1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.
இன்றைய வேதாகமப் பகுதியில் ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள் என்றதை சற்று உற்றுப் பார்த்தேன். அவள் பெயர் கொடுக்கப்படவில்லை, அவள் வயது கொடுக்கப்படவில்லை, அவள் எவ்வளவு காலம் விதவையாயிருந்தாள் என்று தெரியாது. அவள் சாறிபாத் என்ற ஊரில் வாழ்ந்தாள் என்றும், அவள் ஏழை என்றுமே நமக்குத் தெரியும்.
நாம் நேற்றைய தினம் படித்த 9ம் வசனத்தில் தேவன் அவளுக்குக் கட்டளையிட்டதாகக் கூறுகிறார். தேவன் எலியாவுக்கு அவளுடைய வீட்டில் இடம் கொடுக்குமாறு அவளுக்கு கட்டளையிட்டார். நிச்சயமாக அவள் தானாகவே முன்வந்து எலியாவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுடைய அந்நிய நாடாகிய இஸ்ரவேலின் தேவன் எலியாவை அவளுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளும்படியான கட்டளையைக் கொடுத்தார்.
இன்று நான் எலியாவைப் பற்றி சிந்திப்பதை விட விதவையான அந்த ஏழைப் பெண்ணைப் பற்றி சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த சம்பவம் முழுவதுமே எலியாவை மையமாகக் கொண்டதால் எந்த புத்தகமும், எந்த வேதாகம வல்லுநரும் இந்தப் பெண்ணைப் பற்றி பெரியதாக எதுவும் எழுதவில்லை. நாம் சற்று மேஜையைத் திருப்பிப் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு!
அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு முரட்டுத்தனமான மலை வாழ் மனிதன் வந்து நின்று அவளுடைய குடிசையில் வாழ வந்தால் அவளுக்கு எப்படியிருந்திருக்கும்? அவன் எவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருப்பான் என்று அவனுக்கேத் தெரியாது. அவளோ ஒரு விதவை என்று பார்க்கிறோம். அவளுடைய வேலையை, அவளுடைய நேரத்தை, அவளுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட கணவன் இப்பொழுது இல்லை. வயிற்றுப் பசியைப் போக்க விறகு பொறுக்க வேண்டிய நிலைமை!
ஆனால் நான் இந்தப் பெண்ணிடம் ஒரு துணிவைப் பார்க்க முடிந்தது. பாகால் வழிபாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பெண், வனத்தையும் பூமியையும் படைத்தவருடைய கட்டளையை ஏற்றுக் கொண்டாள். அவள் சுமந்த வேதனையையும், நிந்தையையும், வறுமையையும் நினைக்கும்போது அவள் நிலையில் நான் இருந்தால் தேவனுடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருப்பேனா என்று நினைத்துப் பார்த்தேன். இப்படிப்பட்ட வேதனையான நேரங்கள் அநேக பெண்களின் வாழ்வைத் தலைகீழாக மாற்றிவிடுகிறது அல்லவா!
அவள் வேதனையோடு,கணவனை இழந்த நிந்தையோடு வாழ்ந்த சமயம்தான் கர்த்தர் அவள் உள்ளத்தைத் தொட்டு தம்முடைய வார்த்தையால் அவள் உள்ளம் கொழுந்து விட்டு எரியச் செய்தார். அவள் தன் இல்லத்தையும், உள்ளத்தையும் எலியாவின் தேவனுக்குக் கொடுத்தாள். அந்த ற்புதத்தின் தேவன் இந்தப் பெண்ணுக்கு ஒரு புதிய உலகின் கதவைத் திறந்தார்.
சாறிபாத் விதவை நமக்குக் கொடுக்கும் செய்தி ஒரு நம்பிக்கையின் செய்தி!
இன்று இந்தப் பெண்ணைப் போல கர்த்தருடைய சத்தத்துக்கு இணங்கி உங்களில் யாராவது உங்களுடைய வீடுகளை தேவனுடைய பிள்ளைகளுக்குத் திறந்து, உங்கள் அப்பத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டு இருப்பீர்களானால், உங்களுக்கு ஒரு நற்செய்தி! சாறிபாத்தின் விதவையின் வறுமை, வெறுமை நிறைந்த வாழ்வு கனிதரும் வாழ்வாக மாறிற்று என்று வேதம் சொல்கிறது!
இந்த அற்புதம் இன்று உன் வாழ்க்கையிலும் நடக்கக் கூடும்! உன் வாழ்வும் மலரும் கனிதரும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
