கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families

இதழ்:1616 வண்டலின் மேல் அசையாமல் நிற்கும் வாழ்க்கை??

1 இராஜாக்கள் 17:8-9  தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

எரேமியாவின் புஸ்தகத்தில் 47:1 ல் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம் என்று எழுதியிருக்கிறதை படித்தபோது எனக்கு எலியாவின் ஞாபகமே வந்தது. இந்தத் தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையில் கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு அடிக்கடி வந்தது. அவர்களுடைய சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேலரைப் பற்றி மட்டுமல்ல, கானானில் குடியிருந்த மற்ற இனத்தவரைப் பற்றியும் வந்தது.

அவ்வாறு கர்த்தருடைய செய்தியைப் பெற்ற ஒரு நாடு மோவாப்.

எரேமியா 48:11 மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது.அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது. அது சிறையிருப்புக்குப் போனதில்லை, ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது, அதின் வாசனை வேறுபடவில்லை.

இதை வாசிக்கும்போது அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது என்ற வாக்கியம் எனக்குப் புரியவேயில்லை. நான் இதுவரை இந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்டதேயில்லை! நீங்கள்??? வண்டல் என்றால் தமிழில் ஆறு, வெள்ளம் முதலியவை அடித்துக் கொண்டு வந்து ஒதுக்கும் மண் என்று அர்த்தம். இதற்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள லீஸ்  (lees) என்ற வார்த்தைக்கு மண்டி என்று அர்த்தம்.  திராட்சையிலிருந்து ரசம் எடுக்கும்போது அதில் அடியில் படியும் மண்டியை வடிகட்ட அதை  ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்திற்கு மாற்றி மாற்று ஊற்றுவார்கள்.

இந்த வசனத்தைப் பார்க்கும்போது, மோவாபின் ஜனங்கள் சுலபமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறு வயது முதல் எந்த பிரச்சனையும், எந்த சிறையிருப்பும், எந்த மாறுதலும் அவர்களிடம் இல்லாததால் அவர்களிடம் ஒரே ருசிதான் இருந்தது, அவர்கள் வாசனை வேறுபடவில்லை என்று தெரிகிறது. பிடுங்கி நடப்பட்ட நாத்துகளே கனி கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வண்டல் மண் போன்ற மண்டியான இடத்தில் அவர்கள் வாழ்வு அசையாமல் இருந்ததால் இவர்கள் வாழ்வில் எந்த நற்கந்தமும் வீசவில்லை!

எலியாவினுடைய வாழ்வில் தேவனாகியக் கர்த்தர் கிரியை செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த கீலேயாத்தின் மலைகளில் கரடு  முரடாக சுய நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்த எலியாவை தேவன் இடம் பெயர்த்து ராஜாவாகிய ஆகாபின் அரண்மனை வாசலில் நிற்கச் செய்தார். அதோடு தேவனுடைய கிரியை முடிந்து விடவில்லை. அங்கிருந்து அவனை இடம்பெயர்த்து மழை காலத்தில் மட்டும் ஓடிய கேரீத் ஆற்றண்டையிலே, காகங்களாலே போஷிக்கப்பட்ட மறைவிடத்திலே கொண்டு வந்தார். அங்கு இருந்த ஒருவருட வாழ்க்கையில் அவன் தேவன் மேல் முற்றிலும் சார்ந்து வாழ ஆரம்பித்தான். ஆனால் தேவனுடைய சுத்திகரிப்பின் கிரியை அங்கோடு முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் , ஆகாபின் மனைவியாகிய யெசபேலின் தந்தை ஆண்டு வந்த  சீதோனிலிருந்த சாறிபாத்தை நோக்கி நடக்கும்படி கூறினார்.

ஒவ்வொரு பாத்திரமாக ஊற்றப்பட்டு வடிகட்டப் படுதலை நான் எலியாவின் வாழ்க்கையில் பார்க்கிறேன். எலியாவின் வாழ்க்கையில் வடிகட்டி சுத்தப்படுத்தல் இவ்விதமாக இருந்தது ஆனால் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் அது வேறுபடும். நான் வண்டலின் மேல் அசையாமல் நின்றுவிடக் கூடாது என்றும், நான் வடிகட்டி சுத்திகரிக்கப்படாமல் இருந்து விடக்கூடாது என்றும் தேவன் நம்முடைய வாழ்வில் வெவ்வேறு விதமாக கிரியை செய்து வருகிறார்.

உன் வாழ்வில் இன்று தேவன் கிரியை செய்து கொண்டிருக்கிறாரா? உன்னுடைய சுகமான, எளிதான  வாழ்க்கை அசைக்கப்பட்டு விட்டதா? நீ வடிகட்டப்பட்டுக் கொண்டிருக்கிறாயா? பயப்படாதே!  தேனாகியக் கர்த்தர் உன்னை விலையுயர்ந்த சுத்திகரிக்கப்பட்ட திராட்சை ரசமாக்கிக் கொண்டிருக்கிறார்! 

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment