கள் செவிகளில் விழுகிறதா? உங்களை வழிநடத்துவதை உணருகிறீர்களா? அவருடைய வார்த்தை உங்களை வழிநடத்துமானால் பயப்பட வேண்டாம்! பதற வேண்டாம்! இந்த வறட்சியைத் தாங்க உங்களுக்கு பெலன் தருவார்.
கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின்படியே நம்மை ஆசீர்வதிப்பாராக!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
