1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.
எலியா தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உருக்காலை என்று அர்த்தம் கொண்ட பாகால் வழிபாட்டுஸ்தலமான சாறிபாத்துக்கு 150 கிமீ தூரம் பிரயாணம் பண்ணி சென்றான் என்று பார்த்தோம்.
எலியா சாறிபாத்தின் ஒலிமுகவாசலில் உள்ளே பிரவேசிக்கிறான், அங்கே ஒரு விதவை விறகு பொறுக்குவதற்காக வெளியே வருகிறாள்.அவர்கள் சந்தித்தது ஒரு விபத்தா அல்லது தற்செயலாக நடந்ததா?? இல்லவே இல்லை!
வேதத்தில் இவ்வாறு நடந்த இன்னும் சில காரியங்கள் என் மனக்கண் முன் தோன்றுகின்றன.
1. மோசேயின் தாய் அவனை ஒரு நாணல் பெட்டியில் வைத்து நைல் ஆற்றில் விட்ட அதே சமயத்தில் பார்வோன் குமாரத்தி அங்கே ஸ்நானம் செய்ய வந்ததும், அந்தப் பெட்டியை கண்டு, அது எபிரேயக் குழந்தை என்று அறிந்தும் அந்தக் குழந்தையை நேசித்து, தான் அதை வளர்க்க முடிவு செய்ததும் தற்செயலாக நடந்து இருக்குமோ??
2. இரண்டு இஸ்ரவேல் வேவுக்காரர், மற்ற எல்லா வீடுகளையும் விட்டுவிட்டு, இஸ்ரவேலின் தேவனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் மனதில் விசுவாசித்த ராகாப் வீட்டிற்குள் பிரவேசித்தது ஒரு தற்செயலாய் நடந்த செயலாக இருக்குமோ???
3. தன் சகோதரரால் விலைக்கு விற்கப்பட்ட யோசேப்பு எகிப்தில் சிறைவாசம் அனுபவித்ததும், அங்கு ஒருவரின் கனவுகளுக்கு அர்த்தம் கூறியதால் பார்வோனுக்கு முன்பாக அழைக்கப்பட்டதும், பின்னர் அந்த பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் எகிப்துக்கே அதிபதியாக மாறியதும், பின்னர் அவன் தன்னிடம் அடைக்கலமாய் வந்த தன் சகோதரரிடம் நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள் ஆனால் கர்த்தர் அவை யாவற்றையும் நன்மையாக மாற்றினார் என்றானே அது தற்செயலாய் நடந்திருக்குமோ????
இவை யாவும் தற்செயலாய் நடந்திருக்கும் என்று நாம் நினைப்போமானால், எலியா சாறிபாத்தின் ஒலிமுக வாசலுக்குள் பிரவேசிக்கும்போது அந்த விதவை விறகு பொறுக்க ஊருக்கு வெளியே வந்ததும் தற்செயலாய் நடந்திருக்கும்.
தேவன் நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே அடையாளம். நம்முடைய வாழ்வில் நடக்கும் எல்லா தீமைகளையும் நன்மையாக மாற்றக் கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
சில நேரங்களில் இதை விசுவாசிக்கக் கடினமாகத் தோன்றுகிறது அல்லவா? ஏனெனில் இதை நம் கண்களால் காண முடியவில்லை! ஆனால் நம்முடைய பரமபிதா நாம் அனுவைத்துக் கொண்டிருக்கும் எல்லா வேதனைகளையும், வலிகளையும், குடும்பப் பிரச்சனைகளையும், நன்மையாக மாற்றும்படியாகக் கிரியை செய்து கொண்டிருக்கிறார். நான் ஐயோ கேரீத் ஆறு வற்றிவிட்டதே, இனி நான் என்ன செய்வேன் என்று பதறும்போது, அவர் எனக்காக சாறிபாத்தில் ஒரு வீட்டை ஆயத்தம் பண்ணிவிட்டார்! என்னுடைய பசியை ஆற்ற நான் 150 கிமீ நடந்து போய் சரியான இடத்தில், சரியான வேளையில் அந்த விதவையை சந்திக்கச் செய்கிறார்!
சாறிபாத்துக்குள் நுழைய நிச்சயமாக பல வாசல்கள் இருந்திருக்கும், விறகு பொறுக்க அந்த விதவைக்கு ஊருக்கு வெளியே பல இடங்கள் இருந்திருக்கும்! ஆனால் அவர்கள் இருவரையுமே ஒரே வழியில்நடத்தி , ஒரே இடத்தில் சந்திக்க வைத்த தேவன் அவர்கள் இருவருமே இனி பட்டினியாயிருக்காதபடி கிரியை செய்து கொண்டிருந்தார்.
உன் வாழ்க்கையிலும் நீ தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கேரீதண்டை கிரியை செய்து கொண்டிருக்கிறார், நீ நடந்து கொண்டிருக்கும் 150 கிமீ பாதையிலும் கிரியை செய்து கொண்டிருக்கிறார், நீ நினையாத அளவுக்கு சாறிபாத்திலும் உனக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார்! அவரால் பல இடங்களில், பலவிதங்களில் கிரியை செய்ய முடியும்! நீ ஒரு முனையில் இருக்கும்போது அவர் உனக்காக மறுமுனையில் கிரியை செய்ய வல்லவர்!
கர்த்தர் இன்று உனக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை விசுவாசிப்பாயா! விசுவாசித்தால் நீ அவருடைய கிரியைக் காண முடியாவிட்டாலும் அவரை இன்று ஸ்தோத்தரி!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
