கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1620 நம்மைக் குறைவுபடாமல் பராமரிக்கும் தேவன்!

1 இராஜாக்கள் 17: 9-10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.

எலியாவைக் கர்த்தர் சாறிபாத்துக்கு போ என்று கட்டளையிட்டார் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவன் அறியாத ஊரில், அவன் அறியாத ஒரு விதவை அவனுக்கு போஜனம் கொடுத்து பராமரிக்கப் போகிறாள் என்றும் கூறினார்.

இந்த வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தியதால், இதை சற்று ஆழமாக,  சில வார்த்தைகளின் அர்த்தத்தை எபிரேய மொழியில் பார்க்கலாம் என்று யோசித்தேன்.

நீ எழுந்து என்ற வார்த்தைக்கு தைரியத்தோடும் பெலத்தோடும் எழும்பு, ஒரு காரியத்தை செய்து முடிக்க எழும்பு, வெற்றிகரமாக ஒரு காரியத்தை செய்ய எழும்பு என்ற அர்த்தங்கள் உள்ளன்.

தங்கியிரு என்ற வார்த்தைக்கு அமர்ந்திரு, உட்கார்ந்திரு, குடியிரு என்று அர்த்தம்.

பராமரிக்கும்படி என்ற வார்த்தைக்கு, அங்கிருந்து உணவு கொடுக்க, தங்க  வைத்து  உணவளிக்கும்படி என்று அர்த்தம்

கட்டளையிட்டேன் என்ற வார்த்தைக்கு ஆணையிட்டேன் என்று அர்த்தம்.

இந்த அர்த்தங்களைப் படித்ததின் மூலமாக நான் சிலக் காரியங்களைக் கற்றுக் கொண்டேன். எதையுமே ஆழமாக அறிய வேண்டுமென்று ஆராயும்போது இதுவரை அறிந்திராத உண்மைகள் புலப்படும். அதனால் தான் நீங்கள் ஒவ்வொருவரும் வேதத்தை நேரம் எடுத்து ஆராய்ந்து படிக்க வேண்டும் என்பது என் ஆவல். நான் அறிந்து கொண்ட காரியங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்ல என்னை ஆறுதலும் படுத்தியது.

முதலில் தேவனாகியக் கர்த்தர் சாறிபாத்தின் விதவைக்கு உன்னைப்  பராமரிக்கும்படி  கட்டளையிட்டேன் என்ற அதே வார்த்தைதான் எபிரேய மொழியில் காகத்துக்கு கட்டளையிட்டதையும் குறிக்கிறது . அந்தக்  கறுப்பு பறவைகளும், அந்நிய நாட்டின் விதவையும்  தேவனுடைய நண்பர்கள் போலும்!  பாஸ்டர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் கூறிய விதமாக, எல்லா வல்லமைகளும் நிறைந்த சர்வ வல்ல தேவனுக்கு ( omnipotence ) எல்லா இடங்களிலும் சேவகர் உண்டு என்பது எவ்வளவு உண்மை!

அதுமட்டுமா! நீயும் கூட ஒருவேளை தேவனுடைய சேவகராக இருக்கலாம் அல்லவா? தேவன் தம்முடைய பிள்ளை ஒருவருடைய தேவையை சந்திக்க உன்னை இன்று உபயோகப்படுத்தலாம் அல்லவா!

இந்த எபிரேய மொழியில் எழுதப்பட்ட பராமரித்தல் என்ற வார்த்தை என்னை சற்று ஆழ்மாகவே எடுத்து சென்றது. இந்த வார்த்தை வேதத்தில் நான்கு இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாவது இந்த இடத்தில் எலியாவை தங்க வைத்து, உணவு கொடுத்து, பராமரிக்கும்படி கட்டளையிட்ட இடம்.

இரண்டாவது நெகேமியா 9:21  தேவன் இஸ்ரவேல் மக்களை நாற்பது வருட காலம் வனாந்தரத்தில் ஒன்றுமே குறைவுபடாமல் பராமரித்து வந்ததை நெகேமியா நினைவு கூறும் இடம். அவர்கள் வஸ்திரம் பழையதாகவுமில்லை அவர்கள் கால் வீங்கிப் போகவுமில்லை. என்னைக் கேட்டால் அது மிகமிகப் பெரியதொரு பராமரிப்பு.

மூன்றாவது இடம்  சங்கீதம் 55:22 ல் தேவனுடைய பராமரிப்பை நம்மைவிட மிகவும் அதிகமாக அனுபவித்த தாவீது எழுதிய சங்கீதம். இதில் உன்னுடைய பாரங்களை கர்த்தர் மேல் வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார் என்று எழுதியுள்ளது. ஆதரிப்பார் என்ற வார்த்தை எபிரேய மொழியில் உள்ள பராமரிப்பார் என்பதே.

கடைசியாக நீதி 18:14 ல் மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் ( சரீரப் பிரகாரமான வலிகளையும் வேதனைகளையும்) தாங்கும் என்று தாவீதின் குமாரனாகிய சாலொமோன் எழுதுகிறதைப் பார்க்கிறோம். தாங்கும் என்ற அந்த வார்த்தையும் எபிரேய மொழியில் உள்ள பராமரிப்பு தான்.

இந்த பராமரிப்பு என்ற வார்த்தையைக் கொண்டு தேவனாகியக் கர்த்தர் எலியாவிடம் என்ன கூறியிருப்பார் என்று சிந்தித்துப் பார்த்தேன்! நீ தைரியத்தோடும் பெலத்தோடும் இரு,  இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் பராமரித்தது போல உன்னைப் பராமரிப்பேன். உன்னுடைய எல்லா பாரங்களையும் என்மேல் வைத்துவிடு நான் உன்னை ஆதரிப்பேன், உன்னுடைய சரீரத்தின் பலவீனத்தைத் தாங்கும் ஆவியை உனக்குத் தருவேன்!

இதனால்தான் வேதம் என்னை ஒவ்வொரு நாளும் ஆச்சரியப்படுத்துகிறது என்று கூறுகிறேன்!

நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே! நான் உன்னை பராமரிப்பேன் என்னும் கர்த்தரை எலியாவைப்போல் பற்றிக்கொள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment